வஞ்சிப்பா யாப்பிலக்கண வரலாற்றில் மதுரைக்காஞ்சியும் பட்டினப்பாலையும்

தமிழிலக்கண நெடும்பரப்பில் நால்வகைப் பாக்களும் காலந்தோறும் இலக்கண வரையறையைப் பெற்று வளர்ச்சி மாற்றங்களை அடைந்து வந்துள்ளன. இவற்றில் மிகத் தொன்மையான பா வடிவங்களாக ஆசிரியமும் வஞ்சியும் அடையாளப்படுத்தப்படுகின்றன. ஆசிரியப்பாவும் வஞ்சிப்பாவும் ஒன்றுடன் ஒன்று வடிவ நிலையில் இணைந்திருந்த வரலாற்றைத் தொல்காப்பிய நூற்பாக்களான, ‘ஆசிரிய நடைத்து வஞ்சி’ (தொல். செய். நூ. 104), ‘வஞ்சி தூக்கே செந்தூக்கு இயற்றே’ தொல்.செய்.நூ.68) என்பனவற்றிலிருந்து அறியமுடிகிறது. ‘ஆசிரியத்தின் உட்பகுப்பாக வஞ்சி விளங்குகிறது’1 என்ற கருத்தும், ‘வஞ்சியிலிருந்து ஆசிரியம் வளர்ந்திருத்தல் வேண்டும்’2 என்ற கருத்தும் இங்கு இணைத்தெண்ணத்தக்கன. மேலும் சோ.ந.கந்தசாமி எடுத்துரைக்கும், ஆசிரியப்பாவிலிருந்து வஞ்சிப்பா தோன்றியது என்றோ, வஞ்சிப்பாவிலிருந்து ஆசிரியப்பா தோன்றியது என்றோ எண்ணாது, இருவகைப்பாக்களுமே தொன்மை மிக்க ஒரு மூல யாப்பினின்றும் வெவ்வேறு காலச் சூழலில் தோன்றியிருத்தற்கு உரியன என்று முடிவு செய்தல் தக்கது.3 என்ற கருத்தும் இத்தொடர்பில் நினைதற்குரியது. ஆசிரியமும் வஞ்சியும் ஒன்றோடொன்று தொடர்புடைய பாக்கள் என்பது இலக்கண விதிநிலை சார்ந்தும் இலக்கியப் பயில்நிலை சார்ந்தும் தெளிவாகப் புலப்படுகிறது. ஆசிரியப்பாவும் வஞ்சிப்பாவும் ஒன்றோடொன்று தொடர்புடைய பாக்களாக அமைந்திருக்கின்றன என்பதற்கு இலக்கண நிலைப்பட்ட தொல்காப்பியரின் இலக்கணமும் சங்க இலக்கியமுமே ஆதாரமாக விளங்குகின்றன. பிற்காலத்தில் இத்தகைய குறிப்புகள் இலக்கணங்களில் இடம்பெறவில்லை. இலக்கியத்திலும் வஞ்சிப்பா தனித்த வளர்ச்சியினை அடையவில்லை. இந்நிலையில் சங்க இலக்கியமான பாட்டும் தொகையுமே வஞ்சிப்பாவின் அமைப்பினை அறிந்து கொள்ள மூலத்தரவுகளாக அமைந்திருக்கின்றன. இவ்விரு பாக்களுக்கும் இடையே காணப்படும் இயங்குதளம் என்பது ஒரே போக்கில் அமைந்திருப்பதை உறுதி செய்யும் விதமாகச் சங்கப் புலவர்கள் தங்கள் படைப்புகளில் ஆசிரியப் பாவினையும் வஞ்சிப்பாவினையும் ஒருசேர இடம்பெறச் செய்துள்ளனர். ஆசிரியம், வஞ்சி இரண்டிற்கும் உள்ள ஒற்றுமையைத் தமிழண்ணல், ஆசிரியம் போன்ற நடையினையுடையதே வஞ்சி என்றதால் இவற்றிடையேயுள்ள ஒற்றுமை அறியப்படும். கருத்துக்கேற்ப நடையும் உணர்வுக்கேற்ப யாப்பும் அமைத்துப் பாடும் சங்கப் புலவர்கள் இவற்றை இடையிடைமிடைந்து பொருளை வெளிப்படுத்துமழகு, இப்பாக்களின் ஒருங்கிணைப்பை மேலும் வற்புறுத்துகிறது.4 எனக் குறிப்பிடுகிறார். இவ்வாறு ஆசிரியப்பாவும் வஞ்சிப்பாவும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக விளங்குவதை அறியமுடிகிறது. சங்க இலக்கியப் பாவியல்: வஞ்சி தமிழ் யாப்பியல் வரலாற்றை இலக்கிய நிலைப்பட்டு ஆராய்வதற்கு நமக்குக் கிடைக்கக்கூடிய தரவுகளில் தொன்மையானதாகவும் முதன்மையானதாகவும் இருப்பவை சங்க இலக்கியங்களாகும். சங்கச் செய்யுட்களில் ஆசிரியம், வஞ்சி, கலி, வெண்பா, பரிபாட்டு, மருட்பா ஆகிய பா வகைகள் காணப்படினும் பெரும்பாலான பாடல்கள் ஆசிரிய யாப்பில் அமைந்துள்ளன. கலிப்பா யாப்பிலும் பரிபாட்டு யாப்பிலும் தனி நூல்கள் உள்ளன. வெண்பா கலித்தொகையிலும் பரிபாடலிலும் உறுப்பு நிலையில் கலந்து வருகின்றது. மருட்பா, கலித்தொகைப் பாடல்கள் இரண்டில் சுரிதகப் பகுதியில் இடம்பெறுவதாகச் (கலி. 