அளபெடை: வகையும் தேவையும்

முன்னுரை எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்ற ஐந்திலக்கண மரபினைக் கொண்டது தமிழ் இலக்கணம். தமிழ் இலக்கண மரபில் எழுத்திலக்கணத்தில் இடம்பெறுவது அளபெடை ஆகும். எழுத்திலக்கணத்தில் இடம்பெறும் அளபெடை தவிர்த்து, யாப்பிலக்கணத்தில் அளபெடைத் தொடை, அளபெடை வண்ணம் ஆகியனவும் இலக்கண நிலையில் அளபெடையோடு இயைந்த வண்ணம் காணப்படுகின்றன. உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலுகரம், குற்றியலிகரம், ஐகாரக்குறுக்கம், ஔகாரக் குறுக்கம், மகரக்குறுக்கம், ஆய்தக் குறுக்கம் ஆகிய பத்துவகை சார்பு எழுத்துகளில் ஒன்றாக அளபெடையின் வகைகள் காணப்படுகின்றன. தமிழ் இலக்கண மரபில் இடம்பெற்றுள்ள அளபெடையைக் குறித்து இக்கட்டுரையில் விரிவாகக் காணலாம். அளபெடை பழங்காலத்தில் தமிழ் மொழியில் இலக்கியங்கள் பெரும்பாலும் செய்யுள்களாகவே இருந்தன. செய்யுள், ஓசையை அடிப்படையாகக் கொண்டது. குறள் வெண்பா முதல் பல வகையான செய்யுள் வடிவங்கள் இருந்தன. இந்தச் செய்யுளில் ஓசை குறையும் ஓசையை நிறைவு செய்வதற்காக எழுத்துகள் நீண்டு ஒலிக்கும். இவ்வாறு நீண்டு ஒலிப்பதை, அளபெடுத்தல் என்று கூறுவர். அளபு - மாத்திரை, எடை - எடுத்தல் என்பது பொருள். எழுத்தினது மாத்திரை அளவில் நீட்டி ஒலித்தல். எழுத்துக்கள் அரை மாத்திரை முதல் இரண்டு மாத்திரை வரையில் பல்வேறு அளவுகளை உடையவை. இரண்டு மாத்திரைக்கு மேல் மூன்று பெரிய அளவுகளை உடைய எழுத்துக்கள் தமிழில் இல்லை என்பது இலக்கணிகள் கருத்து. மூன்று முதலிய அளவு வேண்டின் இரண்டு மாத்திரை உடைய நெட்டெழுத்துகளை நீட்டி ஒலிக்கலாம் என்பது தொல்காப்பியர் கருத்து. அந்நீட்சியை அந்நெட்டெழுத்துக்களின் இனமாகிய குற்றெழுத்துக்களே குறிக்கும். இவையே அளபெடை எனப்பட்டது. அளபெடை - அளபு நீண்டு வருவது. செய்யுளுள் ஓசை குறையுங்காலத்து நெட்டெழுத்துக்கள் ஏழும் அளபெடுக்கும் எனவும் அவை இவ்வாறு நீண்டு அளபு எடுத்துள்ளன என்பதை அவ்வந்நெடிலுக்கு இனமான குற்றெழுத்துக்கள் காட்டி அவற்றின் பின் நிற்குமெனவும் நன்னூலார் கூறுவர். “நீட்டம் வேண்டின் அவ்வள புடைய கூட்டி எழூஉதல் என்மனார் புலவர்” (தொல்.எழுத்து.நூன்மரபு.6) என்னும் தொல்காப்பிய நூற்பாவின் உரையில் இளம்பூரணர் நீண்ட மாத்திரையை உடைய அளபெடை எழுத்துப் பெற வேண்டின் மேற்கூறிய ஓரளபும், இரண்டளபுமுடைய குறிலையும் நெடிலையும் பிளவுபடாமல்கூட்டி எழுதுக என்று கூறுகிறார் ஆசிரியர் எனக் குறிப்பர். “குன்றிசை மொழிவயின் நின்றிசை நிறைக்கும் நெட்டெழுத்து இம்பர் ஒத்த குற்றெழுத்தே (தொல்காப்பியம், மொழிமரபு, 8) எனத் தொல்காப்பியர் அளபெடையைச் சுட்டுவர். ஐஔ என்னும் ஆயீர் எழுத்திற்கு இகர உகரம் இசைநிறைவு ஆகும் (தொல்காப்பியம், மொழிமரபு. 