தமிழ் விடு தூது
மதுரை சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி தமிழை அவர்பால் தூதாக அனுப்புவது போலப் பாடப்பட்டுள்ளது தமிழ் விடு தூது. இதனைப் பாடிய புலவர் பெயர் தெரியவில்லை.
சிறப்பு
1. சிவபெருமான் ஆட்சி செய்யும் மதுரையில் தமிழ்ச் சங்கப் புலவராக இருந்தவரும்,
2. பல திசைகளில் சென்று வெற்றியை நிலைநாட்டிய பெண்ணரசியும்,
3. ஒருமுறை சிவாகமப் பொருளை சிவனுணர்த்த பார்வதியார் பாராமுகமாக இருந்தார். அதனால் வெகுண்ட சிவன் பார்வதியை வலைஞர் மகளாகப் பிறக்கும்படி சபித்தார், புதல்வன் விநாயகரோ அந்தச் சிவாகமத் தொகுதியைக் கடலில் எறியக் கையில் எடுத்தார். தாய்ப்பாசம் மிக்க அந்த விநாயரும்,
4. மதுரைச் சங்கப் புலவர்கள் முன் உருத்திரசன்மனாகத் தோன்றி தமிழ் நூல் சிறப்பை உரைத்த வேல் படையை உடைய முருகப் பெருமானும்,
5. பார்வதி தேவி ஊட்டிய அமுதத்தால் மூன்று வயதில் வடமொழி மற்றும் தென்மொழி நூல்களைக் கற்றுணர்ந்த திருஞானசம்பந்தரும்
6. முதலை உண்ட சிறுவனை சிவபெருமானிடம் கவி பாடிப் பெற்ற சுந்தரரும்,
7. பிரமனாலும் திருமாலாலும் காண முடியாத இறைவனடியைத் திருநல்லூரில் பெற்ற திருநாவுக்கரசரும்,
8. பொய்யுரைத்ததனால் தாழம்பூவைச் சூடாதவராகிய சிவபெருமானைத் தம் பாடலைப் பட்டோலையில் எழுதிக் கொள்ள செய்யத மாணிக்கவாசகரும்
9. இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழின் இலக்கணத்தை இயற்றிய அகத்திய முனிவரும்,
10. தொல்காப்பியரும்,
11. உயிர்களைனத்தும் இறை வழிச் சேர 12 நூற்பாக்களால் சிவஞானபோதம் என்ற நூலை இயற்றிய மெய்கண்ட தேவரும்
12. தவறில்லாத பாடல்களைக் கொடுத்தருளிய திருவிசைப்பாவைப் பாடிய திருமாளிகைத் தேவர் முதலிய முனிவர்களும்,
13. உயிர்களைச் சாரும் வினைகளை அகற்ற திருமந்திரம் அளித்த திருமூலரும்
14. பொய்யும் அடிமைத்தனமும் அற்ற புலவரெனப் போற்றப்படும் நக்கீரர் முதலான சங்கப் புலவர்களும்,
15. ஐயடிகள் காடவர்கோனும்
16. செம்மையான சொற்களை உடைய கழற்றறிவாரும்,
17. தெய்வமொழிப் பாவலரான திருவள்ளுவரும்,
எல்லோருமாக தமிழே இருந்தது. எனவேதான் அவர்கள் தமிழுருவம் பெற்றனர்.
கல்லாதவர்க்குச் சிங்கமெனத் தமிழ் விளங்கியது.
நூல், பா, கலை, செந்தமிழ், செய்யுள்
பஞ்சினால் நூற்கப்படாத நூல் (புத்தகம்)! பலரால் நெருடப்படாத பா (பாடல்)! எஞ்சிய அழுக்கேறாத ஆடை (நூல்வகை) ! உயர்ந்த நிறம் குறையாத செழுந்தமிழ் ! புலவர்களின் உள்ளம் வருந்தாமல் சொல்லால் விளையும் விளை நிலம் (செய்யுள்)!
இவ்வாறு போற்றப்படும் தமிழ் ஒரு குலத்திலும் தோன்றவில்லை. என்றாலும் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, மருட்பா என்ற ஐந்து குலம் அதற்கு உண்டு.