50:19-24, 121:20-23) சோ.ந.கந்தசாமி கண்டு காட்டியுள்ளார்5. ஆசிரியத்தினிடையே வஞ்சியடிகள் விரவிய வடிவமும் முழுமையான வஞ்சிப்பா வடிவமும் சங்கப் புறநூல்களில் இடம்பெற்றுள்ளன. வஞ்சிப்பாவானது சங்க இலக்கியத்தில் குறைந்த எண்ணிக்கையிலே பயன்பட்டு வந்துள்ள நிலையைச் சங்கச் செய்யுட்கள் கொண்டு அறியமுடிகிறது. சங்க இலக்கியத்தைப் புரிந்துகொள்ளவும் கோட்பாட்டு நிலையில் விளக்கவும் அகம், புறம் என்ற இரண்டு மரபுகளைச் சங்க இலக்கியத்தின் ஊடாகக் கண்ணுற வேண்டியுள்ளது. அந்நிலையில் அகம் பாடுவதில் வஞ்சிப்பா சிறக்கவில்லை என்பதற்குச் சங்க இலக்கியங்களே சான்றுகளாக நம் கண்முன் நிற்கின்றன. வஞ்சிப்பாவின் பொருண்மை புறம் சார்ந்த கூறுகளை எடுத்துரைப்பதற்குப் பயன்பட்டதைச் சங்க இலக்கியத்தில் காணப்படும் வஞ்சியாப்பில் அமைந்த பாடல்கள் தெளிவுபடுத்துகின்றன. இத்தொடர்பில் அ.சதீஷ் சங்க இலக்கியத்தில் காணப்படும் வஞ்சிப்பா குறித்து எடுத்துரைப்பது இணைத்தெண்ணத்தக்கது. அப்பகுதி வருமாறு: வஞ்சியாப்பிற்குரிய இருசீரடியில் தொடங்கும் பாடல்கள் எட்டுத் தொகையுள் புறநானூற்றிலும் (39 பாடல்கள்) பதிற்றுப்பத்திலும் (13,25,26,70,80) காணப்படுகின்றன. பரிபாடலில் (9,15) சில பாடல்களின் இடையிடையே ஆசிரியச் சுரிதகம் பெற்ற வஞ்சிக்குரிய பகுதிகள் காணப்படுகின்றன. பத்துப்பாட்டு நூல்களில் பட்டினப்பாலையும் மதுரைக்காஞ்சியும் வஞ்சி யாப்பிற்குரிய இருசீரடிகளால் தொடங்குகின்றன. எட்டுத்தொகை நூல்களில் புறநானூற்றிலேயே மிகு எண்ணிக்கையில் வஞ்சிப்பாக்கள் காணப்படுகின்றன. புறநானூற்றில் மட்டும் 39 பாடல்கள் வஞ்சிக்குரிய இருசீரடியில் தொடங்குகின்றன. இவை தமிழ் இலக்கிய வரலாற்றில் தரவுகளின் அடிப்படையில் கிடைக்கக்கூடிய முதன்மையான வஞ்சிப்பாக்களாகும்.6 ‘ஆசிரிய நடைத்து வஞ்சி’ என்ற தொல்காப்பிய நூற்பாவிற்கு ஏற்பச் சங்க இலக்கியங்களில் வழங்கும் வஞ்சிப்பாக்கள் ஆசிரியத்தோடே பயின்றுவந்துள்ளன. முழுமையான வஞ்சிப்பா வடிவம் என்பது சங்க இலக்கியங்களில் மிக அரிதாகவே உள்ளது. பிற்கால இலக்கியங்கள் எதுவும் முழுமையான வஞ்சிப்பாவில் இயற்றப் படவில்லை. முழு இலக்கியமும் வஞ்சிப்பாவாக அமைந்த நிலை சங்க இலக்கியத்திற்குப் பிறகு இருபதாம் நூற்றாண்டில் பெருஞ்சித்திரனார் இயற்றிய ‘மகுபுகு வஞ்சி’ எனக் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக அரிதாகவே வஞ்சிப்பா இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் சங்க இலக்கியத்தில் வஞ்சிப்பா இரண்டு நிலைகளில் இடம்பெற்றுள்ளது. வஞ்சியடிகள் விரவிய நிலையிலும் வஞ்சிப்பா என்று அடையாளப்படுத்தப்படும் நிலையிலும் எனச் சங்க இலக்கியங்களில் வஞ்சிப்பா செல்வாக்குப் பெற்று விளங்குகிறது. வஞ்சிப்பாவின் பயில்நிலையைப் பிற்கால இலக்கியங்களோடு ஒப்பிட்டு நோக்குகையில் சங்க இலக்கியத்தில்தான் வஞ்சிப்பாவின் இடம் குறிப்பிடும்படியாக