9) எனத் தொல்காப்பியர் ஐகார, ஔகாரத்திற்கு இகர, உகர எழுத்துகள் அளபெடையாக அமைவதைச் சுட்டுகாட்டுகிறார். அளபெடையின் வேறுபெயர்கள, அளபெனினும், அளபெடை எனினும் புலுதமெனினும் ஒக்கும். அளபெடையின் வகைகள் 1. உயிரளபெடை 2. ஒற்றளபெடை உயிரளபெடை உயிர் எழுத்துகளில் நெடில் எழுத்துகளே அளபெடுக்கும். நெடில் எழுத்து அளபெடுக்கும் போது, அந்த நெடில் எழுத்திற்கு இனமான குறில் எழுத்து அளபெடுப்பதற்கு அடையாளமாக அதன் அருகில் எழுதப்படும். செய்யுளில் இவ்வாறு எழுதப்பட்டுள்ள இடங்களில் நீட்டி ஒலிக்க வேண்டும் என்பது அதன் கருத்தாகும். நெடில் எழுத்து இரண்டு மாத்திரை. அளபெடுக்கும் போது அதற்கு இனமான குறில் எழுத்தையும் எழுதுவதால், குறிலுக்குரிய ஒரு மாத்திரையும் சேர்த்து உயிரளபெடை மூன்று மாத்திரை நேரம் ஒலிக்கும். இன எழுத்துகள் ஆஅ, ஈஇ, ஊஉ, ஏஎ, ஐஇ, ஓஒ, ஔஉ என்பனவாகும். ஐகாரத்திற்கும் ஔகாரத்திற்கும் இணையான குறில் எழுத்துகள் இல்லை என்பதால் முறையே இகரம், உகரம் ஆகியவை அடையாளமாக எழுதப்படும். எ.கா. மாஅயோள் பேஎய்ப்பக்கம் இசைகெடின் மொழிமுதல் இடைகடை நிலை நெடில் அளபு எழும் அவற்றுஅவற்று இனக்குறில் குறியே (நன்னூல்.எழுத்ததிகாரம்.91) பொதுவாக, செய்யுளில் ஏற்படும் ஓசைக் குறைவை நிறைவு செய்யவே எழுத்துகள் அளபெடுக்கிறது. இருப்பினும் வேறு சில காரணங்களுக்காகவும் எழுத்துகள் அளபெடுப்பது உண்டு. உயிரளபெடை நான்கு வகைப்படும். 1. இயற்கை அளபெடை 2. செய்யுளிசை அளபெடை (இசைநிறை அளபெடை) 3. இன்னிசை அளபெடை 4. சொல்லிசை அளபெடை இயற்கை அளபெடை இயல்பாகவே சொல்லில் வரும் எழுத்துகள் அளபெடுத்து நின்றால் அதை இயற்கை அளபெடை என்று கூறுவர். 1. ஆடுஉ 2. மகடூஉ 3. ஒரூஉ இவை இயற்கையாகவே அளபெடுப்பதால் இயற்கை அளபெடை எனப்படுகின்றன. ஆடூஉ, மகடூஉ போன்றவை பெயர்ச்சொற்களில் அளபெடுத்து வந்துள்ளன. இவ்வாறு பெயர்ச் சொற்களில் அளபெடை காணப்படுவதால் இந்த வகையை இயற்கை அளபெடை எனக் கொண்டனர். செய்யுளிசை அளபெடை செய்யுளில் ஒசை குறையும்போது அளபெடுத்து ஓசையை நிறைவு செய்வது செய்யுளிசை அளபெடை ஆகும். இதற்கு இசைநிறை அளபெடை என்ற பெயரும் உண்டு. எ.கா. தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை இந்தக் குறளில் தொழாள் என்று இயல்பாக இருந்தால், இது ஒரே நிரையசையாக நிற்கும். அந்த இடத்தில் குறள் வெண்பாவின் ஓசை கெடாமல் இருக்க நிறை, நேர் என்ற இரண்டு அசைகள் தேவைப்படுகின்றன. தொழாஅள் என்று அளபெடுத்து நிற்பின், தொழா என்பது நிரையசையாகவும் அள் என்பது நேரசையாகவும் அமைந்து ஓசையை நிறைவு செய்கின்றன. கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை விடாஅர் விழையும் உலகு (குறள்.809) இக்குறட்பாவில் கெடா, விடா ஆகியன அளபெடுத்து செய்யுளின் ஓசையை நிறைவு செய்துள்ளதால் இக்குறட்பாவில் செய்யுளிசை அளபெடை பயின்றுவந்துள்ளது. செய்யுளிசை அளபெடையை அறிந்து கொள்ள யாப்பிலக்கம் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். சில செய்யுளிசை அளபெடைக்கான சான்றுகள் வருமாறு: 1. பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல் 2. ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை 3. ஆஅதும் என்னு மவர் 4. நற்றாள் தொழாஅர் எனின் இன்னிசை அளபெடை செய்யுளில் ஓசை குறையாத இடத்திலும் இனிய ஓசையைத் தருவதற்காகக் குறில் எழுத்துகள் நெடில் எழுத்துகளாகி அளபெடுக்கும். அவ்வாறு அளபெடுப்பது இன்னிசை அளபெடை எனப்படும். எ.கா. கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை கெடுப்பதும் என்ற சொல்லில் உள்ள து என்ற குறில் எழுத்து, தூ என்ற நெடில் எழுத்தாக மாறி, கெடுப்பதூஉம் என அளபெடுத்து உள்ளது. எனவே இக்குறட்பாவில் இன்னிசை அளபெடை பயின்றுவந்துள்ளது. கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும். இந்தக் குறளில் உள்ள உடுப்பதூஉம், உண்பதூஉம் என்ற இரண்டும் இன்னிசை அளபெடைகளே ஆகும். சொல்லிசை அளபெடை ஒரு பெயர்ச்சொல்லை வினை எச்சமாக மாற்றுவது சொல்லிசை அளபெடை எனப்படும். எ.கா. உரனசைஇ உள்ளம் துணையாகச் சென்றார் வரனசைஇ இன்னும் உளேன் இக்குறட்பாவில் இடம்பெறும் நசை என்னும் பெயர்ச்சொல்லுக்கு விருப்பம் என்று பொருள். அதையே நசைஇ என்று அளபெடை ஆக்கினால் விரும்பி என்ற விசை எச்சப் பொருளில் வரும். இவ்வாறு அளபெடுப்பதே சொல்லிசை அளபெடை ஆகும். குடிதழீஇ கோலோச்சும் மாநில மன்னன் அடிதழீஇ நிற்கும் உலகு இக்குறட்பாவில் இடம்பெறும் தழீ என்பது தழுவுதல் என்னும் தொழிற்பெயர்ச்சொல் ஆகும். தழீஇ என்பது தழுவி என வினையெச்ச சொல்லாக அளபெடுத்ததால் இது சொல்லிசை அளபெடையாகும். சில சொல்லிசை அளபெடைக்கான சான்றுகள் வருமாறு: தொகை - தொகைஇ (தொகுத்து) வளை - வளைஇ (வளைத்து) உயிர் அளபெடை வகைகளான செய்யுளிசை, இன்னிசை, சொல்லிசை வகைகள் திருக்குறளில் பயின்றுவந்துள்ள முறை குறித்து, பொன். சௌரிராசன் அளபெடையும் திருக்குறளும் என்ற கட்டுரையை எழுதியுள்ளார். அக்கட்டுரையில் அவர் குறிப்பிடும் கருத்து சுருக்கமாகக் காணலாம். அப்பகுதி வருமாறு: திருக்குறளில் செய்யுளிசை மிகுந்தும், இன்னிசை அதனையடுத்தும், சொல்லிசை மிக அருகியும் வந்துள்ளன. செய்யுளிசை 48 குறட்பாக்களிலும், இன்னிசை 17 குறட்பாக்களிலும் சொல்லிசை 10 குறட்பாக்களிலும் இடம்பெற்றுள்ளன. (பொன்.