சேர மன்னர்களின் வரலாறு
சேர மன்னர்கள்
செந்தமிழ் வேந்தர் மூவருள் (சேரர், சோழர், பாண்டியர்) சேரர் சிறந்தவராவர் என்ற கொள்கை, பழங்கால மக்களிடையேயும், அக்காலப் புலவர்களிடையேயும் நிலவியிருந்தது. இவர்களுக்கு வானவர் என்ற பெயரும் உண்டு.
சேர நாட்டையாண்ட சேர மன்னர்கள் இரு கிளையினராகக் காணப்படுகின்றனர். ஒருவர் உதியன் சேரலாதன் வழி வந்தவர்கள், மற்றொருவர், இரும்பொறை என்ற பெயரால் அழைக்கப்படுவோர். இவர்களுள் முன்னவர் வஞ்சியைத் தலைநகராகக் கொண்ட உள்நாட்டுப் பகுதியினையும், பின்னவர் தொண்டியைத் தலைநகராகக் கொண்ட கடற்கரைப் பகுதியையும் ஆண்டவராவர். சேர மன்னர்கள் விற்கொடியைக் கொண்டிருந்தனர்.
1 உதியன் சேரலாதன்
சங்க காலச் சேர மன்னர்களுள், வரலாறு விளங்க வாழ்ந்த முதல் சேர மன்னன், உதியன் சேரலாதன். இவன் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன், உதியன் சேரலாதன், உதியஞ்சேரல் என்றெல்லாம் அழைக்கப் பெறுகிறான். வெளியன் வேண்மான் என்னும் வேளிர் குலத் தலைவன் மகள் நல்லினி இவனுடைய மனைவி ஆவாள். இவன் மைந்தர்கள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், பல்யானைச் செல்கெழுகுட்டுவன் என்னும் இருவரும் ஆவர்.
உதியன் சேரலாதன் ஆற்றிய அரிய செயல்கள் இரண்டு ஆகும். ஒன்று தன் நாட்டு எல்லையை விரிவாக்கியது. மற்றொன்று பாரதப் போரில் பெருஞ்சோறு அளித்தது ஆகும்.
உதியன் சேரலாதன், தமிழகம் முழுமையும் தன் ஒரு குடைக்கீழ் வைத்து உலகாண்ட பேரரசன், இவன் கிழக்கு மேற்கு ஆகிய பெருங்கடல்களை எல்லையாகக் கொண்ட நாட்டை ஆண்டு வந்தான். இம்மன்னனைப் போற்ற வந்த முரஞ்சியூர் முடிநாகராயர் என்னும் புலவர், “அரசே! கீழ்க்கடலும் நினதே, மேலைக்கடலும் நினதே, ஆதலின் ஞாயிறு தோன்றுவதும் உன் கடலிலேயே, மறைவதும் உன் கடலிலேயே” என்று கூறுகிறார். இதனை,
நின் கடல் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின்
வெண் தலைப் புணரிக்குட கடல் குளிக்கும்
(புறநானூறு: 2: 9-10)
என்ற அவருடைய பாடல் அடிகளால் அறியலாம்.
உதியன் சேரலாதன் பெருஞ்சோறு அளித்த நிகழ்ச்சியைப் பாராட்டிய புலவர்கள், முரஞ்சியூர் முடிநாகராயரும், மாமூலனாரும், கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமானும், இளங்கோவடிகளும் ஆவர். பாண்டவர் ஐவரும், கௌரவர் நூற்றுவரும் மேற்கொண்ட பாரதப் போரில் அப்போர் முடியும் வரையில் இரு திறப்படையினருக்கும் இவன் பெருஞ்சோறு அளித்தான் என்று இவர்கள் குறிப்பிடுகின்றனர். இவன் பெருஞ்சோறு அளித்ததை முரஞ்சியூர் முடிநாகராயர்,
அலங்கு உளைப்புரவி ஐவரொடு சினைஇ
நிலம் தலைக் கொண்ட பொலம் பூந்தும்பை
ஈர் ஐம்பதின்மரும் பொருது களத்து ஒழிய
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்
(புறநானூறு, 2 : 13-16)
என்று கூறுகிறார்.
இக்கருத்துப் பற்றி ஆராய்ச்சியாளர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன.
உதியன் சேரலாதன் தன் எல்லையை விரிவுபடுத்த வேண்டிக் கரிகால் சோழனோடு போரிட்டுத் தோல்வியுற்றான் என்றும், அப்போரில் முதுகில் ஏற்பட்ட புண்ணிற்கு நாணி வடக்குத்திசை நோக்கி அமர்ந்து உண்ணா நோன்பிருந்து உயிர் விட்டான் என்றும் மாமூலனார் அகநானூற்றில் குறிப்பிடுகிறார்.