அமைந்துள்ளது எனலாம். தொல்காப்பியம் குறிப்பிடும் வஞ்சிப்பா இலக்கணம் பிற்கால யாப்பிலக்கணிகள் குறிப்பிடும் வஞ்சிப்பா இலக்கணத்திலிருந்து மாறுபட்டுள்ளது. சுரிதகம் கொண்டு நேரிசை ஆசிரியத்தாலோ, நிலைமண்டில ஆசிரியத்தாலோ வஞ்சிப்பா முடிய வேண்டும் என்று தொல்காப்பியம் குறிப்பிடவில்லை. வஞ்சிப்பாவில் அமைந்த பாடல்கள் பிற்கால யாப்பிலக்கணிகள் சுட்டும் தனிச்சொல் பெற்று ஆசிரியச் சுரிதகத்தைக் கொண்டு வஞ்சிப்பா முடிய வேண்டும் என்ற இலக்கணத்தை வகுக்கும் களனாகச் சங்க இலக்கியம் அமைந்துள்ளதை அ.சதீஷ் புறநானூற்றில் உள்ள வஞ்சிப்பாடல்களின் மூலம் ஆராய்ந்து விளக்கியுள்ளார்.7 பத்துப்பாட்டு நூல்களில் ஆசிரியத்திற்கு அடுத்த நிலையில் இரண்டு இலக்கியங்களில் வஞ்சிப்பா பயின்றுவந்துள்ளது. வஞ்சியடி விரவிய நிலையில் பொருநராற்றுப்படை விளங்கியமை ஆசிரியப்பா இயலில் விரிவாக நோக்கப் பெற்றது. இங்குப் பத்துப்பாட்டில் வஞ்சிப்பாவாக அடையாளப்படுத்தப்படும் இரண்டு இலக்கியங்களான பட்டினப்பாலை, மதுரைக் காஞ்சி ஆகியவை முறையே தொல்காப்பிய நெறியினின்றும் பிற்கால யாப்பியல் நெறியினின்றும் நோக்கப்பெறுகின்றன. வஞ்சிப்பா தொல்காப்பியம் எடுத்துரைக்கும் வஞ்சிப்பாவின் இலக்கணம் என்பது விரிவானதாக அமையவில்லை. வெண்பா, கலிப்பா பற்றி விரிவாக எடுத்துரைக்கும் தொல்காப்பியர், ஆசிரியப்பா, வஞ்சிப்பா ஆகியவற்றிற்கு அவ்வளவு தெளிவான வரையறைகளைத் தரவில்லை என்ற கருத்தே ஆய்வுலகில் நிலவுகிறது. தொல்காப்பியர் எடுத்துரைக்கும் வஞ்சிப்பாவின் இலக்கணத்தை முதலில் தொகுத்து நோக்கலாம். தொல்காப்பியர் காலத்தில் இருசீரடியில் வஞ்சிப்பாவினைப் பாடுவதே பெருவழக்காக அமைந்துள்ளது. இதனை, வஞ்சி அடியே இருசீர்த் தாகும் (தொல்.செய்.நூ.43) என்ற நூற்பாவின் வாயிலாக அறியமுடிகிறது. அருகியே முச்சீரடி வஞ்சிப்பாவில் இடம்பெறுகிறது என்பதைத் தொல்காப்பியர், முச்சீ ரானும் வருமிடன் உடைத்தே (தொல்.செய்.நூ.45) என்ற நூற்பாவில் சுட்டுகிறார். வஞ்சிப்பாவின் இறுதி குறித்துத் தொல்காப்பியம் ஆசிரியப்பாவின் இறுதியைப் போல வஞ்சிப்பாவின் இறுதியமையும் என்கிறது. அந்நூற்பா வருமாறு: வஞ்சித் தூக்கே செந்தூக் கியற்றே (தொல்.செய்.நூ.68) இவ்வாறு சுட்டுவதன் மூலம் ஆசிரியப்பாவின் இறுதியான ஈற்றயலடி முச்சீராகவும் நாற்சீராகவும் அமைந்து இறுவது வஞ்சிப்பாவின் முடிபாகக் கூறலாம். மேலும் நேரீற்றியற்சீர் வஞ்சியின் இறுதியில் வராது (தொல்.செய்.நூ.26), வஞ்சியடிகளில் மூன்றெழுத்துச் சிறுமையாகவும் (தொல்.செய்.நூ.46) ஆறெழுத்து பெருமையாகவும் (தொல்.செய்.நூ.42) வரும், வஞ்சியில் அசை கூனாக வரும் (தொல்.செய்.நூ.48), வஞ்சி தூங்கல் ஓசை உடையது (தொல்.செய்.நூ.84), வஞ்சியின் இறுதி ஆசிரியத்தின் இறுதி போன்று முடியும் (தொல்.செய்.நூ.90), புறநிலை வாழ்த்து, வாயுறை வாழ்த்து, செவியுறை, அவையடக்கியல் நான்கும் வஞ்சிப்பாவில் பாடப்படா (தொல்.செய்.