பக்தி இலக்கியம்
1. திருநாவுக்கரசர் தேவாரம்
திருமுனைப்பாடி நாட்டில் திருவாமூரில், வேளாளர் மரபில் புகழனாருக்கும் மாதினியார்க்கும் மகனாகப் பிறந்தார். பெற்றோரிட்ட பெயர் மருள்நீக்கியார். தமக்கையார் திலகவதியால் இளமை முதலே வளர்க்கப்பட்டார்.
சமண சமயத்தில் சேர்ந்து அச்சமய நூல்களை எல்லாம் கற்றுத் தேர்ந்து ‘தரும சேனர்’ என்ற பெயருடன் வாழ்ந்துவந்தார். ஒருசமயம் தருமசேனருக்குத் தீராத சூலைநோய் ஏற்பட, சமணர்கள் தம்மாலியன்ற மருத்துவத்தால் நோயைக் குணப்படுத்த முயற்சி செய்தனர். அதனாலும் நோய் தீராததால் திருவதிகைப் பெருமானை வேண்டி, தமக்கையார் திருநீறு அணிவித்தார். பின் வீரட்டானேசுவரம் கோயிலுக்குச் சென்று இறைவனை வணங்கிப் பதிகம் பாட நோய் தீர்ந்தது. அப்போது அவர் பாடிய முதல் பதிகம் ‘கூற்றாயினவாறு விலக்ககலீர், கொடுமை பலசெய்தன நானறியேன்” எனத்தொடங்கும் முதலடியினைக் கொண்டது.
இதுதொடங்கி அவர் சிவபெருமான் தலங்களுக்குச் சென்று வழிபட்டுப் பாடிய பாடல்கள் பன்னிரு திருமுறைத் தொகுப்பில் 4,5,6 ஆம் திருமுறையாகத் தொகுக்கப்பட்டுள்ளன. தருமசேனர் சைவசமயத்தைப் பின்பற்றியது கேட்டு, வெகுண்ட சமணர்கள் மகேந்திர வர்மப் பல்லவனிடம் முறையிட அவன் சீற்றம் கொண்டு அமைச்சரை அனுப்பி அழைத்துவரச் சொன்னான். திருநாவுக்கரசர் பின்வரும் பதிகம்பாடி அமைச்சருடன் செல்ல மறுத்தார். அப்பதிகத்தின் முதல் பாடல் பாடமாக உள்ளது. இது ஆறாம் திருமுறையில் திருத் தாண்டகப் பண்ணில் அமைந்துள்ளது.
நாமார்க்கும் குடியல்லோம் நமனை யஞ்சோம்
நரகத்தில் இடர்ப்படோம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோமல்லோம்
இன்பமே எந்நாளும் துன்பமில்லை
தாமார்க்கும் குடியல்லாத் தன்மையான
சங்கரன் நற் சங்க வெண் குழையோர் காதில்
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
கொய்ம் மலர்ச் சேவடியிணையே குறுகினோமே.
[அருஞ்சொற்பொருள்: நமன் – எமன், கூற்றம்; நடலை – பொய், வஞ்சனை, பாசாங்கு, துன்பம், ஏமாப்பு - மகிழ்வுடன் இருத்தல், குறுகுதல் – அடைதல், மீளாஆளாய் – விலகாத அடியாராய், கோமான் – அரசர்க்கு அரசர்]
2. மாணிக்கவாசகர்
திருவாசகம்
பாண்டிய நாட்டில் திருவாதவூரில் சைவ அந்தணர் குலத்தில் `திருவாதவூரர்’ பிறந்தார். அறிவாற்றலால் சிறந்து விளங்கிய இவர் அரிமர்த்தனப் பாண்டியனிடம் அமைச்சனாக விளங்கினார். ‘தென்னவன் பிரம்மராயன் எனும் பட்டமளித்துப் பாராட்டப்பெற்றார்.
மன்னனுக்காகக் குதிரை வாங்குவதற்காக நிறைய பொன்னுடன் கீழைக்கரைக்குச் சென்றபோது திருப்பெருந்துறையில் குருந்த மரத்தடியில் இறைவன் ஞானாசிரியனாய் வெளிப்பட்டு உபதேசம் செய்ய, ஞான உபதேசம் பெற்றதும் தன் நிலைமறந்து கொண்டுவந்த பொன்னையெல்லாம் இறைப்பணியில் செலவிட்டார். இதனையறிந்த மன்னன் இவரைச் சிறையிலிட்டுத் துன்புறுத்தவே, இறைவன் அவர் பொருட்டு நரியைப் பரியாக்கி வைகையில் வெள்ளப் பெருக்கு உண்டாக்கி, பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படி பட்டுத் திருவிளையாடல் புரிந்தார். அதன்பிறகு மன்னன் மாணிக்க வாசகரின் பெருமையை உணர்ந்தான். சிறையிலிருந்தும், பதவியிலிருந்தும் விடுதலைபெற்று சிவத்தொண்டில் ஈடுபட்டார்.