பிறப்பு
· உந்தியில் காற்று தங்கி பின் வாக்கு என்ற கருப்பமாக மாறி,
· தலை, கழுத்து, மூக்கு, மார்பு என்ற நான்கு இடத்தைச் சார்ந்து,
· உதடு, நாக்கு, பல், மேல்வாய் என்ற நான்கு கருவிகளால் வடிவம் பெற்று,
· தலையிலிருந்து மீண்டு முதலெழுத்து 30 ஆகவும், சார்பெழுத்து 240 ஆகவும் தமிழ் பிறந்தது.
வளர்ச்சி
· எண் முதலிய 12 பருவங்களை உடையதாய் தமிழ் வளரந்தது.
· அறம், பொருள், இன்பம் என்ற மூன்று பாலும் ஊட்ட தமிழ் நன்கு வளர்ந்தது.
· அக்காலத்தில் பள்ளிக் கூடத்திற்குச் செல்லும் குழந்தைகள் நூல்களை இட்டுத் தூக்கப் பயன்படும் பலகையான அசை என்னும் தொட்டிலில் உன்னைக் கிடத்தித் தமி நாவினை அசைத்துப் பயிலுகின்றனர். அது குழந்தையினைத் தொட்டிலில் கிடத்தித் தாலாட்டுவதைப் போலுள்ளது.
· குழந்தைக்கு மஞ்சள் குளிப்பாட்டுதலும், மை பூசுதலும் மரபு. சுவடியைப் படிக்கத் தொடங்கும் போது மஞ்சள் பூசுதல் இயல்பு. எழுத்துகள் நன்றாகத் தெரியும் பொருட்டு மையைப் பூசுதலும் இயல்பு.
· குழந்தைக்குத் தரும் முப்பாலைப் போலவே தமிழும் அறம் பொருள் இன்பம் என்ற முப்பாலைப் பெற்று வளர்ந்தது.
· பத்துப் பருவம் இட்டுப் பிள்ளைத் தமிழ் பாடி வளர்ந்த தமிழை வளர்க்க யாராலும் இயலாது.
மாப்பிள்ளையான தமிழ்
· இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் ஆகிய செய்யுள் ஈட்டச்சொற்கள் நான்கும்; பெயர், வினை, இடை, உரி ஆகிய செந்தமிழ்ச் சொற்கள் நான்கும்; அகத்திணைகள் ஏழும்; புறத்திணைகள் ஏழும்; யாப்புகள் எட்டும்; அணிகள் முப்பத்தைந்தும் கொண்ட மிக்க அழகுடைய மாப்பிள்ளையாய் தமிழ் திகழ்கின்றது.
· செப்பல் பண், அகவல் பண், துள்ளல் பண், தூங்கல் பண் ஆகிய பண்கள் பட்டத்துப் பெண்களாக உள்ளனர்.
· ஐந்து வகை இசைக் கருவிகள் வெளியிடும் 103 பண்கள் பின்னர் மணந்த பாவையராக உள்ளனர்.
· வீரம், அச்சம், இழிப்பு, வியப்பு, காமம், அவலம், நகை, நடுவுநிலை, உருத்திரம் ஆகிய ஒன்பது சுவைகள் தமிழின் குழந்தைகள் ஆவர்.
இவ்வாறு நாடகமாகிய மனைவியுடன் கொலுவில் வீற்றிருக்கும் தமிழ்மொழியின் சிறப்புகள் கூறப்படுகின்றன.
தமிழின் அரசாட்சி
பெரும் காப்பிய இலக்கியத்திற்குரிய 18 வருணனைகளை வாழ்வாகக் கொண்டு தமிழ் மகிழ்ந்தது. வையை ஆற்றில் பெருகி வந்த நீரைத் தடுக்க மண் சுமந்த சிவபெருமானை அடித்த பாண்டிய மன்னன் பிரம்பைத் தமிழ்த் தன் செங்கோலாகக் கொண்டது. திசைச் சொற்கள் ஆகிய தமிழ் நீங்கிய 17 மொழிகளும் உன் சிற்றரசர்கள் ஆவர். எட்டுத் திசைகளுடன் மேல் கீழ் இடங்களும் சேர்த்த பத்துத் திசையுள்ளும் தமிழின் செங்கோல் செல்லாத திசையில்லை.
Comments
Post a Comment