நூ.106,107) ஆகியன வஞ்சிப்பாவியல் தொடர்பாகத் தொல்காப்பியம் குறிப்பிடும் இலக்கணங்களாகும். தொல்காப்பியத்தை அடுத்து இடைக்கால, பிற்கால இலக்கண நூல்களில் வஞ்சிப்பாவின் இலக்கணத்தில் சில மாற்றங்கள் நிகழ்ந்தேறியுள்ளன. அதற்குச் சங்க இலக்கியத்தில் காணப்படும் வஞ்சிப்பாடல்கள் தரவுகளாக அமைந்துள்ளன என்பது ஆய்வுலகில் பரவலாக அறியப்படும் கருத்தாகும். பத்துப்பாட்டில் ஆசிரியத்திற்கு அடுத்த நிலையில் வஞ்சிப்பா இடம் பெறுகிறது. எட்டுத்தொகையிலும் புறநானூறு, பதிற்றுப்பத்து ஆகிய புறநூல்களில் வஞ்சிப்பாக்களும் வஞ்சியடிகளும் இடம்பெறுகின்றன. பத்துப்பாட்டிலும் புறநூல்களான மதுரைக்காஞ்சி வஞ்சிப்பாவில் அமைந்த நூல். பொருநராற்றுப் படையில் வஞ்சியடிகள் விரவிக் காணப்படுகின்றன. பட்டினப்பாலை மட்டும் வஞ்சிப்பாவில் அமைந்த அகநூலாகும். இருப்பினும் புறச்செய்திளை வஞ்சியடிகளிலும், அகச்செய்திகளை ஆசிரிய அடிகளிலும் எடுத்துரைக்கிறது. வஞ்சிப்பா ஆசிரியத்தோடு மிகவும் நெருக்கமாக அமைந்துள்ளதைத் தொல்காப்பிய நூற்பாக்கள் உறுதிப்படுத்தும் நிலையில் அகவல் ஆசிரியமாக மாறியதைப் போலவே வஞ்சிப்பாவும் வாய்மொழி வழக்கிலிருந்து உருப்பெற்றதாக அ.பிச்சை குறிப்பிடுகிறார். அப்பகுதி வருமாறு: வாய்மொழிப் பாடல்களாகிய வஞ்சிப்பாட்டு அரசு தோன்றிய காலகட்டத்தில் வரிவடிவமும் இலக்கண வரையறையும் பெற்றிருக்க வேண்டும்.8 வஞ்சிப்பா தொடக்க காலத்தில் பெருவழக்கு பெற்ற பா வடிவமாக விளங்கியது குறித்துச் சோ.ந.கந்தசாமி, ஏனைய பாக்களைவிட வஞ்சிப்பாவிற்குரிய சீர்கள் மிகப் பலவாக இருத்தலின், தமிழ் யாப்பு வரலாற்றின் தொடக்க காலத்தில் வஞ்சிப் பாடல்கள் பெருவழக்காகப் பயிலப் பெற்றனவாதல் கூடும்.9 என விளக்குகிறார். சங்க இலக்கியத்தில் பயிலும் ஆசிரியப்பாவில் வஞ்சியடிகள் வருவதற்கான பயன்பாடு குறித்து மறைமலையடிகள், தமிழில் இவை வஞ்சியடிகளையும் அகவலடிகளையும் ஒருசேரக் கூறுமிடத்துச் சிறிது சிறிது ஓசையினை வேறுபடுத்திச் சொல்தற்குப் பயன்படுகிறது.10 எனக் குறிப்பிடுகிறார். வஞ்சிப்பாட்டினைப் பற்றிய குறிப்பானது பொருநராற்றுப் படையில், கைக்கச டிருந்தவென் கண்ணகன் தடாரி இருசீர்ப் பாணிக் கேற்ப விரிகதிர் வெள்ளி முளைத்த நள்ளிருள் விடியல்... (பொருநர்.70-72) என இடம்பெற்றுள்ளது. இவ்வடிகளில் குறிப்பிடப்படும் ‘இருசீர்ப் பாணி‘ என்பது வஞ்சிப்பாட்டினைக் குறித்து நிற்பதாக ஆய்வாளர்கள் கருத்துரைக்கின்றனர். சங்க இலக்கியங்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு இரண்டையும் வடிவம் சார்ந்து ஒருசேர ஆராயுமிடத்து வஞ்சிப்பாக்களில், வஞ்சியடிகளில் அமைந்துள்ள பொருண்மை மிகவும் முக்கியமான ஒன்றாக அமைகிறது. அகப்பாடல்களில் வஞ்சியடிகளோ, வஞ்சிப்பாக்களோ இடம்பெறா நிலையில் புறச்செய்திகளை விளக்குமிடத்தில்தான் வஞ்சியடிகளும், வஞ்சிப்பாக்களும் இடம்பெறுகின்றன என்பதைச் சங்க இலக்கியத்தில் பயிலும் வஞ்சிப்பாக்கள் உறுதிசெய்கின்றன. பட்டினப்பாலை அகநூலாயினும் புறச்செய்திகள் வரும் இடங்களில்தான் வஞ்சியடிகள் பயின்று வந்துள்ளன என்பதும் கருத்தில் கொள்ளத்தக்கது. எட்டுத்தொகையின் புறநானூறு, பதிற்றுப்பத்து ஆகிய புறநூல்களில் ஆசிரியம், வஞ்சி என்ற இருவகை பாக்களும் இடம்பெற்றுள்ளது போலப் பத்துப்பாட்டிலும் இருவகை யாப்பு வடிவங்கள் பயின்றுவந்துள்ளன