சௌரிராசன், அளபெடையும் திருக்குறளும், ஆய்வுக்கோவை - 16, தொகுதி:2) ஒற்றளபெடை செய்யுளில் ஓசை குறைந்தால் மெய்யெழுத்துகளும் அளபெடுக்கும். இது ஒற்றளபெடை எனப்படும். ஓசை நயத்திற்காக ஒற்று எழுத்துகள் அளபெடுத்து வந்தால் அது ஒற்றளபெடை எனப்படும். ஒற்றளபெடை தனக்குரிய அரைமாத்திரை அளவிலிருந்து நீண்டு ஒலிக்கும். ஒற்றளபெடை திருக்குறளில் இல்லாத வகையாகும். ஒற்றளபெடையில், ங்,ஞ்,ண்,ந்,ம்,ன்,வ்,ய்,ல்,ள் ஆகிய பத்து மெய்யெழுத்துகளும் ஃ என்ற எழுத்தும் ஆக பதினோர் எழுத்துகளும் ஒரு குறிலை அடுத்தும் இரு குறில்களை அடுத்தும் செய்யுளில் இனிய ஓசையை வேண்டி அளபெடுக்கும். இவ்வாறு அளபெடுத்தற்கு ஒற்றளபெடை என்று பெயர். ஒற்றளபெடை மிகவும் அருகிய நிலையிலே செய்யுட்களில் இடம்பெற்றுள்ளன. ஙஞண நமன வயலள ஆய்தம் அளபாம் குறிலிணை குறிற்கீழ் இடைகடை மிகலே அவற்றின் குறியாம் வேறே (நன்னூல்.92) எ.கா. அரங்ங்கம், மஞ்ஞ்சு, சங்ங்கு, கண்ண் ஒற்றளபெடையில் வல்லின எழுத்துகளான க்,ச்,ட்,த்,ப்,ற் ஆகிய ஆறும், இடையின எழுத்தில் ர்,ழ் ஆகிய இரண்டும் தவிர்த்து மீதமுள்ள பத்து மெய்யெழுத்துகளும் ஆய்தமும் ஒற்றளபெடையில் அளபெடுக்கும். யாப்பருங்கலம் விருத்தியுரை அளபெடை குறித்தும் அதன் வகைகளைக் குறித்தும் விரிவாக ஆராய்ந்து எடுத்துரைத்துள்ளது. மேலும் அளபெடை பயிலும் இடங்களுக்கு ஏற்ப அதனை தனிநிலை, முதனிலை, இடைநிலை, கடைநிலை என நான்கு வகைப்படுத்தியுள்ளது. அப்பகுதி வருமாறு: அளபெடையாவன, மாத்திரை குன்றலின் சீர் குன்றித் தளைகெட நின்ற விடத்து யாப்பழியாமை பொருட்டு வேண்டப்பட்டன. என்னை? ‘மாத்திரை வகையாற் றளைதபக் கெடாநிலை யாப்பழி யாமைநின் றளபெடை வேண்டும்’ என்ப ஆகலின். அவ்வளபெடைதான் இரண்டு வகைப்படும்; உயிரளபெடையும், ஒற்றளபெடையும் என. என்னை? ‘உயிரள பெடையும் ஒற்றள பெடையுமென் றாயிரண் டென்ப அளபெடை தானே’ என்ப ஆகலின். உயிருள் நெட்டெழுத்து ஏழும் அளபெடுக்கும். அவை அளபெடுக்குமிடத்து ஆ,ஈ,ஊ,ஏ,ஓ என்னும் ஐந்தும் தமக்கு இனமாகிய குற்றெழுத்தினோடு அளபெடுக்கும். ஐகாரம், இகரத்தோடு அளபெடுக்கும். ஔகாரம் உகரத்தோடு அளபெடுக்கும். என்னை? “குன்றிசை மொழிவயின் நின்றிசை நிறைக்கும் நெட்டெழுத்து இம்பர் ஒத்த குற்றெழுத்தே” ஐஔ என்னம் ஆயீ ரெழுத்திற்கு இகர உகரம் இசைநிறை வாகும் என்றார் தொல்காப்பியனார் ஆகலின். அவ்வளபெடைதான் நான்கு வகைப்படும். தனிநிலை அளபெடையும், முதல்நிலை அளபெடையும், இடைநிலை அளபெடையும், இறுதிநிலை அளபெடையும் என. என்னை? ‘தனிநிலை முதனிலை இடைநிலை ஈறென நால்வகைப் படூஉமள பாய்வரும் இடனே’ என்றார் ஆகலின். அவை வருமாறு: 1. ஆஅ, ஈஇ, ஊஉ, ஏஎ, ஐஇ, ஓஒ, ஔஉ - என நெட்டெழுத்து ஏழும் தனிநிலை அளபெடையாய் வந்தவாறு. 2. பாஅரி, கீஇரை, கூஉரை, ஏஎரி, தைஇயல், ஓஒரி, ஔஉவை என ஏழு நெட்டெழுத்தும் முதல் நிலை அளபெடையாய் வந்தவாறு. 3. படாஅகை, பரீஇகம், கழூஉமணி, பரேஎரம், வளைஇகம், புரோஒசை, மனௌஉகம் - என ஏழு நெட்டெழுத்தும் இடைநிலை அளபெடையாய் வந்தவாறு. 