தமிழ்ப்படைப்பிலக்கிய வெளியில் விரியும் பெண்ணுலகம்

முன்னுரை நீண்ட, நெடிய வரலாற்றைக் கொண்ட இலக்கிய, இலக்கண வடிவங்களில் செம்மாந்த, செழுமையைப் பெற்ற மொழியாக தமிழ் மொழி விளங்குகிறது. அவ்வகையில் தமிழ் மொழியின் நீண்ட, நெடிய பயணத்தில், பெண்கள் கடந்து வந்த பாதைகளை, எதிர்கொண்ட சவால்களைப் பெண் படைப்பாளர்களின் வழி ஆராயும் நோக்கில் இக்கட்டுரை ‘தமிழ்ப் படைப்பிலக்கிய வெளியில் விரியும் பெண்ணுலகம்’ என்னும் தலைப்பில் அமைந்துள்ளது. படைப்பிலக்கியம் அகத்தூண்டலால் உருவாகும் இலக்கியங்கள் மனித வாழ்க்கையை மையப்படுத்தி, கற்பனைக்கு விருந்தாகி, எண்ணத்தின் எழுச்சியாய், உணர்வின் மலர்ச்சியாய், இன்புறுதல், அறிவுறுத்துதல், ஆற்றலைப் பெருக்குதல் என்னும் பண்பினை உடையவை. உளவியல் அறிஞர் பிராய்ட், ‘மனிதனின் உணர்வுகள், சிந்தனைகளை வெளிப்படுத்தும் ஒரு கருவியாக இலக்கியங்கள் திகழ்கின்றன’ என்று கூறுகிறார். இலக்கியங்கள் படைப்பாளர்களின் அக எழுச்சியைச் சார்ந்தே ஆக்கம் பெறுகின்றன. படைப்பாளர்கள் பின்பற்றும் கோட்பாடுகளின் தாக்கம் அவர்களின் படைப்புகளில் மேலோங்கிக் காணப்படுகின்றன. அவ்வகையில் இலக்கிய வடிவங்களில் பெண்ணியம் பேசும் இலக்கியங்கள் தனக்கென்று தனிமுத்திரை பதித்து வருகின்றன. பெண் நடை, பெண் மொழி, உடல் மொழி என்று பெண் படைப்பாளர்கள் தங்களுக்கான தனித்த வெளியில், பல்வேறு உத்திகளைக் கொண்டு இலக்கியங்களைப் படைத்து வருகின்றனர். பெண் படைப்பாளர்கள் தங்களுக்கான வெளியில் தங்களைக் குறித்து ஆக்கப்படும் பெண் இலக்கியங்கள் தனித்துவமானவை. அப்பெண் படைப்பாளர்களின் பெண் மையச் சிந்தனைகளைத் தொகுத்து, தனித் தன்மையை ஆராய்ந்து, வெளிப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். மேலும் பெண்களைப் பெண் படைப்பாளர்கள் தங்களுடைய புனைவுகளில் எவ்வாறு காட்சிப்படுத்தியுள்ளனர் என்பதையும் இக்கட்டுரை வெளிப்படுத்தும். பெண்ணிய அணுகுமுறை இலக்கியங்கள் சமுதாயத்தின் நாகரிகம், பண்பாடு, கலை, கலாச்சாரம், அரசியல், சமயம் முதலியனவற்றை வெளிப்படுத்தும் நோக்கில் ஆக்கம் பெறுகின்றன. மக்களின் உள்ளத்தைப் படம்பிடித்து காட்டும் தன்மை உடையவை. அவ்வகையில் தமிழ் இலக்கியங்கள் காலத் தொன்மையும் வளர் புதுமையும் கொண்டவை. தமிழ் இலக்கியங்கள் இயல், இசை, நாடகம் போற்றி, நுண்ணிதின் உணர்ந்து மகிழும் தன்மையுடைய நுண்கலைகளைத் தாங்கி நிற்கின்றன. தமிழர்களின் தொல் வாழ்வியல், கலாச்சாரம், பண்பாடு, சமூக நிலை முதலியவற்றை நாட்டுப்புற இலக்கியம் தொடங்கி தற்கால இலக்கியம் வரை அந்தந்தக் கால சமுதாய நிலைகளை இலக்கியங்கள் பாங்குற புலப்படுத்துகின்றன. தமிழில் கிடைக்கப்பெற்ற நூல்களுள் முதன்மை இலக்கியமாய்ப் போற்றப்படும் சங்க