சோழர் வரலாறு
சோழர்கள்
வடவேங்கடம் தென்குமரிக்கு இடைப்பட்ட பரந்துபட்ட தமிழகத்தை, குட புலம், குண புலம், தென் புலம், என மூன்றாகப் பிரித்து, சேர, சோழ, பாண்டிய அரச மரபினர் மிகத்தொன்மைக் காலத்திலிருந்து அரசாண்டனர். இராமாயணம், மகாபாரதம் போன்ற பெருங்காப்பியங்கள் எழுந்த காலத்திலும், தமிழகத்தில் மூவேந்தரும் ஆண்டனர் என்பதை அறிய முடிகிறது. கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் மகதநாட்டை ஆட்சி செய்த அசோக சக்ரவர்த்தியின் கல்வெட்டுகளில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் பற்றிய குறிப்புகள் காணப்பெறுகின்றன. கி.பி. முதல் நூற்றாண்டில் தமிழ்நாடு வந்த யவன ஆசிரியன் பெரிப்பூளூஸ் சோழநாடு பற்றிய செய்திகளைக் குறித்துள்ளான். கிரேக்க, உரோமானியப் பேரரசுகள் உயர்நிலையில் இருந்த காலத்தில், சோழர்களுடன் அவர்களுக்கு வணிகத்தொடர்பு இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. தமிழகத்து அரச மரபினர்களில் மிகத் தொன்மையான குடியினர் சோழர் என்பதில் ஐயமில்லை.
3.1.1 முற்கால, பிற்காலச் சோழர்கள்
கி.மு.மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி.மூன்றாம் நூற்றாண்டு வரைத் திகழ்ந்த கடைச்சங்க காலத்தில் வாழ்ந்த சில சோழ மன்னர்கள் பற்றிய குறிப்புகள் சங்கத்தமிழ் நூல்களில் கிடைக்கின்றன. அவர்கள் பற்றிய தெளிவான வரலாறு எழுதப் போதிய தொல்லியல் சான்றுகள் இதுவரை கிடைத்தில்லை. எனவே சங்க காலத்தில் வாழ்ந்த கரிகாற்சோழன், கிள்ளிவளவன் போன்ற சோழ அரசர்களை முற்காலச்சோழர் என்று பகுத்துள்ளனர். சங்கம் மருவிய காலத்திற்கும், பல்லவர் ஆட்சிக்கும் பின்பு கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் மீண்டும் சோழராட்சி மலர்ந்தது. இவ்விடைப் பட்ட காலத்தில் சோழர்கள் வலிமை குன்றிய குறுநில மன்னர்களாக வாழ்ந்தனர். அவர்கள் கி.பி. ஏழு, எட்டாம் நூற்றாண்டுகளில் தமக்குரிய சோழநாட்டிலேயே இருந்தனர் என்பதற்குத் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய சமயகுரவர்களின் அருட்பாடல்களும், மூன்றாம் நந்திவர்மபல்லவன் காலத்திய நந்திக்கலம்பகம் எனும் நூலும், வேலூர்ப்பாளையச் செப்பேடுகளும், சின்னமனூர்ச் செப்பேடுகளும், பெரியபுராணமும், ஹியூன் த்சாங் எனும் சீனநாட்டுப் பயண எழுத்தாளனின் குறிப்புகளும் தக்க சான்றுகளாக விளங்குகின்றன.
ஒன்பதாம் நூற்றாண்டு முதல் மீண்டும் வலிமை பெற்ற பிற்காலச் சோழ அரசர்கள், சங்க காலத்துச் சோழ மன்னர்களைத் தங்கள் குல முன்னவர்கள் என, அவர்கள் வெளியிட்ட செப்பேட்டுச்சாசனங்களில் குறித்துள்ளனர். கலிங்கத்துப்பரணி, தக்கயாகப்பரணி, மூவருலா போன்ற சோழர் காலத் தமிழ் நூல்களும் இதனை வலியுறுத்துகின்றன. எனவே சங்க காலம் தொட்டு கி.பி.பதின்மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதிவரை சோழ அரச மரபினர் ஆண்டிருந்தாலும், கி.பி.950 முதல் 1279 வரை திகழ்ந்த சோழராட்சிக்காலமே பிற்காலச்சோழர் காலம் எனக் கொள்ளப்பெறுகின்றது.
தெலுங்குச் சோழர்கள்
காவிரியாற்றிற்கு இரு மருங்கும் கரைகண்டவன் எனப் புகழப்படும் சங்ககாலக் கரிகாற்சோழனின் வழிவந்த சோழ மன்னரின் ஒரு பிரிவினர் ஆந்திர மாநிலத்துக் கர்நூல், கடப்பை ஆகிய பகுதிகளில் ஆட்சி புரிந்து வந்தனர் என்பதையும், அவர்கள் தங்களைக் கரிகாற்சோழன் வழிவந்த தெலுங்குச் சோழர்கள் எனக் கூறிக்கொண்டதையும் ஆந்திர நாட்டுக் கல்வெட்டுகள் எடுத்துரைக்கின்றன.