கரிகால் வளவனொடு வெண்ணிப் பறந்தலைப்
பொருது புண் நாணிய சேரலாதன்
அழிகள மருங்கின் வாள் வடக் கிருந்தென
(அகநானூறு, 55: 10-12)
2 இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
சேர மன்னர்களுள் சிறந்தோனாகிய செங்குட்டுவனையும், சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகளையும் பெற்றெடுத்த பெருமைக்குரிய பேரரசன் ஆவான் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். இம்மன்னன் குடவர் கோமான் நெடுஞ்சேரலாதன் எனவும், குடக்கோ நெடுஞ்சேரலாதன் எனவும் அழைக்கப் பெற்றவன் ஆவான். இவன் உதியன் நெடுஞ்சேரலாதனின் மைந்தன் ஆவான். இவனுக்கு இரு மனைவியர். முதல் மனைவி நற்சோணை என்பவள் ஆவாள். இரண்டாவது மனைவி வேள்விக் கோமான் பதுமனின் மகள் ஆவாள். நற்சோணையின் வயிற்றில் தோன்றியவர்கள் செங்குட்டுவனும், இளங்கோவடிகளும் ஆவர். செங்குட்டுவன்,
நெடுஞ்சேரலாதற்குச்
சோழன் மணக்கிள்ளி ஈன்ற மகன்
(பதிற்றுப்பத்து, பதிகம் – 5ஆம் பத்து: 2-3)
என்று பதிற்றுப்பத்துப் பதிகத்தில் குறிக்கப்படுவது காணலாம்.
நெடுஞ்சேரலாதன், இமயமும் குமரியும் இருபால் எல்லையாகக் கொண்டு ஆட்சி செய்தான். பெரும்படையுடன் வடநாடு சென்று ஆரிய அரசர்களை வென்று அவ்வெற்றிக்கு அறிகுறியாக இமயமலை மீது தன் அரசின் அடையாளமாகிய வில்லினைப் பொறித்து மீண்டான் என்பது வரலாறு.
அமைவரல் அருவி இமையம் வில் பொறித்து
(2ஆம் பத்து-பதிகம்: 4)
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் பெற்ற மற்றொரு பெரிய வெற்றி கடற்கொள்ளையர் கடம்பரை வென்றதாகும். இவன் ஆட்சிக் காலத்தில் கடம்பர் என்பார் மேலைக் கடலில் ஒரு தீவில் வாழ்ந்திருந்தனர் என்றும், அவர்கள் அத்தீவு வழியாகச் செல்லும் வாணிகக் கப்பல்களை வழிமறித்துக் கொள்ளையடித்தனர் என்றும் கூறுவர். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் கப்பல் படையுடன் சென்று அவர்களை வென்று அவர்களுடைய காவல் மரமாகிய கடம்ப மரத்தினை வெட்டி அதில் வீரமுரசம் செய்தான் என்பதை அகநானூறு பின்வருமாறு குறிப்பிடுகிறது.
சால்பெருந் தானைச் சேர லாதன்
மால்கடல் ஓட்டிக் கடம்பு அறுத்து இயற்றிய
பண் அமை முரசின் கண் அதிர்ந்தன்ன
(அகநானூறு, 347:2-4)
(தானை = படை; மால் கடல்= பெரிய கடல்; ஓட்டி = பகைவர்களை விரட்டி; அறுத்து = வெட்டி; இயற்றிய = செய்த.)
நெடுஞ்சேரலாதன் ஆன்றோர்களை ஆதரித்தான். இம்மன்னன் தனக்கு வரும் திறையினைப் பரிசிலர்க்கும், புலவர்க்கும் வாரி வழங்கிய வள்ளல் ஆவான். இவன் தன்னைப் புகழ்ந்து பாடிய குமட்டூர்க் கண்ணனார் என்ற புலவருக்கு, தன் ஆட்சிக்கு உட்பட்ட உம்பற்காடு என்னும் பகுதியில் உள்ள ஐந்நூறு ஊர்களையும், தென்னாட்டிலிருந்து வரும் வருவாயில் ஒரு பாகத்தையும் கொடுத்தான். இவன் ஐம்பத்து எட்டு ஆண்டுகள் அரசு புரிந்தான். இச்செய்திகளைப் பதிற்றுப்பத்தில் உள்ள இரண்டாம் பத்திற்கு அமைந்த பதிகம் குறிப்பிடுகிறது.
5.3.3 பல்யானைச் செல்கெழுகுட்டுவன்
இம்மன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் உடன் பிறந்தவன் ஆவான். இவனது காலத்தில் யானைப்படை மிகவும் ஆற்றல் வாய்ந்ததாக இருந்தது. இவன் யானைகள் மிகுந்திருந்த உம்பற்காட்டை வென்று தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தான் என்று கூறுவர்.