இலக்கியங்கள் தமிழரின் உயர் நாகரிகத்தின் அடையாளம் ஆகும். சங்க இலக்கியம் தொடங்கி காப்பியங்கள், பக்திப்பாக்கள், சிற்றிலக்கியங்கள், உரைநடை, நாடகம், புதினம், சிறுகதை, புதுக்கவிதை என்று பன்முக இலக்கிய வடிவங்களை, காலத்திற்கு ஏற்ற கருத்தாக்கங்களைக் கொண்ட மொழியாய்த் தமிழ் மொழியை மொழி வரலாற்று ஆய்வுகள் சுட்டுகின்றன. தமிழ் இலக்கியங்களில் பெண்ணியம் பேசும் இலக்கியங்கள் தனக்கென்று தனிமுத்திரை பதித்து வருகின்றன. பெண் படைப்பாளர்கள் தங்களுக்கான வெளியில் தங்களைக் குறித்து ஆக்கப்படும் பெண் இலக்கியங்கள் தனித்துவமானவை. சங்க காலம் தொட்டு தற்கால இலக்கிய வடிவம் வரை பெண்ணியம் பேசும் இலக்கியங்கள் தனிமுத்திரை பதித்து வருகின்றன. பெண் நடை, பெண் மொழி, உடல் மொழி என்று பெண் படைப்பாளர்கள் தங்களுக்கான தனித்த வெளியில், பல்வேறு உத்திகளில் இலக்கியங்களைப் படைத்து வருகின்றனர். சங்கப் பெண்பாற் புலவர்களான ஔவையார், காக்கைபாடினியார், வெள்ளிவீதியார், பாரி மகளிர் முதலியோர் சங்கப் பாடல்கள் வாயிலாகத் தம் உளக் கிடக்கைகளை வெளிப்படுத்தினர். பக்தி இலக்கியங்களில் காரைக்கால் அம்மையும் கோதை நாச்சியாரும் தெய்வத்தமிழை வளர்த்தனர். பின்னர் வை. மு. கோதைநாயகி தொடங்கி, இக்கால இலக்கிய வடிவங்களில் பெண்ணிய வெளியில் பல்வேறு படைப்புகளை பெண்கள் உருவாக்கினர். அம்பை, ஆண்டாள் பிரியதர்ஷினி, அனுராதா ரமணன், சுகிர்தராணி, சு.தமிழச்சி, தாமரை என்று கதை, கவிதை, உரைநடை என்று பன்முக இலக்கிய வடிவங்களில், பன்முக உத்திகளில் பெண் மையச் சிந்தனைகளைப் பெண் படைப்பாளர்கள் திறம்பட வெளிப்படுத்தி வருகின்றனர். பெண்களுக்கானப் புனைவுகளில் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், கனடா உள்ளிட்ட நாட்டில் உள்ள தமிழ் இலக்கியங்களையும் உள்ளடக்கி, தமிழ் இலக்கியத் தடத்தில் பெண்கள் கடந்து வந்த பாதைகளை, எதிர்கொண்ட சவால்களைப் பெண் படைப்பாளர்களின் வழி வெளிப்படுத்தும் நோக்கில் இக்கட்டுரை அமைகிறது. ஆண் பெண் பாலினச் சமத்துவத்தை முன்னிலைப் படுத்தும் வகையில் தமிழ் இலக்கிய வரலாற்றை ஆராய்கையில் பெண் எழுத்து என்பது இரண்டாம் நிலையாக முற்றிலும் அந்நியப் பட்ட நிலையையே காண முடியும். பெண்ணிய ஆய்வுகள் சங்க காலம் தொடங்கி இன்று வரை இலக்கியங்களில் பெண்களின் பதிவுகளைக் குறித்த ஆய்வுகள் என்பது பெண்ணியக் கோட்பாடு தோன்றிய நாளிலிருந்து முகிழ்ந்த வண்ணம் உள்ளன. பெண் எழுத்துக்களில் வெளிப்படும் பெண்மொழி என்பது அடுத்தக்கட்ட ஆய்வுகளங்களாகத் தான் முன்னிறுத்தப்பட்டுள்ளன. காரணம் பெண் எழுத்துக்கள் என்பவை இலக்கியங்களில் விரல்விட்டு எண்ணத்தக்க நிலையிலே உள்ளன. இன்றைய காலத்தில் பெண் எழுத்துக்கள் குறிப்பிடத்தக்க வளர்ச்சி நிலையைக் கண்டுள்ளன. தமிழ் இலக்கியப் பரப்பில் பெண் எழுத்துகள் குறித்த