என்பதும் கருதத்தக்கது. வஞ்சிப்பா வகைகள் நால்வகைப் பாக்களுள் ஒன்றான வஞ்சிப்பா இலக்கியங்களில் பெருவழக்குப் பெறாத நிலையில் அமைந்துள்ளது. யாப்பிலக்கண வரலாற்றிலும் வஞ்சிப்பாவின் வளர்ச்சி மாற்றங்கள் என்பவை பதிவுபெறவில்லை. வஞ்சிப்பா என்பது இரண்டு தன்மைகளிலே இலக்கண நூல்களில் இடம்பெற்றுள்ளது. o தொல்காப்பியம் குறிப்பிடும் வஞ்சிப்பா அமைப்பு o பிற்கால யாப்பிலக்கணிகள் குறிப்பிடும் தனிச்சொல் வந்த சுரிதகம் பெற்ற வஞ்சிப்பா அமைப்பு தொல்காப்பியம், வஞ்சிப்பா தனிச்சொல் பெற்று ஆசிரியச் சுரிதகம் பெற்று முடியவேண்டும் என்று குறிப்பிடவில்லை. வஞ்சிப்பாவின் இறுதி ஆசிரிய இறுதி போல அமையும் என்பதை மட்டும் குறிப்பிட்டுள்ளது. வஞ்சிப்பாவினைப் பிந்தைய யாப்பிலக்கணிகளும் உரையாசிரியர்களும் குறளடி வஞ்சிப்பா, சிந்தடி வஞ்சிப்பா என இரண்டாகப் பாகுபடுத்தியுள்ளனர். இருசீர் பயின்றுவருவதைக் குறளடி என்றும் முச்சீர் பயின்றுவருவதைச் சிந்தடி என்றும் குறிப்பிட்டு வகைப்படுத்தியுள்ளனர். சங்க இலக்கியங்களில் முச்சீரைத் தொடக்கமாகக் கொண்ட வஞ்சிப்பாடல்கள் இடம்பெறவில்லை என்பதும் தொல்காப்பியம் முச்சீர் பயின்ற வஞ்சிப்பா அருகிய நிலையில் வரும் என்று குறிப்பிடுவதும் இத்தொடர்பில் இணைத்தெண்ணத்தக்கன. குறளடி வஞ்சிப்பா, சிந்தடி வஞ்சிப்பா ஆகிய இரண்டினையும் ஆசிரியவடி விரவும், விரவாத் தன்மையைக் கொண்டு விருத்தியுரை மேலும் உள்வகைப்படுத்துகிறது. ஆசிரிய இறுதிக்கு முன்பு உள்ள வஞ்சிப்பகுதியில் ஆசிரியவடி விரவாது வருவனவற்றை இன்னியல் வஞ்சி என்றும், ஆசிரிய இறுதிக்கு முன்பு உள்ள வஞ்சிப்பகுதியில் ஆசிரியவடி விரவி வருவனவற்றை விரவியல் வஞ்சி என்றும் வகைப்படுத்துகிறது. விருத்தியுரையின் அப்பகுதி வருமாறு: இவ்விரண்டு வஞ்சிப்பாவினையும் இவ்விரு பெயரானும் கூறுபடுப்ப, நான்காம்; இன்னியற் குறளடி வஞ்சிப்பா, விரவியற் குறளடி வஞ்சிப்பா, இன்னியற் சிந்தடி வஞ்சிப்பா, விரவியற் சிந்தடி வஞ்சிப்பா (யா.வி.ப.372). மேலும் ஒரு வஞ்சிப்பா முழுவதும் இருசீரடிகளால் அமைந்தால் இன்னியல் இருசீரடி வஞ்சிப்பா, முச்சீரடிகளால் அமைந்தால் இன்னியல் முச்சீரடி வஞ்சிப்பா, இருசீரடியில் தொடங்கி இடையில் வேற்றடிகள் விரவப்பெற்று அமைந்தால் விரவியல் இருசீரடி வஞ்சிப்பா, முச்சீரடியில் தொடங்கி இடையில் வேற்றடிகள் விரவப்பெற்று அமைந்தால் விரவியல் முச்சீரடி வஞ்சிப்பா என்றும் உள்வகைப்படுத்துகிறது. இருசீரடியும், முச்சீரடியும் தனித்தனியே அமைந்த நிலையில் குறளடி வஞ்சிப்பா, சிந்தடி வஞ்சிப்பா என்ற பெயர்களைப் பெற்று வழங்கும் நிலையில் இருசீரும் முச்சீரும் கலந்து வரும் நிலையில் அவ்வகையினை இலக்கண நூல்கள் தனித்து வகைப்படுத்தவில்லை. ஆனால் பேராசிரியர் இருசீரடியும் முச்சீரடியும் கலந்து வரும் வஞ்சிப்பாடல்களை மயக்கடி வஞ்சி (தொல்.செய்.நூ.74பேரா.) என்று குறிப்பிட்டுள்ளார். சங்க இலக்கியத்தில் இருசீரடியும் முச்சீரடியும் மயங்கி வந்த வஞ்சிப்பா அமைப்பிலான பாடல்கள் புறநானூற்றில் காணப்படுவதைக் குறித்து நச்சினார்க்கினியர் உரைப்பகுதியின் (தொல்.செய்.