திணை வாழ்வியல் கோட்பாடு
திணை வாழ்வியல்
சங்க இலக்கியம் அகம் புறம் என்று இரு பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. சங்க தமிழரின் வாழ்வியலும் அவ்வாறே படம் எடுத்து பாடல்களின் வழியாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
சங்கத்தமிழரின் திணை வாழ்க்கை இருபெரும்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு இருந்தன. அவை, அகத்திணை, புறத்திணை என்பதாகும். மக்களின் களவு மற்றும் கற்பு வாழ்க்கை அகத்திணையாகவும், வீரம், பண்பு ஆகியவை புறத்திணையாகவும் பிரிக்கப்பட்டு இருந்தன. காதலும் வீரமும் அவர்தம் வாழ்க்கையின் இருகண்களாகப் போற்றப்பட்டன என்பதை இதன்கண் அறியலாம்.
அகத்திணை வாழ்வியல்
தாம் வாழும் நிலத்திற்கு ஏற்ப மக்களின் வாழ்க்கை முறையும் பண்பாடும் நாகரிகமும் அமையும் என்பது தமிழரின் தலைசிறந்த கொள்கை. இந்நிலங்களுக்குக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று பெயரிட்டுள்ளனர். இவ்வைந்து நிலத்தின் பாகுபாடுகளே அகத்திணை என்று அழைக்கப்படுகின்றது. திணை என்னும் சொல் நிலத்தை மட்டுமன்றி, நிலத்தின் அமைப்பு, அங்கு வாழும் மக்களின் இயல்பு, அங்கு உயிர் வாழகின்ற விலங்குகள், பறவைகள், செடி கொடிகள் மரங்கள், மக்கள் வழிபட்ட தெய்வங்கள் ஆகிய யாவற்றையும் குறிக்கின்றது.
சங்க கால மக்கள் இந்த ஐந்திணைகளின் அடிப்படையில் தங்கள் வாழ்க்கையை வடிவமைத்துக் கொண்டனர். இடமும் காலமும் அத்திணைகளுக்குரிய முதற்பொருளாகவும், நிலத்தைச் சுற்றியுள்ள இயற்கைப் பொருட்களைக் கருப்பொருளாகவும், தங்கள் வாழ்க்கையின் அமைப்பைக் கூறும் செய்திகளை உரிப்பொருளாகவும் வகுத்துக் கொண்டனர்.
ஐந்திணை வாழ்க்கை
தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே திணைகள் வழக்கில் இருந்துள்ளன. தொல்காப்பியப் பொருள் இலக்கணம் தோன்றுவதற்கு முன்பே மக்கள் தமக்கென்று ஒழுங்கு விதிகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தனர் என்பதும், அவ்வாழ்க்கையில் நன்கு வளர்ச்சியும் வளமும் பெற்றிருந்தனர் என்பதும், அவ் வாழ்க்கையை விளக்கிக் காட்டும் அளவுக்குத் தமிழரிடையே இலக்கிய வளம் நிரம்பி இருக்க வேண்டும் என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.
ஐந்திணைகளுக்குரிய முதற்பொருள்
நிலமும் பொழுதும் முதற்பொருளாகும். நிலம் ஐவகையாகப் பிரிக்கப்பட்டது போல பொழுதும் சிறுபொழுது, பெரும்பொழுது என இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டது. ஒருநாளின் ஆறு பகுதிகள் சிறுபொழுது என்றும், ஒரு ஆண்டின் ஆறு பகுதிகளைப் பெரும்பொழுது என்றும் வகுத்துள்ளனர்.