பதிவுகள் - பெண்களால் எழுதப்பட்ட இலக்கியப் பதிவுகள் சமீபகாலமாகப் பெண்ணிய ஆய்வுகளால் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன. சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், இன்றைய படைப்பிலக்கியம் என மிகவும் குறுகிய இலக்கிய வகைகளுக்குள் மட்டுமே பெண்களின் படைப்பாளுமையைத் தமிழ் இலக்கியச் சூழலில் அவதானிக்கமுடிகிறது. சங்க இலக்கியப் பெண்பாற்புலவர்கள் என வரையறுத்துரைக்கும் நிலையில் பெண்களின் படைப்புகள் சங்க இலக்கியத்தில் கண்ணுற முடிகிறது. பக்தி இலக்கியத்தில் ஆண்டாள், காரைக்கால் அம்மையார் எனச் சைவ, வைண இலக்கியப் படைப்புகளுக்கு என ஒருவரைச் சுட்டும் நிலை, இடைக்காலக் காப்பிய வரலாற்றில் கதாபாத்திரங்கள் மட்டுமே பெண்களை முன்னிறுத்தி அமைய, படைப்பாளுமை என்பது கேள்விக்குரியே. பிற்காலச் சிற்றிலக்கியங்களிலோ நீர்த்துப்போன நிலை. இருபதாம் நூற்றாண்டில் கவிதை, புனைகதை போன்ற படைப்பிலக்கியங்களில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைப் பெண்கள் முன்னெடுத்து வருகின்றனர் என்றே கூறலாம். சங்க இலக்கியப் பெண்பாற்புலவர்கள் அகநானூற்றில் 9 புலவர்களும் குறுந்தொகையில் 13 புலவர்களும் நற்றிணையில் 9 புலவர்களும் புறநானூற்றில் 15 புலவர்களும் பதிற்றுப்பத்தில் ஒரு புலவரும் எனப் பெண்பாற் புலவர்கள் சங்க இலக்கியத்தில் பாடல்கள் இயற்றியதாகச் சங்க இலக்கிய ஆராய்ச்சி அட்டவணையில் ந.சஞ்சீவி குறிப்பிட்டுள்ளார். பெண்பாற் புலவர்களில் ஔவையார் 59 பாடல்கள் பாடியுள்ளார். ஔவைக்குப் பிறகு அதிகப் பாடல்களைப் பாடியதாக அறியப்படுபவர் வெள்ளிவீதியார். 67 புறப்பாடல்களைப் பெண்பாற் புலவர்கள் இயற்றியுள்ளனர். அகப்பொருளில் அமைந்த பாடல்களில் 87 பாடல்களைப் பெண்பாற்புலவர்கள் இயற்றியுள்ளனர். பத்துப்பாட்டுள் பெண்பாற் புலவர்கள் இல்லை என்று ஒருசாரார் கூறுவர். சிலர், பொருநராற்றுப்படை பாடிய முடத்தாமக்கண்ணியாரைப் பெண்பாற்புலவராகக் கருதுவர். இது ஆய்விக்குரியது. முடத்தாமக்கண்ணியார் பெண் என்று அவருடைய மொழியை ஆராய்ந்து பெண்மொழி அதில் ஊடாடுவதாக ஆராய்ந்து நிறுவியுள்ளதையும் இங்கு இணைத்தெண்ண வேண்டும். வெறிபாடிய காமக்கண்ணியார் என்ற பெயர் கொண்ட பெண்பாற்புலவர். அந்தப் பெயரின் அடையைப் போன்ற காமக்கண்ணியார் என்ற ஒட்டுநிலையைக் காணுகையில் முடத்தாமக் கண்ணியார் என்பதையும் பெண்பாற்புலவராக எண்ண இடமுள்ளது. எட்டுத்தொகை நூல்களுள் ஐங்குறுநூற்றிலும் கற்றோர் ஏத்தும் கலித்தொகையிலும் பரிபாடலிலும் பெண்பாற்புலவர்கள் எந்த ஒரு பாடலும் இடம்பெறவில்லை என்பது சுட்டத்தக்கது. காலந்தோறும் பெண் எழுத்து சங்க காலத்திற்குப் பிறகு பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் தோன்றிய