நூ.74நச்.) வாயிலாக அறியமுடிகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு புறநானூற்றில் மயக்கடி வஞ்சிப்பா அமைப்பிலான பாடல்கள் காணப்படுவதைக் குறித்து அ.சதீஷ், புறநானூற்றில் முச்சீரடியில் தொடங்கும் வஞ்சிப்பா ஒன்றும் இல்லை. இருசீரடியில் தொடங்கி இடையிடையே முச்சீரடிகளும் விரவி வரும் மயக்கடி வஞ்சிப்பா அமைப்பில் 6 (4,11,229,287,382,396) பாடல்கள் காணப்படுகின்றன.11 என ஆராய்ந்து எடுத்துரைத்துள்ளார். முன்னைய ஆய்வாளர்கள் மதுரைக் காஞ்சியையும் பட்டினப்பாலையையும் வஞ்சிப்பா என்றும் ஆசிரியப்பா என்றும் இருவேறு கருத்துகளை எடுத்துரைக்கின்றனர். ஆசிரியப்பாவின் முதலடியும் ஈற்றடியும் நாற்சீரடியாக அமைய வேண்டும் என்ற இலக்கணம் இவ்விரண்டிற்கும் பொருந்தாத நிலையில் இவற்றை ஆசிரியப்பாவாகச் சுட்டுவதில் இடர்ப்பாடு உள்ளது. எனவே பாடலின் தொடக்கம் இருசீரடியாக அமைதல் என்ற அடிப்படையை நோக்கும்போது இவை வஞ்சிப்பாக்களாக இங்குச் சுட்டப்படுகின்றன. மதுரைக்காஞ்சியையும் பட்டினப்பாலையையும் இருசீர்களால் தொடக்கம் பெற்று இடையிடையே வேற்றடிகளான ஆசிரியவடிகள் பயின்ற நிலையில் விருத்தியுரை குறிப்பிடும் ‘விரவியல் குறளடி வஞ்சிப்பா’ என்ற வகைக்குள் அடக்கலாம். பத்துப்பாட்டில் பயின்றுவந்துள்ள மதுரைக்காஞ்சியும் பட்டினப்பாலையும் வஞ்சியடிகளைத் தொடக்கமாகக் கொண்டு ஆசிரியவடிகளைப் பெற்று நேரிசை ஆசிரியப்பாவின் இறுதியைப் போல முடிந்துள்ளன. தனிச்சொல், சுரிதக அமைப்பு என்பவை இவ்விரண்டு இலக்கியங்களிலும் இடம்பெறவில்லை. ஆசிரிய வடிகளைப் பெற்று முடிவதற்கு முன் தனிச்சொல் இடம்பெற வேண்டும். அவ்வாறான அமைப்பினையுடைய பாடல்கள் புறநானூற்றில் ஏழு பாடல்கள் காணப்படுவதாக அ.சதீஷ் எடுத்துரைத்துள்ளார். பிற்கால இலக்கண ஆக்கத்திற்கு இலக்கியமாக அப்பாடல்கள் அமைந்துள்ளதாகவும் அவர் கண்டுகாட்டியுள்ளார்12. வஞ்சிப்பாவின் பொருண்மை பாக்களுக்கான பொருண்மை குறித்துத் தொல்காப்பியம் விளக்குகிறது. அறம், பொருள், இன்பம் மூன்றும் நாற்பாக்களுக்கும் உரியன என்றும் புறநிலை வாழ்த்து, வாயுறை வாழ்த்து, அவையடக்கியல், செவியறிவுறூஉ என்ற நான்கும் கலிப்பாவிலும் வஞ்சிப்பாவிலும் பாடப்பெறுவதில்லை என்றும் வரையறுக்கின்றது. யாப்பருங்கல விருத்தியுரையில் புறப்பொருள் நூலான பன்னிருபடலத்தின் நூற்பாவும் மாபுராணத்தின் நூற்பாவும் வஞ்சிப்பாவின் பொருண்மையினை எடுத்துரைப்பதாகக் காணப்படுகின்றன. அப்பகுதி வருமாறு: ‘வஞ்சியுள் அகவல் மயங்கவும் பெறும்’, என்னாது ‘மயங்கினும் வரையார்’ என்று மற்றொரு வாய்பாட்டாற் சொல்ல வேண்டியது என்னை? ‘வஞ்சிப்பாவினுள் ஆசிரியம் மயங்கி வருவது, அகத்திணை அல்லாத வழியே’ என்ப ‘ஒருசாராசிரியர்’, என்றற்கு வேண்டப்பட்டது. என்னை? அகத்திணை மருங்கின் அளவு மயங்கி விதப்ப மற்றவை வேறா வேண்டி வஞ்சி அடியின் யாத்தனர் வஞ்சி அகத்திணை மருங்கின் அணையு மாறே என்பது பன்னிருபடலத்துட் பெருந்திணைப் படலத்துச் சூத்திரம் ஆகலின். ‘அஃதே எனின், பட்டினப்பாலைத் தொடக்கத்தன அகத்திணை வஞ்சி அமையா பிற’, எனின், ‘அத்திணையகத்து வஞ்சி வருவது சிறப்பின்றாயினும், சிறுபான்மை வரப்பெறும்’ என்பார் உளராகலின் அவையும் அமையும் என்பது என்னை? அகத்திணை யகவயின் நிற்ப வஞ்சி சிறப்பில எனினும் சிலவிடத் துளவே என்பது மாபுராணச் சூத்திரம் ஆகலின் (யாப்.