3.1.2 பிற்காலச்சோழர் கிளையினர்
விஜயாலய சோழனால் தோற்றம் பெற்ற பிற்காலச் சோழ மரபில் அவனைத் தொடர்ந்து அவன் மகன் முதல் ஆதித்த சோழன், அவன் மகன் முதலாம் பராந்தக சோழன், அவன் மகன் கண்டராதித்த சோழன், அவன் தம்பி அரிஞ்சய சோழன், அவன் மகன் இரண்டாம் பராந்தகன் எனும் சுந்தர சோழன், கண்டராதித்த சோழன் மகன் உத்தம சோழன், சுந்தர சோழன் மகன் முதலாம் இராஜ ராஜன், அவன் மகன் இராஜேந்திரன், அவன் மகன் முதலாம் இராஜாதிராஜன், அவன் தம்பி இரண்டாம் இராஜேந்திரன், அவன் தம்பி வீரராஜேந்திரன், அவன் மகன் அதிராஜேந்திரன் ஆகியவர்களுடன் ஒரு கிளையினர் ஆட்சி கி.பி. 846 - இல் தொடங்கி 1070 - இல் நிறைவுற்றது. அதிராஜேந்திரன் மறைவுக்குப் பின்பு ஆண் வாரிசு இல்லாததால், கங்கைகொண்ட சோழன் எனும் முதலாம் இராஜேந்திரனின் மகள் அம்மங்கை தேவி, கீழைச்சாளுக்கிய மன்னன் இராஜராஜ நரேந்திரன் ஆகிய தம்பதியரின் புதல்வனான முதலாம் குலோத்துங்கன் சோழப்பேரரசனாக முடிசூடிக்கொண்டான். இவன் தாய்வழியில் சோழ அரச உரிமையைப் பெற்றவனானான். குலோத்துங்கனுக்குப் பிறகு அவனது மைந்தன் விக்கிரமசோழன், அவன் மகன் இரண்டாம் குலோத்துங்கன், அவனது புதல்வன் இரண்டாம் இராஜராஜன், விக்கிரம சோழனின் மற்றொரு பெயரனான இரண்டாம் இராஜாதிராஜன், இரண்டாம் குலோத்துங்கனின் மகனான மூன்றாம் குலோத்துங்கன், அவன் மகன் மூன்றாம் இராஜராஜன், அவன் மகன் மூன்றாம் இராஜேந்திரன் என ஒருவர் பின் ஒருவராகச் சோழ அரசு கட்டிலில் அமர்ந்து கி.பி.1279 வரை ஆட்சி செய்தனர்.
3.1.3 வரலாற்று மூலங்கள்
சோழராட்சிக் காலத்தில் திருக்கோயில்களில் வெட்டு விக்கப்பெற்ற கல்வெட்டுச் சாசனங்கள், சோழப் பேரரசர்களின் ஆணைகளாக வெளியிடப்பெற்ற செப்பேட்டுச்சாசனங்கள், சோழர் காசுகள், சோழராட்சிக் காலத்தில் புலவர்களால் படைக்கப்பெற்ற தமிழ், சமஸ்கிருத நூல்கள் ஆகிய தரவுகள் அவர்களின் ஆட்சித்திறம், வரலாறு ஆகியவை பற்றி அறியப் பெரிதும் துணையாக விளங்குகின்றன.
தொல்லியல் ஆய்வுத்துறையினர் வெளியிட்டுள்ள கல்வெட்டுகளின் ஆண்டறிக்கைகள், சாசன வெளியீடுகள், திருவாலங்காடு, கரந்தை, லெய்டன் முதலிய செப்பேட்டுச் சாசனங்களின் வெளியீடுகள், கலிங்கத்துப்பரணி, மூவருலா, தக்கயாகப்பரணி, சங்கரசோழனுலா போன்ற தமிழ் நூல்கள் கல்வெட்டுகளின் மெய்கீர்த்திப்பகுதிகள் ஆகியவை சோழர் வரலாறு குறித்த பல செய்திகளை விவரிக்கின்றன. பிற்காலச் சோழர் மரபு
பிற்காலச் சோழர் மரபு
விஜயாலயன்
(கி.பி.846-881)
முதலாம் ஆதித்தன்
(கி.பி.871-907)
முதலாம் பராந்தகன்
(கி.பி.907-953)
கண்டராதித்தன்
(கி.பி.950-957)
அரிஞ்சயன்
(கண்டராதித்தனின் தம்பி)
(கி.பி.956-957)
இரண்டாம் பராந்தகன் எனும் சுந்தரசோழன்
(கி.பி.957-970)
உத்தமசோழன் (கண்டராதித்தனின் புதல்வன்)
(கி.பி.970-985)
முதலாம் இராஜராஜன் (சுந்தரசோழனின் மகன்)
(கி.பி.985-1014)
முதலாம் இராஜேந்திரன்
(கி.பி.1012-1044)
முதலாம் இராஜாதிராஜன்
(கி.பி.1018-1054)
இரண்டாம் இராஜேந்திரன் (முதலாம் இராஜேந்திரனின் 2-ஆம் மகன்)
(கி.பி.1051-1063)
வீரராஜேந்திரன் (முதலாம் இராஜேந்திரனின் 3ஆம் மகன்)
(கி.பி.1063-1070)
அதிராஜேந்திரன்
(கி.பி.1070)
தாய்வழி அரசு உரிமை
இராஜஇராஜ நரேந்திரன் (கீழைச்சாளுக்கிய அரசன்) + அம்மங்கைதேவி (முதலாம் இராஜேந்திரனின் மகள்)
முதலாம் குலோத்துங்கன்
(கி.பி.1070-1120)
விக்கிரம சோழன்
(கி.பி.1118-1136)
இரண்டாம் குலோத்துங்கன்
(கி.பி.1133-1150)
இரண்டாம் இராஜராஜன்
(கி.பி.1146-1163)
இரண்டாம் இராஜாதிராஜன் (விக்கிரமசோழனின் பெயரன்)
(கி.பி.1163-1178)
மூன்றாம் குலோத்துங்கன் (இரண்டாம் இராஜராஜனின் மகன்)
(கி.பி.1178-1218)
மூன்றாம் இராஜராஜன்
(கி.பி.1216-1256)
மூன்றாம் இராஜேந்திரன்
(கி.பி.1246-1279)
Comments
Post a Comment