சங்கம் மருவிய காலத்தில் பெண்களை எழுத்துக்களை ஆய்வது கேள்விக்குரிய விடயம். நீதி நூல்களை எடுத்துரைக்கும் இவற்றில் பெண்களுக்கான நீதி கல்வி இலக்கிய தரத்தில் வெளிப்படாதது சிந்திக்கத் தக்கது. சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்களில் முதன்மை கதை மாந்தர்களான கண்ணகி, மாதவி, மணிமேகலை முதலிய பெண் பாத்திரங்கள் விளங்கினர். ஆனால் ஆண் மையச் சமூகத்தில் பெண் மொழியைக் கட்டமைக்க முயற்சிக்கவில்லை. காப்பியங்களான பேரிலக்கியங்களை இயற்றுவதில் திராணியற்ற நிலையிலே பெண் கவிஞர் இருந்தனர் என்பதையே இவை படம்பிடித்துக் காட்டுகின்றன. அக்கால கல்வி சூழலும் இதற்கு காரணமாக கூறலாம். சங்க காலத்தில் பெண்களுக்கான படைப்புச் சுதந்திரம் இருந்ததற்கான சான்றுகள் பெண்களின் படைப்புகளைக் கொண்டு காணலாம். அதற்கு அடுத்த காலகட்டங்களான நீதி நூல்களிலும் காப்பியங்களிலும் சிற்றிலக்கியங்களிலும் பெண் படைப்புகள் எழாதது இலக்கிய உலகில் இன்றளவும் கேள்வியாகவே உள்ளது. பக்தி இலக்கிய காலமான கி.பி 5 ஆம் நூற்றாண்டில் சைவ சமயத்திற்கு காரைக்கால் அம்மையாரும் வைணவ சமயத்திற்கு ஆண்டாளும் தோன்றி பெண் எழுத்துக்கான பதிவைச் செய்தவர்களாக விளங்கியது விதி விலக்கு என்றே கூறலாம். பெண்மொழியும் வெளியும் பெண்மொழி கவிதையில் தனியாக அடையாளப்படுத்த, சில தெளிவுகளும் அதற்கான கோட்பாடுகளும் உருவாக வேண்டியிருக்கிறது. பெண் பாலுறுப்பைக் குறிக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்தினால் பெண்மொழி உருவாகிவிடாது. பெண்மொழி என்பது அரசியல், பெண்ணுறுப்பைப் பற்றியும், பெண் உடலைப் பற்றியும் பேசுவதுடன், மொழி மற்றும் சமூக நிறுவன வெளிகளில் உருவாக்கப்பட்டுள்ள அவளுக்கெதிரான கருத்தாக்கங்களையும் மதிப்பீடுகளையும் சிதைப்பதும், அவற்றின் வன்முறைக் கெதிரான குரலெழுப்புவதும் தான் பெண்ணின் மாற்று அரசியல். ஆண்மைய மொழிக் கலாச்சாரத்தின் அகப்புற வெளி எல்லைகளை மீறி மொழிக்குள் இயக்குவதன் மூலம் பெண் மொழியை உருவாக்க முடியும் என்கிறார் மாலதி மைத்திரி (மாலதி மைத்திரி, காலச்சுவடு, ஆகஸ்டு 2004, ப.56). பெண் கல்வியில் ஏற்பட்ட மறுமலர்ச்சி பெண்ணிய சிந்தனையை எழுத்துக்களில் பதிவு செய்ய பெண் மொழி உயிர்ப்பு பெற்றது என்று கூறலாம். மேற்கத்திய இலக்கியத் தாக்கம் தமிழ் சமூகத்தில் ஏற்படுத்திய படைப்பிலக்கியங்களான சிறுகதை, நாவல், கவிதை போன்ற நவீன இலக்கியம் பெண் மொழிக்கான தளத்தை விரிவுபடுத்தி தந்துள்ளது என்றால் அது மிகை அல்ல. சான்றாக கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினியின் உக்கிரம் மிகப்பெரிது. எதையும் சொல் வன்மையுடன் திடமாய் சொல்பவர். அவரின் கவிதையொன்றில், “பாரதி மீண்டும் பிறக்க நீ தயார் என்றால் உன்னை சுமக்க என் கருப்பை தயார் “ என்கிறார். மற்றொரு கவிதையில், “பெண் ஓர் இல்லறத் துறவி பனிக்குட நீரே அவளின் அபிஷேக நீர் கருவறையே சாமி குடியிருக்கும் கருவறை தாய்ப்பாலே பாலாபிஷேகம் தொப்புள் கொடியே அவளுக்கான ருத்ராட்ச மாலை இல்லறமே அவளின் துறவறம் “ ஆண் துறவறம் கேட்டு எப்போது வேண்டுமானாலும் குடும்பத்தை நிர்கதியாய் பெண்ணின் தலை மேல் போட்டுவிட்டு உடுத்திய உடையுடன் சிறு பையுடன் இமயமலை நோக்கி சென்றுவிட முடிகிறது. ஆனால் பெண்ணுக்கோ இல்லறமே துறவறம்; அதுவே அவளின் நல்லறம் எனப் போதிக்கப்படுகிறது. இந்த அடக்குமுறையைதான் கவிஞர் இதில் வெளிப்படுத்துகிறார். மாலதி மைத்ரி ‘உண்மைக் கதை’ என்னும் கவிதையில், “நம் உறவின் பாலங்கள் என்னிடம் ஒற்றைபடையாகவும் உன்னிடம் இரட்டைபடையாகவும் பிரிந்துவிட என் கதை முளுமைஎன நானும் உன் கதை முளுமைஎன நீயும் சொல்லித் திரிய கேட்பவரின் வாயிலிருந்து கோழையாய் வழியும் வரிகள் உண்மைக் கதைகளாய் அச்சேறி ஊரெங்கும் விற்பனையாகிறது “ கணவன் மனைவி பிரிவு என்றால் ஊரே புறம் பேசும் என்பதை சுட்டுகிறார். எழுபதுகளிலும் எண்பதுகளிலும் கவிதைகள் பலவற்றிலும் பெண் கவிஞர்கள் குடும்ப வன்முறைகளுக்கு எதிர்ப்பு காட்டுவதைக் கடந்து வெளிவரவில்லை. அதை எதிர்த்தே கவிதை எழுதினார்கள். பெண் பாதுகாக்கப்படுபவள், சொன்னதைக் கேட்பவள், படுக்கை சுகம் தருபவள், பிள்ளைகளுடன் வாழ்பவள், வீட்டைப் பேணுபவள், தாய் என்னும் தெய்வ உருவம் உடையவள் என்னும் பொது தன்மையை அழிக்கவே பெண் படைப்பாளிகள் சிரமப்பட்டார்கள். அதன்பின் வந்த குட்டி ரேவதி, மாலதி மைத்ரி, லீலா மணிமேகலை, சுகிர்தராணி போன்றோர் உடல் மொழி கொண்டு கவிதை புனைந்து அதிரடியாக எதிர்த்தார்கள். பெண்ணின் தேகம், உறுப்புகள், அவளின் இச்சை போன்றவற்றை கவிதைக்குள் கொண்டு வந்தார்கள். இவ்வாறு சங்க கவிதையில் தொடங்கி நவீன இலக்கியம் வரையிலான இரண்டாயிர நூற்றாண்டு தமிழ்ச் சமூகத்தில் பெண்களுக்கான புலமைத் தளம் தொழிற்பட்ட பாங்கினை ஆராய்வதும் அதில் மறுக்கப்பட்ட பெண் சுதந்தரத்தை மீட்டெடுப்பதும் அவசியம். துணைநூற்பட்டியல் 1. சஞ்சீவி, ந., சங்க இலக்கிய ஆராய்ச்சி அட்டவணை, சென்னைப் பல்கலைக்கழகம், 1971. 2. காலச்சுவடு – ஆகஸ்டு இதழ், 2004. 3. பெண் வாசனை, ஆண்டாள் பிரியதர்ஷினி கவிதைகள், நியூ செஞ்சரி புக் ஹவுஸ் , 2012. 4. ச.விஜயலட்சுமி, பெண் எழுத்து களமும் அரசியலும், பாரதி புத்தகாலயம் 5. மாலதி மைத்ரேயி கவிதைகள், காவ்யா பதிப்பகம், 2006.

Comments

Popular posts from this blog

UGC NET TAMIL - TNPSC தமிழ் இலக்கிய வரலாறு தொடர்பான விரிவான வினாக்கள்

பல்லவர் கால இலக்கியங்கள் - பக்தி இலக்கியக் குறிப்புகள்

UGC Tamil TNPSC Tamil - பக்தி இலக்கிய வினாக்கள்