பக்தி இலக்கியம் வைணவம்
ஆழ்வார்கள்
திருமாலை முழுமுதல் கடவுளாகக் கொண்டது வைணவ சமயம். திருமாலின் அடியார்களை ஆழ்வார்கள் என்று வழங்குவர். சைவ சமயத் தொண்டர்களை நாயன்மார்கள் என்று வழங்குவதற்கு இணையானது இவ்வழக்கம்.
ஆழ்தலாவது மூழ்குதல். உலக இன்பங்களில் ஈடுபாடு கொள்ளாது, எந்நேரமும் திருமால் பற்றிய சிந்தனையிலேயே ஆழ்ந்து கிடப்போர் என்று ஆழ்வார் என்ற சொல்லுக்குப் பொருள் கொள்வர். உண்ணும் சோறும், பருகும் நீரும், தின்னும் வெற்றிலையும் அவர்களுக்குத் திருமாலே என்பர்.
சைவ அடியார்கள் அறுபத்து மூவர் என்பதுபோல், வைணவச் சமய அடியார் பன்னிருவர் என்று வழங்குவர். அவர்களின் திருப்பெயர்கள் வருமாறு:
1. பொய்கையாழ்வார்
2. பூதத்தாழ்வார்
3. பேயாழ்வார்
4. திருமழிசை ஆழ்வார்
5. பெரியாழ்வார்
6. ஆண்டாள்
7. தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்
8. திருப்பாணாழ்வார்
9. நம்மாழ்வார்
10. மதுரகவி ஆழ்வார்
11. திருமங்கை ஆழ்வார்
12. குலசேகர ஆழ்வார்.
இவர்கள் இயற்றியருளிய பாடல்களின் தொகுப்புக்கு நாலாயிரத்திவ்வியப் பிரபந்தம் என்று பெயர்.
முதல் ஆழ்வார்கள்
பொய்கையாழ்வார்
பூதத்தாழ்வார்
பேயாழ்வார்
இப் பன்னிருவருள்ளும் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னும் மூவரும் ஏனையோர்க்குக் காலத்தால் முற்பட்டோர் ஆவர். எனவே இவர்களை முதல் ஆழ்வார்கள் என்பது மரபு.
உபதேச ரத்தினமாலை என்ற நூல் மணவாள மாமுனிகள் என்னும் பெரியாரால் செய்யப்பட்டது. இந்நூல் பன்னிரு ஆழ்வார்கள் பற்றிய அரிய பல செய்திகளைத் தருகின்றது. முதல் ஆழ்வார்கள் பற்றிக் குறிப்பிடும்போது ஏனைய ஒன்பதின்மருக்கும் முதலாழ்வார்கள் காலத்தால் முற்பட்டோர் எனக் கூறியுள்ளது.
இம்மூவரின் வரலாறுகள் வைணவ மரபில் பிரிக்க முடியாதபடி பின்னிப் பிணைந்துள்ளன. இம்மூவரும் ஐப்பசி மாதத்தில் அவதரித்தனர். மேலும் இவர்கள் மானுடத் தாயின் வயிற்றில் தோன்றாதவர்கள் என்று கருதுவர். தமக்கு எல்லாமே திருமால் என்று கொண்டு, இறைத் தொண்டில் ஈடுபட்டனர். ஒருவரையொருவர் அறியாமல், தனித்தனியே நாடு முழுவதும் அலைந்து திரியும் வாழ்வை நடத்தினர்.
இவர் மூவரையும் ஒரே நேரத்தில் ஆட்கொள்ள விரும்பின திருமாலின் அருள் ஆணையின்படி இம்மூவரும் திருக்கோவலூரில் சந்திக்கும் நிலை தோன்றிற்று. ஒரு நாள் கதிரவன் மறைந்த மாலை வேளையில் பொய்கையாழ்வார் திருக்கோவலூர்க்குச் சென்றார். அங்கு இருந்த மிருகண்டு முனிவர் திருமாளிகைக்குச் சென்று வழிபட்டார். அம்மாளிகையின் இடைகழியில் (ரேழி) படுத்தார்.
சிறிது நேரத்தில் பூதத்தாழ்வாரும் அங்கு வந்து சேர்ந்தார். இருவரும் வைணவ மரபுப்படி ஒருவரையொருவர் வணங்கி மகிழ்ந்தனர். அப்போது பொய்கையார் மற்றவரிடம், “இவ்விடம் ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம்” (அமர்ந்திருக்கலாம்) என்றார். அவ்வாறே இருவரும் அமர்ந்த நிலையிலேயே பெருமானின் பெருமைகள் பற்றி உரையாடியிருந்தனர். அப்போது பேயாழ்வாரும் அவ்விடம் வந்து சேர்ந்தார். அவர்கள் ஒருவரையொருவர் வணங்கி மகிழ்ந்தனர். அப்போது, முதலிருவரும் பேயாழ்வாரிடம், “இவ்விடம் இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம்” என்றனர். அவ்வாறே மூவரும் நின்ற நிலையிலேயே பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது உலகளந்த பெருமான் தம் திருவிளையாடலை நிகழ்த்தினார். அவர் திரு ஆணைப்படி செறிவான இருள் சூழ்ந்தது; பெருமழை பொழிந்தது. பெருமான் ஒரு பெரிய உருவமெடுத்து அம்மூவரிடையே புகுந்து நெருக்குதலை உருவாக்கினார். சட்டென உருவான அந்த நெருக்கத்திற்குக் காரணம் அறியாமல் மூவரும் திகைத்தனர்.
பொய்கையாழ்வார் இருளை ஓட்டிட விளக்கேற்ற விரும்பினார். இம்மண்ணுலகத்தையே அகலாகக் கொண்டு, உலகை வளைத்துக் கிடக்கும் கடலையே நெய்யாக வார்த்து, கதிரவனையே சுடராகக் கொளுத்தினார். பூதத்தாழ்வாரும் விளக்கேற்றினார். அவர் அன்பையே தகழியாக்கினார்; ஆர்வத்தையே நெய்யாக ஊற்றினார்; உருகும் தம் சிந்தையையே திரியாக அமைத்தார்; ஞானத்திருவிளக்கை ஏற்றினார். இப்பெருமக்கள் ஏற்றிய விளக்குகளின் ஒளி இருளை ஓட்டியது. அதன் வெளிச்சத்தில் பேயாழ்வார் பெருமானின் திருவடிவினைக் கண்டார். அவர் கண்ட காட்சியை மற்றைய இருவரும் பின்னர்க் கண்டனர். அவர்கள் பெற்ற வியப்புக்கு உரிய அந்த இறைக்காட்சியைப் பொருளாக வைத்து மூன்று திருநூல்களை வெளியிட்டருளினர். அவை ஒவ்வொன்றும் நூறு வெண்பாக்களால் ஆனவை. அவை அந்தாதித் தொடையில் அமைந்தன. அவற்றின் திருப்பெயர்கள் முறையே முதல் திருவந்தாதி, இரண்டாம் திருவந்தாதி, மூன்றாம் திருவந்தாதி என்பனவாகும். இவை, நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் உட்பிரிவுகளுள் இயற்பா என்ற பகுப்பில் அடங்குவனவாகும். மேலே சொன்ன வரலாற்றை விளக்குவனவாக, திருவந்தாதிகளின் முதல் வெண்பாக்கள் விளங்குகின்றன.
Comments
Post a Comment