பல வெற்றிமேல் வெற்றி கண்ட பல்யானைச் செல்கெழுகுட்டுவன் சிறந்த கொடையாளியாகவும் இருந்தான். ஒரு சமயம் பாலைக் கௌதமனார் என்ற புலவர் வேண்ட, பத்துப் பெரு வேள்விகள் செய்தான். இருபத்தைந்து ஆண்டுகள் நாட்டை ஆண்டபின் காட்டிற்குச் சென்று கடுந்தவம் மேற்கொண்டான் என்று பதிற்றுப்பத்துப் பதிகம் கூறுகிறது.
நெடும்பார தாயனார் முந்துறக் காடு போந்த
பல்யானைச் செல்கெழு குட்டுவன்
(பதிற்றுப்பத்து, பதிகம் – 3: 10-11)
5.3.4 கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்
இவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் மகன் ஆவான். ஒரு சமயம் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் அவையில் இருக்கும்போது ஒரு நிமித்திகன் வந்து அவனிடம் உன் இளைய மகன் இளங்கோவே ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு உரிய தகுதி உடையவன் என்று கூறினான். அதைக் கேட்ட இளங்கோவடிகள் மூத்தோன் இருக்க இளையோன் அரசனாதல் அறம் இல்லை என்று கூறிக் குணவாயில் கோட்டம் புகுந்து தவக்கோலம் பூண்டார். பின்பு முறைப்படி செங்குட்டுவன் ஆட்சிக்கு வந்தான் என்று கூறுவர்.
கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் பல வெற்றிகளைப் பெற்றான். கடலிடையே வாழ்ந்த கொள்ளையர்களாகிய கடம்பர்களை வென்று, அவர்களைப் புறமுதுகிட்டு ஓடச் செய்த காரணத்தால் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் எனக் கூறப்பெற்றான்.
மோகூர்ப் பழையனை வென்று தன் நண்பன் அறுகைக்கு நேர்ந்த இழிவைப் போக்கினான். நேரிவாயில் என்னுமிடத்தில் தன்னை எதிர்த்து வந்த ஒன்பது மன்னர்களை வெற்றி கொண்டான்.
இவ்வாறு இவன் பெற்ற வெற்றிகள் பலப்பல. ஆயினும் அவை எல்லாவற்றிலும் சிறப்பு வாய்ந்த வெற்றிகள் இரண்டு.
ஒன்று, இவனின் தாய் இறந்தவுடன் அவளது படிமத்தைக் கங்கையில் நீராட்டச் சென்றபோது அவனை எதிர்த்த வட இந்திய மன்னர்களை வெற்றி கொண்டதாகும். மற்றொன்று, கண்ணகிக்காகச் சிலை செய்ய வேண்டிக் கல் கொணர இமயம் சென்றபோது, எதிர்த்த கனக விசயர் என்ற மன்னரை வென்று, அவரது தலை மீது கல்லை ஏற்றித் தமிழகம் கொண்டு வந்ததாகும்.
இச்செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோவில் கட்டி விழா எடுத்து, அவ்விழாவிற்கு இலங்கை வேந்தன் கயவாகுவை அழைத்துச் சிறப்பித்தான். இதன் மூலம் இம்மன்னனின் காலம் கயவாகுவின் காலமாகிய கி.பி. 177-199 என்பது தெரிய வருகிறது.
5.3.5 களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல்
இம்மன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் இரண்டாவது மனைவிக்குப் பிறந்தவன் ஆவான். இவன் முடிசூட்டுகின்ற காலத்தில் அரசமுடியும், கண்ணியும் காணாமல் போனதால் களங்காய்களால் ஆன கண்ணியையும், நாரால் பின்னப்பட்ட முடியையும் அணிந்து கொண்டான். ஆதலால் இவன் களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் எனப்பட்டான்.
நார்முடிச் சேரல் பல வெற்றிகளைக் கொண்டவன் ஆவான். கடம்பின் பெருவாயில், வாகைப் பெருந்துறை என்னும் இரு இடங்களில் நடைபெற்ற போரில் நன்னன் என்ற மன்னனை வென்று அவனிடம் தான் முன்பு இழந்த பூழி நாட்டை மீட்டுக் கொண்டான். இதனை அகநானூறு,
இரும்பொன் வாகைப் பெருந்துறைச் செருவில்
பொலம் பூண் நன்னன் பொருதுகளத்து ஒழிய
வலம்படு கொற்றம் தந்த வாய்வாள்
களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல்
இழந்த நாடு தந்து
(அகநானூறு, 199: 19-23)
என்று குறிப்பிடுவது காணலாம்.
(செரு = போர்; பொருது = போர் செய்து; களத்து = போர்க்களத்து; ஒழிய = மடிய; கொற்றம் = வெற்றி; வாய் வாள் = கூரிய வாள்; இழந்த நாடு = பூழி நாடு; தந்து = பெற்று.)
