அறன் வலியுறுத்தல்

குறள் 1 சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு. விளக்கம் அறமானது சிறப்பைத் தரும்; செல்வத்தையும் தரும்; அத்தகைய சிறப்பையும், செழிப்பையும் தரக்கூடிய அறவழி ஒன்றைத்தவிர ஆக்கமளிக்கக் கூடிய வழி வேறு எதுவும் இல்லை. குறள் 2 அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு. விளக்கம் நன்மைகளின் விளைநிலமாக இருக்கும் அறத்தைப் போல் ஒருவருடைய வாழ்க்கைக்கு ஆக்கம் தரக்கூடியது எதுவுமில்லை; அந்த அறத்தை மறப்பதை விடத் தீமையானதும் வேறில்லை. குறள் 3 ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாஞ் செயல். விளக்கம் நம்மால் முடிந்த வகைகளில் எல்லாம், முடியக்கூடிய வழிகளில் எல்லாம், அறச் செயல்களை இடைவிடாமல் தொடர்ந்து செய்து வருதல் வேண்டும். குறள் 4 மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற. விளக்கம் ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவானாக இருப்பதே அறமாகும். மனத்தூய்மை இல்லாத மற்றவை யாவும் வெறும் ஆரவாரமே தவிர வேறொன்றும் இல்லை. குறள் 5 அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம். விளக்கம் பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் என்னும் நான்கிற்கும் சிறிதும் இடம் தராமல் வாழ்வதே அறம் ஆகும் . அவை யாவும் அறவழிக்குப் பொருந்தாதவைகள். குறள் 6 அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை. விளக்கம் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப் புகழாய் நிலைத்துத் துணை நிற்கும் குறள் 7 அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை விளக்கம் அறவழியில் நடப்பவர்கள் பல்லக்கில் உட்கார்ந்து செல்பவர்களைப் போல வாழ்க்கையில் வரும் இன்ப துன்பங்கள் இரண்டையும் எளியவாகக் கருதி மகிழ்வுடன் பயணத்தை மேற்கொள்வார்கள் தீய வழிக்குத் தங்களை ஆட்படுத்திக் கொண்டவர்களோ பல்லக்கைத் தூக்கிச் சுமப்பவர்களைப் போல இன்பத்திலும் அமைதி கொள்ளாமல், துன்பத்தையும் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவமின்றி வாழ்வையே பெரும் சுமையாகக் கருதுவார்கள். குறள் 8 வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல். விளக்கம் பயனற்றதாக ஒருநாள்கூடக் கழிந்து போகாமல், தொடர்ந்து நற்செயல்களில் ஈடுபடுபவருக்கு வாழ்க்கைப் பாதையைச் சீராக்கி அமைத்துத் தரும் கல்லாக அந்த நற்செயல்களே விளங்கும் குறள் 9 அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம் புறத்த புகழும் இல. விளக்கம் அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை. குறள் 10 செயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி. விளக்கம் பழிச் செயல்கள் செய்யாமல் தன்னைப் பாதுகாத்து, தன் வாழ்நாள் முழுவதும் அறம் செய்ய வேண்டியது மனிதனின் கடமையாகும்.

Comments

Popular posts from this blog

UGC NET TAMIL - TNPSC தமிழ் இலக்கிய வரலாறு தொடர்பான விரிவான வினாக்கள்

பல்லவர் கால இலக்கியங்கள் - பக்தி இலக்கியக் குறிப்புகள்

UGC Tamil TNPSC Tamil - பக்தி இலக்கிய வினாக்கள்