4. படாஅ, குரீஇ, கழூஉ, விலேஎ, விரைஇ, நிலோஒ, அனௌஉ - என ஏழு நெட்டெழுத்தும் இறுதிநிலை அளபெடையாய் வந்தவாறு. (அமிதசாகரனார் , யாப்பருங்கலம் - விருத்தியுரை, ப.22) உயிர் எழுத்துகள் அளபெடுத்து நின்றால் அது உயிரளபெடை, ஒற்றெழுத்துகள் அளபெடுத்து நின்றால் அது ஒற்றளபெடை என்பது தெளிவு. எளிமையாக உயிரளபெடையின் வகைகளை அறிந்து கொள்ள வேண்டுமெனின், இரண்டு சீர்கள் நின்றால் அது செய்யுளிசை அளபெடை, மூன்று சீர்கள் வந்தால் அது இன்னிசை அளபெடை, இகரத்தில் முடிந்தால் அது சொல்லிசை அளபெடை என்பதை மனதில் பதித்தால் போதும். அளபெடையின் வகைகளை எளிமையாக அடையாளம் காணலாம். அளபெடைத்தொடை இசை மிகும்போது அளபெடை தோன்றுகிறது. அவை, உயிரளபெடை, ஒற்றளபெடை என இரண்டு வகைப்படும். இந்த அளபெடை தொடை வகைகளில் ஒன்றாகவும் விளங்குகிறது. ஒரு தனி எழுத்துப் பகுப்பை அடிப்படையாகக் கொண்ட தொடை இது. அளபெடையின் ஒலி நீட்சி ஒரு செய்யுளின் அடி, சீர்களில் வருகின்ற அமைப்பு நிலையே (Pattern) இங்குக் கருதப்படுகின்றது. அளபெடை தொடை நிலையிலும் செய்யுளில் இடம்பெறுகின்றது. தமிழ் இலக்கண நூல்கள் தொல்காப்பியம் தொடங்கி, அளபெடைத் தொடைக்கான இலக்கணத்தை எடுத்துரைக்கின்றன. அவை வருமாறு: அளபு எழின் அவையே அளபெடைத் தொடை (தொல்காப்பியம், செய்யுளியல்.97) அளபெழின் மாறல தொடுப்பது அளபெடை (அவிநயம்.68) அளபெடை ஒன்றுவது அளபெடைத் தொடையே (யாப்பருங்கலம்.41) அடிதோறும் மொழி முதற்கண் அழியாது அளபெடுத்து ஒன்றுவது ஆகும் அளபெடையே (யாப்பருங்கலக் காரிகை.16) அளபெடைத் தொடைக்கான சான்று: கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும் உகாஅமை வல்லதே ஒற்று (குறள்.585) இக்குறளில் அடிநிலையில் அளபெடைத் தொடை பயின்றுவந்துள்ளது. இணை, பொழிப்பு முதலான சீர்நிலை தொடைவிகற்பங்களில் அளபெடைத் தொடை இடம்பெற்றதற்கான சான்றுகள் வருமாறு: இணை உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல் வடுக்காண வற்றாகும் கீழ் (குறள்.1079) பொழிப்பு படாஅ மீத்த கெடாஅ நல்லிசைக் (புறநானூறு.145) ஒரூஉ உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல் ஒல்லை உணரப் படும் (குறள்.1096) சிறாஅஅர் துடியர் பாடுவன் மாகஅஅர் (புறம். 291) கூழை மாஅத் தாஅண் மோஒட் டெருமை (காரிகை உரை) மேற்கதுவாய் தேஎம் புனலிடைச் சோஒர் பாஅல் (காரிகை உரை) கீழ்க்கதுவாய் மீஇ னாஅர்ந் துகளுஞ் சீஇர் (காரிகை உரை) முற்று ஆஅ னாஅ நீஇ ணீஇர் (காரிகை உரை) அளபெடை வண்ணம் தொல்காப்பியம் குறிப்பிடும் இருபது வகை வண்ணங்களில் அளபெடை வண்ணம் என்பதும் ஒன்று. அளபெடை எழுத்துகள் அடிகளில் பயின்றுவரும் நிலையில் அவ்வடிகள் அளபெடை வண்ணம் பயின்ற செய்யுள் என்பதாகக் கொள்ளலாம். அளபெடை வண்ணம் அளபெடை பயிலும் (தொல்காப்பியச் செய்யுளியல்.219) எ.