வி.ப.134). வஞ்சிப்பாவில் ஆசிரியவடிகள் மயங்கி வரும் நிலையில் பாடுபொருள் புறப்பொருண்மையில் அமைந்திருக்க வேண்டும் என்று விருத்தியுரை எடுத்துரைக்கிறது. மேலும் பட்டினப்பாலையில் ஆசிரியவடிகள் இடம் பெறுவதைச் சுட்டிக்காட்டி சிறுபான்மை அகநூல்களிலும் வஞ்சிப்பாவில் ஆசிரியவடிகள் இடம்பெறும் என்றும் குறிப்பிடுகிறது. சங்க இலக்கியங்களில் பயிலும் ஆசிரியப்பாக்களோடு வஞ்சியடிகள் விரவும் இடங்களை அதன் பொருண்மையே வரையறை செய்வதாக அ.சண்முகதாஸ், புறநானூற்றில் 4,11,239ஆம் பாடல்கள் வஞ்சிப்பாவாலானவை. புறநானூறு, பதிற்றுப்பத்து, பத்துப்பாட்டிலுள்ள புறப்பாடல்கள் ஆகியவற்றிலே ஆசிரியப்பாவுடன் வஞ்சியடிகள் கலந்து வந்துள்ளன. அகத்திணைப் பாடல்களிலே வஞ்சியடிகள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும். எனினும், குறிஞ்சிப்பாட்டிலே மலர்களை நிரல்படுத்திக் கூறுமிடத்து வஞ்சியடிகள் இடம்பெறுகின்றன. இதனால், வஞ்சிப்பாவினுடைய ஒரு பண்பு புலப்படுகின்றது. வீரம், ஆடல் ஆகியவற்றினொடு தொடர்புடையதாகவும், விறுவிறுப்புள்ள பண்புடையதாகவும், பலவற்றை நிரைப்படுத்த ஏற்றதாகவும் அமைவது வஞ்சிப்பா எனக் கொள்ளலாம்.13 எனக் குறிப்பிடுகிறார். இங்குக் குறிஞ்சிப்பாட்டில் மலர்களை நிரல்படுத்தும் பகுதியில் வஞ்சியடிகள் இடம்பெறுவதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இயற்சீர்களால் அமைந்த நாற்சீரடிகளிலே அப்பகுதி அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சங்க இலக்கியத்தில் அகப்பொருளில் வஞ்சியடிகள் இடம் பெறவில்லை. கலிப்பா, பரிபாடல் ஆகியவற்றில் மட்டும் அகப்பொருண்மையில் வஞ்சியடிகள் இடம்பெற்றுள்ளதாக அ.பிச்சை, வஞ்சிப்பாவில் அகம் பாடுபொருளாக அமையவில்லை. அகப்பொருளைக் கொண்ட ஆசிரியத்திலும் (பட்டினப்பாலை தவிர) கூட வஞ்சியடிகள் கலக்கவில்லை. இருப்பினும், அகப்பொருளைக் கொண்ட கலிப்பா ஒன்றிலும் (147/62-63) பரிபாடலிலும் (1/55-56) வஞ்சியடிகள் விரவுகின்றன. பெரும்பாலும் புறப்பொருளை உள்ளடக்கமாகப் பெற்றுள்ள பாக்களில் வஞ்சியடிகள் விரவி மயங்கிசை ஆசிரியத்தைத் தருகின்றன.14 எனக் குறிப்பிடுகிறார். தொல்காப்பியம் வஞ்சியில் வாரா எனக் குறிப்பிட்ட செவியுறையும் வாயுறை வாழ்த்தும் புறநானூற்று வஞ்சியில் வந்திருப்பதும் புறப்பொருளில் குறிப்பாக வீரம், ஆடல், அதனோடு தொடர்புடைய நிகழ்வுகள் ஆகியன மட்டுமே வஞ்சியில் பாடப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கனவாகும். இத்தொடர்பில், மறக்கள வஞ்சியின் இலக்கிய வகையை எடுத்துரைக்கும் பன்னிரு பாட்டியல் நூற்பாவின் கருத்தும் இணைத்தெண்ணத்தக்கதாக அமைகிறது. அந்நூற்பாவில் வஞ்சிப்பாவின் பொருண்மை வெளிப்படையாகச் சுட்டப்பட்டுள்ளது. நூற்பா வருமாறு: குறள்சிந் தளவடி அகவ லடிவிராஅய் வஞ்சிச் செய்யுளின் மன்னர் மறக்களம் எஞ்சா துரைப்பது மறக்கள வஞ்சி (ப.பா.