Thursday, October 17, 2019

பல்லவர் கால இலக்கியங்கள் - பக்தி இலக்கியக் குறிப்புகள்

 பல்லவர் கால பக்தி இலக்கியங்கள்
   பன்னிரு திருமுறை வரலாறு
முன்னுரை
தமிழைப் பக்தியின் மொழி என்று தனிநாயகம் அடிகள் கூறுகின்றார். அந்த அளவுக்குத் தமிழில் பக்தி இலக்கியம் சிறப்புப் பெற்று விளங்குகிறது. கி.பி. 7ஆம் நூற்றாண்டு தமிழகத்தில் பல்லவர் ஆட்சி நடைபெற்ற காலமாகும். இக்காலத்தில் செல்வாக்குடன் இருந்த சமண பௌத்த சமயங்களை எதிர்த்து சைவ சமயம் மறுமலர்ச்சி பெறத் தொடங்கியது. கி.பி. 7ஆம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், காரைக்காலம்மையார் போன்ற சைவ அடியார்கள் ஊர் ஊராகச் சென்று தமிழின் சிறப்பையும் சைவ சமயத்தின் சிறப்பையும் தங்களுடைய பாடல்களின் மூலமாகப் பரப்பினர். இதன் விளைவாக சைவ சமயத்தின் செல்வாக்கு மீண்டும் வளரத் தொடங்கியது.
திருமுறைகள்
திருமுறைகள் மொத்தம் 12. இத்திருமுறையை மொத்தம் 27 பேர் பாடியிருக்கின்றனர். திருமுறையிலுள்ள பாடல்கள் அனைத்தும் சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவபெருமானின் பெருமைகளைப் பேசுகின்றன.
பன்னிரு திருமுறைகளில் முதல் ஏழு திருமுறைகளைத் தேவாரம் என்று அழைக்கிறோம். பக்திச்சுவை நிரம்பிய பாடல்களின் தொகுப்பான தேவாரத்தை முறையே திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் பாடியுள்ளனர். இவர்களை ‘மூவர் முதலிகள்’ என்று அழைக்கின்றனர். இவர்களோடு எட்டாம் திருமுறையைப் பாடிய மாணிக்கவாசகரையும் சேர்த்து ‘சமயக் குரவர்கள்’ என்று அழைக்கின்றனர்.
இப்பன்னிரு திருமுறைகளையும் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி என்பவராவார். திருமுறைகளைத் தொகுப்பித்தவன் இராசராசன். இதன் காரணமாக இவன் ‘திருமுறைகண்ட சோழன்’ என்று அழைக்கப்படுகிறான்.
1, 2, 3ஆம் திருமுறைகள்
  முதல் மூன்று திருமுறைகளைப் பாடியவர் திருஞானசம்பந்தர்.
  இவர் சோழ நாட்டிலுள்ள சீர்காழியில் அந்தணர் குலத்தில் பிறந்தவர்.
  சீர்காழி பிரம்மபுரம், தோணிபுரம், வேணுபுரம் என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது.
  திருஞானசம்பந்தரின் பெற்றோர் பெயர்: சிவபாத இருதயர் & பகவதி அம்மையார்.
  இவருடைய இயற்பெயர் ஆளுடையபிள்ளை என்பதாகும்.
  இவர் தம்முடைய மூன்றாம் வயதில் உமாதேவியிடம் ஞானப்பால் உண்டு ஞானசம்பந்தரானார்.
  இவர் பாடிய முதல் பதிகம்: ‘தோடுடைய செவியனே’
  இவர் பாடியதாகத் தற்போது 384 பதிகங்கள் கிடைக்கின்றன.
  இவரை ‘திராவிட சிசு’ என்று ஆதிசங்கரர் அழைக்கிறார்.
  இவருடைய பாடல்களுக்கு திருநீலகண்ட யாழ்பாணர் பண்ணமைத்தார்.
  இவர் திருவோத்தூரில் ஆண் பனையைப் பெண் பனையாக்கினார்.
  மதுரையில் சமணரைப் புனல்வாதத்திலும் அனல்வாதத்திலும் வெற்றி கண்டார்.
  கூன் பாண்டியனின் வெப்பு நோயை நீக்கி நின்றசீர் நெடுமாறனாக்கினார்.
  இவர் கிரியை சர்ப்புத்திர மார்க்கத்தைச் சார்ந்தவர்.
  தம்முடைய 16ஆம் வயதில் மணக்கோலத்தோடு திருமணநல்லூரில் இறைவனடி சேர்ந்தார்.
4, 5, 6ஆம் திருமுறை
  4, 5, 6ஆம் திருமுறைகளைப் பாடியவர் திருநாவுக்கரசர்.
  இவர் வேளாளர் மரபில் திருவாமூரில் பிறந்தார்.
  பெற்றோர்: புகழனார் & மாதினியார்; இவருடைய தமக்கையார் பெயர் திலகவதியார்.
  இவருடைய இயற்பெயர் மருள் நீக்கியார்.