சிறுபொழுது நேரம்
காலை காலை 6 மணி முதல் 10 மணி வரை
நண்பகல் காலை 10 மணி முதல் பிறபகல் 2 மணிவரை
எற்பாடு பிற்பகல் 2 மணிமுதல் மாலை 6 மணிவரை
மாலை மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை
யாமம் இரவு 10 மணி முதல் இரவு 2 மணி வரை
வைகறை இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை
பெரும்பொழுது மாதங்கள்
கார்காலம் ஆவணி, புரட்டாசி
குளிர்காலம் ஐப்பசி, கார்த்திகை
முன்பின்காலம் மார்கழி, தை
பின்பனிக்காலம் மாசி, பங்குனி
இளவேனிற்காலம் சித்திரை, வைகாசி
முதுவேனிற்காலம் ஆனி, ஆடி
ஐந்திணைகளுக்குரிய நிலங்கள்
திணை இடம்
குறிஞ்சி மலையும் மலை சார்ந்த இடமும்
முல்லை காடும் காடு சார்ந்த இடமும்
மருதம் வயலும் வயல் சார்ந்த இடமும்
நெய்தல் கடலும் கடல் சார்ந்த இடமும்
பாலை குறிஞ்சியும் முல்லையும் தன் இயல்பில் இருந்து மாற்றம் பெற்ற நிலம்
ஐந்திணைகளுக்குரிய பொழுதுகள்
திணை சிறுபொழுது பெரும்பொழுது
குறிஞ்சி யாமம் குளிர்காலம், முன்பனிக்காலம்
முல்லை மாலை கார்காலம்
மருதம் வைகறை ஆறு பெரும்பாழுதுகள்
நெய்தல் எற்பாடு ஆறு பெரும்பொழுதுகள்
பாலை நண்பகல் இளவேனில், முதுவேனில், பின்பனி
கருப்பொருள்கள்
சங்க கால மக்கள் கருப்பொருட்களை 13 வகையாகப் பிரித்துள்ளனர். அவை, தெய்வம், மக்கள், உணவு, விலங்கு, பூ, மரம், பறவை, ஊர், நீர், பறை, யாழ், பண், தொழில் ஆகியனவாகும். ஐந்திணைகளுக்குரிய கருப்பொருட்களைப் பின்வருமாறு காணலாம்.
குறிஞ்சிக்குரிய கருப்பொருட்கள்
1 தெய்வம் முருகன்
2 மக்கள் குறவன், குறத்தி
3 உணவு தினை, மலைநெல்
4 விலங்கு புலி, கரடி, சிங்கம்
5 பூ குறிஞ்சி, காந்தள்
6 மரம் அகில், வேங்கை
7 பறவை கிளி, மயில்
8 ஊர் சிறுகுடி
9 நீர் அருவி நீர், சுனை நீர்
10 பறை தொண்டகப்பறை
11 யாழ் குறிஞ்சி யாழ்
12 பண் குறிஞ்சிப்பண்
13 தொழில் தேன் எடுத்தல், கிழங்கு அகழ்தல்
முல்லைக்குரிய கருப்பொருட்கள்
1 தெய்வம் திருமால்
2 மக்கள் ஆயர், ஆய்ச்சியர்
3 உணவு வரகு, சாமை
4 விலங்கு முயல், மான்
5 பூ முல்லை, தோன்றி
6 மரம் கொன்றை, காயா
7 பறவை காட்டுக்கோழி, மயில்
8 ஊர் பாடி, சேரி
9 நீர் காட்டாறு
10 பறை ஏறுகோட்பறை
11 யாழ் முல்லை யாழ்
12 பண் முல்லைப்பண்
13 தொழில் ஏறு தழுவுதல், ஆநிரை மேய்த்தல்
மருதத்திற்குரிய கருப்பொருட்கள்
1 தெய்வம் இந்திரன்
2 மக்கள் உழவர், உழத்தியர்
3 உணவு செந்நெல், வெண்ணெல்
4 விலங்கு எருமை, நீர்நாய்
5 பூ செங்கழுநீர், தாமரை
6 மரம் காஞ்சி, மருதம்
7 பறவை அன்னம், நாரை
8 ஊர் பேரூர், மூதூர்