இவர் பாடிய பாடல்களின் தொகுப்பு திருவாசகம், திருக்கோவையார் ஆகியன. திருவாசத்தில் சிவபுராணம் தொங்கி அச்சோப் பதிகம் ஈறாக 659 பாடல்கள் உள்ளன. இவை 51 தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ளன.
ஊனை உருக்கி உள்ளொளி பெருக்கும் சிறப்புகொண்ட ‘திருவாசகத்திற்கு உருகார் ஒருவாசத்திற்கும் உருகார்’ என்பர். திருவாசகத்தின் சிறப்பால் ஈர்க்கப்பட்ட இராமலிங்க அடிகளார் அதனை வழிபடு நூலாக ஏற்றார்.
வான்கலந்த மாணிக்க வாசக நின் வாசகத்தை
நான் கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
தேன்கலந்து பால் கலந்து செழுங்கனித் தீஞ்சுவைகலந்து என்
ஊன்கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே
என்றும் பாடியுள்ளார்.
துறைமங்கலம் சிவபிரகாச அடிகள் தமது நால்வர் நான் மணிமாலையில்,
“வேதம் ஓதின் விழிநீர் பெருக்கி
நெஞ்சம் நெக்குருகி நிற்பவர் காண்கிலோம்
திருவாசகம் இங்கு ஒருகால் ஓதின்
கருங்கல் மனமும் கரைத்துகக் கண்கள்
தொடுமணற்கேணியில் சுரந்துநீர் பாய
மெய்மயிர் பொடிப்ப விதிர்விதிர்ப் பெய்தி
அன்பர் ஆகுநர் அன்றி
மன்பதை உலகின் மற்றையர் இலரே’
என்றும் போற்றியுள்ளார்.
அயல் நாட்டினாரான டாக்டர் ஜி.யு.போர் தமது இறுதிக் காலத்தில் திருவாசகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். திருவாசகத்சதை,
‘வாட்டமிலா மாணிக்கவாசக நின் வாசதந்தைக்
கேட்டபொழுது அங்கிருந்த கீழ்ப்பறவைச் சாதிகளும்
வேட்டமுறும் பொல்லா விலங்கினமும் மெய்ஞான
நாட்டமுறும் எனில் நானுறுதல் வியப்பன்றே.
என்று பறவைகளும், பொல்லா விலங்குகளும் மெய்ஞானத்தை விரும்மும் என்றால் நான் நாட்டமுறுதல் வியப்பன்றே என்று வள்ளலார் மேலும சிறப்பித்துக் கூறுகின்றார். சிவபுராணத்திலிந்து பத்து வரிகள் பாடமாக உள்ளது.
சிவபுராணம்
நமச்சிவாய வாஅழ்க நாதன்தான் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள்வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க
வேகம் கெடுத்தாதாண்ட வேந்தன் அடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறத்தாற்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க.
[அருஞ்சொற்பொருள். இமைப்பொழுதும்- கால அளவு, கோகழி- திருவாவடுதுறை என்னும் சிவத்தலம்; அண்ணிப்பான்- பக்கத்தில் இருப்பவன், இனிமை செம்பவன்; ஏகன்- ஒருவன், அநேகன் – பலவாக இருப்பவன்: பிஞ்ஞகன் – தலைக்கோலம் உடையவன் (பிறை, கங்கை, அரவம் முதலியன தலைக்கோலங்கள்) புறத்தார்க்குச் சேயோன் - இறைவன் தன்னை நினையாதவரைத் தனக்கு வேறானவராகவே வைத்துச் சிறிதும் விளங்கித் தோன்றாதவன்” இறைவன் விரும்பி இருக்கும் இடங்கள் இரண்டு. அவை, நெஞ்சத் தாமரை, மற்றொன்று துவாத சாந்தப் பெருவெளி. அஃதாவது தனக்குப் பன்னிரண்டு அங்குலத்திற்கும் மேல் உள்ள இடம். இவை இரண்டையும் சுட்ட “கரங்குவிவார், சிரங்குமவாம்” என்றார்.)
Comments
Post a Comment