கா. தாஅட் டாஅ மரமலர் உழக்கி பூஉக் குவளைப் போஒ தருந்திக் காஅய்ச் செந்நெற் கறித்தப் போஒய் மாஅத் தாஅள் மோஒட் டெருமை (யாப்பருங்கல விருத்தியுரை.158) தொல்காப்பியச் செய்யுளியலுக்கு உரையெழுதிய பேராசிரியர் அளபெடை வண்ணத்தில் உயிரளபெடை, ஒற்றளபெடை என இரண்டு அளபெடையும் பயின்றுவரும் என்று குறிப்பிடுகிறார். அவர் காட்டும் சான்றுகள் வருமாறு: மராஅ மலரொடு விராஅய் பராஅம் (அகநானூறு.99) கண்ண் டண்ண்ணெனக் கண்டுங் கேட்டும் (மலைபடுகடாம்.352) முடிவுரை இவ்வாறு எழுத்துகள் தனக்குரிய அளவு மாத்திரையிலிருந்து நீண்டு ஒலிக்கும் போது அது அளபெடையாகக் கருதப்படுகிறது. உயிரளபெடை அதிகச் செல்வாக்கு பெற்று செய்யுட்களில் காணப்படுகின்றது. ஒற்றளபெடையின் ஆட்சி மிகக் குறைவாக இலக்கியங்களில் காணப்படுகின்றது. செய்யுட்களில் இந்த அளபெடைகள் ஓர் ஒழுங்கின்கீழ் பயின்று இருப்பின் அவை அளபெடைத் தொடையாகவும் அளபெடை வண்ணமாகவும் யாப்பிலக்கணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அளபெடை குறித்து ஆய்வுலகில் ஆராய்ச்சிகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. அளபெடை என்று பொதுநிலையில் சில கட்டுரைகளும், அளபெடையும் திருக்குறளும், அளபெடையின் பொருள் பெறுமானம் என்று சிறப்புநிலையில் சில கட்டுரைகளும் இதுகாறும் முன்னை ஆய்வாளர்களால் எழுதப்பட்டுள்ளன. மேலும் அளபெடைத் தொடை, அளபெடை வண்ணம் போன்றவை இலக்கண நிலையிலும் அதன் ஆட்சி இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள பாங்கினைக் குறித்தும் சிறப்புநிலையில் ஆராயலாம். துணைநூற்பட்டியல் • தொல்காப்பியர், தொல்காப்பியம், எழுத்ததிகார மூலமும் நச்சினார்க்கினியர் உரையும், கணேசயர் பதிப்பு, உலகத் தமிழராய்ச்சி நிறுவனம், சென்னை. 2007. • தொல்காப்பியர், தொல்காப்பியம், செய்யுளியல், உரைவளம், க.வெள்ளைவாரணர் பதிப்பு, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை, 1989. • அமிதசாகரனார், யாப்பருங்கலம், விருத்தியுரை, மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை, உலகத் தமிழராய்ச்சி நிறுவனம், சென்னை, மறுபதிப்பு, 1998 • ச.வே.சுப்பிரமணியன், இலக்கணத் தொகை யாப்பு - பாட்டியல், தமிழ்ப் பதிப்பகம், சென்னை, 1978. • துரை. பட்டாபிராமன், இலக்கண ஆய்வடங்கல், எழுத்தும் - சொல்லும், முதல் தொகுதி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், முதற்பதிப்பு, 1992.

Comments

Popular posts from this blog

UGC NET TAMIL - TNPSC தமிழ் இலக்கிய வரலாறு தொடர்பான விரிவான வினாக்கள்

பல்லவர் கால இலக்கியங்கள் - பக்தி இலக்கியக் குறிப்புகள்

UGC Tamil TNPSC Tamil - பக்தி இலக்கிய வினாக்கள்