சில கவிதைகள் - துளிகளாக
எங்கே இந்த புதுமை
நம்மில் புதுமைக்கு
புதிதாய் பூக்கும் மலர்க்கும்
புதிதாக வரும் ஆண்டுக்கும்
நாளை புதிதாக இணையும்
ஒவ்வொரு நிமிடமும்
புதிதாக நம்மில்
புதிய புத்துணர்வை
ஊட்டியப்படி
புத்தாண்டு
காயப்படுத்தி விடக் கூடாது
என்பதற்காகச் சில மெளனங்கள்
காயப் படுத்துவதற்காகவே
சில மெளனங்கள்
எழுதுகோலை எடுக்கா விடில்
தூக்கம் வரவில்லை.....
இன்று எழுதும் வேலையை
நினைக்கையில் துக்கமாக.....
நாடி நரம்புகளில் இழையோடும் ரேகைகள்
சில நேரங்களில் முண்டி அடித்துக் கொண்டு எழுத எத்தனித்து விடுமோ.....
என்ற பயம் பற்றிக் கொள்கிறது
எழுதும் கலையா
எழுதுவதே கவலையா
தினம் ஒரு பக்கம்
பெண்கள் சுதந்திரமாய்
எல்லைகளற்ற பிரபஞ்சத்தில் சாத்தியமாகாதது
நான்கு எல்லை சுவர்களில் வசமானது
அவளுக்கான இருத்தல்
அவள் வீட்டு சமையலறை
வலியும் வேதனைகளும்
கால் கடுக்க நின்று
கை நோக கிளறி
சுவை மாறாமல்
சமைத்த உணவு
பரிமாற
ஆள் இன்றி
அவளுக்காகக் காத்திருக்கும்
எதையும் சுவை பாராமல்
அசைபோடும் அவள் இதயம்
தனித்து விடப்பட்ட வனாந்திரத்திலே
தண்ணீர் இருந்தும் தாகம் இல்லை
பழங்கள் கிடைத்தும் புசிக்க வில்லை
கால் நெடுக நடந்தும் களைப்பில்லை
தனிமையிலே மனம் எதையும் தேடாது
மனிதனைத் தவிர
வாழ்க்கை
உன் பிம்பம்
எதிராக
நடப்பது
கால் பற்றி எரியும்
கணுக்கால் நிற்க முடியாமல்
நிற்கும் தூரத்தில் இழைப்பாற
என்னைப் போல
ஒற்றைப் பனைமரம்
என் எதிரே...
சொற்களால் ஓவியம் தீட்ட
காவியமான
கவிதைகளை கசக்கி எரியாலாமா
காதிதங்களாக நினைத்து
வார்த்தைகளைச் சிறை பிடித்த பின்
என் எழுதுகோலுக்கு ஆயுள் தண்டனையா
எனக்கு எப்போது?
வணக்கம் நன்றி
போன்ற சொல்லாடல்கள்
வாழ்க்கையை அழகுப்படுத்துகிறதா
உறவுகளை அந்நியப் படுத்துகிறதா
உறவுகளைச் செதுக்க கற்றுக்கொள்
என் செய்வேன் எனக்கு வாய்த்த
உளியிடம் தான் உள்ளது
என்பதை ஏனோ
மறந்து விடுகிறது
உலகம்
சுதந்திர காற்றைச் சுவாசிக்க ஆரம்பித்து
பல காலங்கள் உருண்டோடி விட்ட நிலையில்
வளர்ச்சி என்பது
காற்று மாசுபாடு போல
சுதந்திர மாசுபாடு...
நான் என்ற அகம்பாவம்
தேவையில்லை
நான் என்ற ஆணவம்
தேவையில்லை
நான் என்ற அகந்தை
தேவையில்லை
நானே தேவையில்லை
மனிதனாக வாழ
நான் நானாக
நீர்த்துப் போகாத காலங்கள்
ஒவ்வொரு நாளும் நினைவுகள் துடிக்கும்
நீளும் வாழ்வில் வண்ணக் கோலங்கள்
தெறிக்கவிடும் சவால்கள்
வாழ்வில் நாள்தோறும் எதிர்ப்படும் முகாந்திரம்
சிலிர்க்க வைக்கும் அனுபவங்கள்
மொட்டு அவிழும் நேரம்
சிந்தனையில் சிலாகிக்க இடம் இல்லை
மூலையில் முடங்கியது வீரம்
சின்ன சின்ன சண்டைகள்
இடைவெளியை
உருவாக்கிட
கோபங்கள் வெறுப்பாக மாறும்
நிலையில்
வெறுமையில் மனம் நிற்க
துணையாகக் கையில்
தூரிகை மட்டுமே
காதலில் முழ்கிட
திளைத்திட காதல் மட்டும்
போதும் என்று நினைத்திருந்தேன்
காதலித்த பிறகு தான்
புரிந்தது காதலிக்க
காதலைத் தவிர
அனைத்தும் தேவை
பெண்ணுடலின் மாற்றங்களை
புரிந்து கொள்ள
எத்தனிக்காத ஆண் மனம்
விருப்பு வெறுப்பற்ற
ஸ்பரிச தீண்டல்கள்
உருகி ஓடும் குருதியோடு
போராடி பெற்ற பிள்ளை
வந்த பிறகும்
என்னவன்
எனக்காக உள்ளன்போடு
அரவணிக்காமல்
தாயிடம் வரும்
வாஞ்சை
தாயான தாரத்திடம் மட்டும்
வர மறுப்பதேன்
தன் வாழ்வைத்
திருமணப் பந்தத்தில்
பிணைத்துக் கொள்ளும்
இருவர் உள்ளங்கள்
ஒரே நேர்கோட்டில்
பயணிக்க வில்லை
இரயில் பயணங்கள்
சுகமானது
இரயில் ஓடும்
தண்டவாளங்களோ
அருகருகே
அறிந்திராமல்
கடமையை ஆற்றிடுகிறது
Comments
Post a Comment