நூ.200) இடையிடையே குறளடியும் சிந்தடியும் அளவடியுமாகிய அகவலடி விரவிவரும் வஞ்சிப்பாவினால் வேந்தர்களின் போர்க்களச் செய்தியை அமைத்துப் புறப்பொருள் இலக்கணத்திலிருந்து வழுவாமல் பாடப்படுவது மறக்கள வஞ்சியாகும். ஆனால் இலக்கண நிலையில் வரையறையைப் பெற்றுள்ள மறக்கள வஞ்சியில் இலக்கியம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வஞ்சிப்பாவில் அமைந்த இவ்வகையான இலக்கியங்கள் வழக்கிலிருந்தால் வஞ்சியாப்பின் வளர்நிலை மாற்றங்களை அறிய அவை தரவுகளாக அமைந்திருக்கும். சங்க இலக்கியங்களுக்குப் பிறகு வஞ்சிப்பா தொடர்ச்சி அருகியமைக்கு அப்பாவமைப்பில் பாடப்பட்ட பாடுபொருளின் தொடர்ச்சியின்மையும் ஒரு காரணமாகக் கூறலாம். பத்துப்பாட்டு: வஞ்சிப்பா புலவர்கள் காலந்தோறும் இலக்கியத்தில் பொருண்மை சார்ந்தும் வடிவம் சார்ந்தும் பல புதுமைகளைப் புகுத்தியுள்ளனர். சங்கப் புலவர்களும் தம் பாடல்களில் பொருளமைப்பிலும் வடிவ அமைப்பிலும் பல புதுமைகளைப் புகுத்திப் பாடியுள்ளனர். சங்க வஞ்சியமைப்பில், ஆசிரியத்திடையே வஞ்சியடிகள் விரவுதல், தனிச்சொல் பெறல், அடியின் இடையிலும் கடையிலும் கூன் பெறுதல், அந்தாதித் தொடையமைதல் முதலியன முந்தைய இலக்கணங்களில் வரையறை பெறாத, சங்கப் புலவர்களால் கையாளப்பட்ட யாப்பியல் புதுமைகளாகும். இப்புதுமைக்கூறுகள் பிற்காலத்தில் இலக்கண வரையறையைப் பெற்றன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். பத்துப்பாட்டு வஞ்சியமைப்பினை, ஆசிரியத்திடையே விரவிய வஞ்சியடி அமைப்பு, பாடலின் தொடக்கம் இருசீராக அமைந்த வஞ்சிப்பா அமைப்பு என்னும் இரு தன்மைகளில் நோக்கலாம். இப்பகுதியில் பத்துப்பாட்டில் தொடக்கம் இருசீராக அமைந்த வஞ்சிப்பா அமைப்பில் உள்ள பாடல்கள் மட்டும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன. வஞ்சியடிகள் விரவிய பொருநராற்றுப்படை ஆசிரியப்பாவாகக் கொள்ளப்படுகிறது. பத்துப்பாட்டில் வஞ்சிப்பாக்களாக அடையாளம் பெறுவன பட்டினப்பாலையும் மதுரைக்காஞ்சியும் ஆகும். அவற்றை முறையே காணலாம். மதுரைக்காஞ்சி மாங்குடி மருதனாரால் பாடப்பட்டது. 782 அடிகளைக் கொண்ட பாவடிவமாகச் சங்க இலக்கியத்திலே மிக அதிக அடிகளைக் கொண்ட நெடும்பாடலாக மதுரைக்காஞ்சி விளங்குகிறது. மதுரைக்காஞ்சியின் பாவியலை ஆராய்ந்த சோ.ந.கந்தசாமி, நெடுஞ்செழியனின் பல்வகைச் சிறப்பும், பாண்டி நாட்டின் திணை வளமும், மதுரை மாநகரின் அமைப்பும் அழகும், அறவோர் நிலையும், சமயச்சார்பும், நெடுஞ்செழியனின் ஆற்றலும், கொடைச் சிறப்பும் பாடுதற்கு ஆசிரியம் விரவிய இவ்வஞ்சியாப்பினைக் கவிஞர் கைக்கொண்டார். இதனுள் 20 இடங்களில் வஞ்சியடிகள் பயின்றுவந்துள்ளன. ஓங்குதிரை வியன்பரப்பின் ஒலிமுந்நீர் வரம்பாகத் தேன்தூங்கும் உயர்சிமைய தலைநாறிய வியன்ஞாலத்து...(1-4) இலங்குமருப்பிற் களிறுதொடுக்கும் பொலந்தாமரைப் பூச்சூட்டியும் நலஞ்சான்ற கலஞ்சிதறும் பல்குட்டுவர் வெல்கோவே (102-105) இப

Comments

Popular posts from this blog

UGC NET TAMIL - TNPSC தமிழ் இலக்கிய வரலாறு தொடர்பான விரிவான வினாக்கள்

பல்லவர் கால இலக்கியங்கள் - பக்தி இலக்கியக் குறிப்புகள்

UGC Tamil TNPSC Tamil - பக்தி இலக்கிய வினாக்கள்