9 நீர் மனைக்கிணறு, பொய்கை
10 பறை நெல்லரிகிணை
11 யாழ் மருத யாழ்
12 பண் மருதப்பண்
13 தொழில் நெல் விதைத்தல், களை பறித்தல்
நெய்தலுக்குரிய கருப்பொருட்கள்
1 தெய்வம் வருணன்
2 மக்கள் பரதர், பரத்தியர்
3 உணவு மீன்
4 விலங்கு முதலை, சுறா
5 பூ தாழை, நெய்தல்
6 மரம் புன்னை, ஞாழல்
7 பறவை கடற்காகம்
8 ஊர் பட்டினம், பாக்கம்
9 நீர் மணற்கிணறு, உவர்க்கழி
10 பறை மீன்கோட்பறை
11 யாழ் விளரியாழ்
12 பண் செவ்வழிப்பண்
13 தொழில் மீன் பிடித்தல், உப்பு விளைத்தல்
பாலைக்குரிய கருப்பொருட்கள்
1 தெய்வம் கொற்றவை
2 மக்கள் எயினர், எயிற்றியர்
3 உணவு களவு செய்வதன் மூலம் கிடைக்கும் பொருள்கள்
4 விலங்கு வலிமை இழந்த யானை
5 பூ குரவம், பாதிரி
6 மரம் இலுப்பை, பாலை
7 பறவை புறா, பருந்து
8 ஊர் குறும்பு
9 நீர் வற்றிய சுனை, கிணறு
10 பறை துடி
11 யாழ் பாலையாழ்
12 பண் பஞ்சுரப்பண்
13 தொழில் வழிப்பறி செய்தல்
உரிப்பொருள்
மக்களின் வாழ்க்கை முறையை உரிப்பொருள் என்று கூறலாம். ஒவ்வொரு நிலத்தின் தன்மையின் அடிப்படையிலும், அவர்களின் தொழில் சார்ந்தும் உரிப்பொருள் வரையறுக்கப்பட்டுள்ளன.
திணை உரிப்பொருள்
குறிஞ்சி புணர்தலும் புணர்தல் நிமித்தமும்
முல்லை இருத்தலும் இருத்தல் நிமித்தமும்
மருதம் ஊடலும் ஊடல் நிமித்தமும்
நெய்தல் இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
பாலை பிரிதலும் பிரிதல் நிமித்தமும்
புறத்திணை வாழ்வியல்
அகத்திணை ஐந்தாகப் பிரிக்கப்பட்டது போல், புறத்திணை பன்னிரண்டாக வகுக்கப்பட்டுள்ளது. மக்களின் புற வாழ்க்கையும், மன்னர்களின் போர் வாழ்க்கையும் புறத்திணைகளாகக் கொள்ளப்பட்டுள்ளன. அவை,
• வெட்சி – ஆநிரை கவர்தல்
• கரந்தை – ஆநிரை மீட்டல்
• வஞ்சி – நாட்டைக் கைப்பற்ற முயற்சி செய்தல்
• காஞ்சி - நாட்டைக் கைப்பற்றும் முயற்சியைத் தடுத்தல்
• நொச்சி – மதிலைக் காத்தல்
• உழிஞை – மதிலை வளைத்தல்
• தும்பை – எதிர்நின்று போர் புரிதல்
• வாகை – வெற்றி சூடுதல்
• பாடாண் – மன்னனின் வீரம், புகழ் ஆகியவற்றைப் பாடுவது
• பொதுவியல் – வெட்சி முதல் பாடாண் வரை சொல்லப்படாத, விடுபட்ட கருத்துகளைக் கூறுவது
• கைக்கிளை – ஒருதலைக் காமம்
• பெருந்திணை – பொருந்தாக்காமம்
இவ்வாறு சங்க பாடல்களைத் தெரிந்து கொள்ள திணையடிப்படையில் தங்கள் வாழ்க்கையை வடிவமைத்துக் கொண்டு, இயற்கையோடு இயைந்து வாழ்ந்து, உலகுக்கு நாகரிகத்தையும், பண்பாட்டையும் கற்றுத் தந்தவன் தமிழன் என்பதில் பெருமிதம் கொள்ளலாம்.
Comments
Post a Comment