மேலும் நார்முடிச் சேரல் அதியமான் நெடுமான் அஞ்சியின் குலத்தில் தோன்றிய நெடுமிடல் என்பவனை யானைப் படை கொண்டு வென்று அவனது நாட்டைக் கைப்பற்றிக் கொண்ட செய்தி பதிற்றுப்பத்தில் சிறப்பாகப் பேசப்படுகிறது.
நெடுமிடல் சாய, கொடுமிடல் துமிய
பெருமலை யானையொடு புலம்கெட இறுத்துக்
பிழையா விளையுள் நாடு அகப்படுத்து
(பதிற்றுப்பத்து , 32: 10-11,14)
(சாய = தோற்று வீழ; புலம்கெட = பகைவர் நாடு அழியும்படி; இறுத்து = தங்கி; பிழையா விளையுள் = தவறாத விளைச்சல்; நாடு அகப்படுத்து = நாட்டைக் கைப்பற்றி.)
5.3.6 ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்
இவன் களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலின் தம்பி ஆவான். நறவு என்னும் கடற்கரை நகரைத் தலைநகராகக் கொண்டு சேர நாட்டின் வடமேற்குப் பகுதியை ஆட்சி புரிந்தவன் ஆவான். ஒரு சமயம் தமிழகத்து வட எல்லைக்கு அப்பால் உள்ள தண்டகாரணியம் என்ற காட்டில் வாழும் கொள்ளையர்கள் தமிழகத்துள் புகுந்து அங்கே உள்ளவர்களுக்கு உரிய ஆட்டு மந்தைகளைக் கவர்ந்து சென்றனர். இதனை அறிந்த ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் தண்டகாரணியம் படை எடுத்துச் சென்று கொள்ளையரோடு போரிட்டு வென்று ஆட்டு மந்தைகளை மீட்டுக் கொணர்ந்தான் ஆதலால் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் எனப் பெயர் பெற்றான்.
5.3.7 அந்துவஞ்சேரல் இரும்பொறை
இம்மன்னன் சேர மன்னர்களின் இருபிரிவில் ஒரு பிரிவான இரும்பொறை மரபில் வந்தவன் ஆவான். இம்மன்னனைப் பற்றி அறிந்துகொள்வதற்குச் சான்றுகள் அவ்வளவாகக் கிடைக்கப் பெறவில்லை. இருப்பினும் ஒரு சான்று மூலம் இம்மன்னனைப் பற்றி அறிந்து கொள்ளமுடிகிறது. ஒரு சமயம் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி இவனுடன் பகை கொண்டு இவனது தலைநகராகிய கருவூரை முற்றுகையிட்டான். அவ்வமயம் யானை மீது ஏறித் தனியே வந்த கிள்ளி சேரர் படைக்குள் புகுந்துவிட்டான். இதனை அறிந்த உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் என்னும் புலவர், தனித்து வந்தவனுக்குக் கேடு விளைவித்தல் அறமாகாது என எண்ணி, அவனுக்கு ஊறு ஏதும் ஏற்படாதவண்ணம் காக்குமாறு இரும்பொறையை வேண்டிக்கொண்டார். இச்செய்தி புறநானூற்றுப் பாடல் ஒன்றில் (புறம்,13) சுட்டப்பட்டுள்ளது. இவனைப் பற்றி அறியக் கூடியன இவ்வளவே.
5.3.8 பிற சேர மன்னர்கள்
சங்க காலத்தில் சேர நாட்டினைத் திறம்பட ஆண்ட சேர மன்னர்கள் மேலே கூறியவர்கள் மட்டுமின்றி இன்னும் பலர். அவர்கள் வீரத்திலும், கொடையிலும் தங்களுடைய முன்னோர்களைப் போலச் சிறந்து விளங்கினர். அவர்களைப் பற்றிப் புறநானூறு, பதிற்றுப்பத்து, அகநானூறு ஆகிய நூல்களால் அறிந்து கொள்ளலாம். அம்மன்னர்கள் வருமாறு:
செல்வக் கடுங்கோ வாழியாதன்
-
புறநானூறு
தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
–
பதிற்றுப்பத்து பதிகம் புறநானூறு
இளஞ்சேரல் இரும்பொறை
–
பதிற்றுப்பத்து பதிகம், புறநானூறு
கருவூர் ஏறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை
–
புறநானூறு
குட்டுவன் கோதை
–
புறநானூறு
கோக்கோதை மார்பன்
–
அகநானூறு
சோழிய ஏனாதி திருக்குட்டுவன்
–
புறநானூறு
மாந்தரம் பொறையன் கடுங்கோ
–
அகநானூறு
மாரி வெண்கோ
–
புறநானூறு
யானைக்கண் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
–
புறநானூறு
Comments
Post a Comment