  சைவக் குடும்பத்தில் பிறந்த மருள் நீக்கியார் மனக்கசப்பால் சமண சமயத்தைத் தழுவினார். சமண தருமத்தில் புகழ்பெற்று விளங்கியதால் ‘தருமசேனர்’ என்று ‘வாகீசர்’ என்று அழைக்கப்பட்டார்.
  தாண்டகம் என்னும் செய்யுள் வகையை இயற்றியதால் ‘தாண்டகவேந்தர்’ எனப்பட்டார். ‘ஆளுடைய அரசு’ என்ற பெயரும் இவருக்குண்டு.
  சிவபெருமான் திலகவதியாரின் வேண்டுகோளுக்கிணங்க சூலை நோய் கொடுத்து திருநாவுக்கரசரை ஆட்கொண்டார்.
  இவர் பாடிய முதல் பதிகம்: ‘கூற்றாயின வாறு விலக்ககலீர்’
  திருஞானசம்பர் இவரை ‘அப்பர்’ என்று அழைத்தார்.
  முதலாம் மகேந்திர வர்மன் என்ற பல்லவ மன்னனைச் சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாற்றினார்.
  பாம்பு தீண்டிய தம் அடியார் அப்பூதி அடிகளின் மகன் மூத்த திருநாவுக்கரைத் தம் பாடல்கள்மூலம் உயிர்ப்பித்தவர்.
  இவர் பாடியதாக 312 பதிகங்கள் கிடைக்கின்றன.
  இவர் சரியை என்னும் தாச மார்க்கத்தைச் சார்ந்தவர்.
  81ஆம் வயதில் திருப்புகலூரில் இறைவனோடு சேர்ந்தார்.
7ஆம் திருமுறை
  7ஆம் திருமுறையைப் பாடியவர் சுந்தரர்.
  இவர் திருநாவலூரில் பிறந்தவர்.
  பெற்றோர்: சடையனார் & இசைஞானியார்.
  இயற்பெயர் நம்பி ஆரூரர்.
  வன்தொண்டர், தம்பிரான் தோழர் என்று இவர் அழைக்கப்படுகிறார்.
  திருவெண்ணெய் நல்லூரில் இறைவனால் ஓலை கொடுத்து தடுத்தாட் கொள்ளப்பட்டார்.
  இவர் பாடிய முதல் பதிகம்: ‘பித்தா பிறைசூடி’
  இவர் பாடியதாக 100 பதிகங்கள் நமக்குக் கிடைக்கின்றன.
  இவர் பரவை நாச்சியார், சங்கிலி நாச்சியார் என்ற இரு பெண்களை மணந்து கொண்டார்.
  பெரிய புராணத்தின் முதல் நூலான ‘திருத்தொண்டர் தொகை’ இவர் பாடியதாகும்.
  திருப்புகலூரில் செங்கல்லைப் பொன்னாக்கினார்.
  பொன்னை மணிமுத்தாரில் இட்டு திருவாரூர் குளத்தில் பெற்றார்.
  முதலை விழுங்கிய பாலகனை மீட்டார்
  இவர் யோகமுறை என்ற சக மார்க்கத்தினர்.
  18ஆம் வயதில் வெள்ளையானை மீதேரி கைலாயத்தில் இறைவனோடு கலந்தார்.
8ஆம் திருமுறை
  8ஆம் திருமுறையைப் பாடியவர் மாணிக்கவாசகர்.
  திருவாதவூரில் பிறந்தவர்: இயற்பெயர் தெரியாததால் திருவாதவூரர் என்று அழைப்பர்.
  பெற்றோர்: சம்புபாதசாரியார் & சிவஞானவதி.
  இவர் பாடிய நூல்கள்: திருவாசகம், திருக்கோவையார்.
  பாடல்கள் ஒவ்வொன்றும் மாணிக்கம் போன்று உள்ளதால் மாணிக்க வாசகர் என்று அழைக்கப்பட்டார்.
  அரிமர்த்தன் பாண்டியனிடம் அமைச்சராகப் பணிபுரிந்தார். ‘தென்னவன் பிரம்மராயன்’ என்ற பட்டம் பெற்றவர்.
  திருப்பெருந்துறை என்ற இடத்தில் இறைவனால் ஆட்கொள்ளப்பட்டார்.
  இவருக்காக இறைவன் நரிகளைப் பரிகளாக்கினார்; பிட்டுக்காக மண் சுமந்தார்.
  இவர் சொல்ல இறைவன் எழுதியது திருவாசகமும் திருக்கோவையாரும்.
  இவர் எழுதிய திருவாசகம் சைவவேதம் என்று அழைக்கப்படுகிறது. திருவெம்பாவை மார்கழி மாதத்தில் சைவர்களால் பாடப்படுகிறது.
  கோவை நூல்களுல் சிறந்ததாக திருக்கோவையார் கொண்டாடப்படுகிறது.
  இவர் சற்குரு மார்க்கத்தைச் சேர்ந்தவர்.
  தம்முடைய 32ஆம் வயதில் சிதம்பரத்தில் இறைவனோடு கலந்தார்.
9ஆம் திருமுறை
  9ஆம் திருமுறையை 9 பேர் பாடியுள்ளனர்.
  1.திருமாளிகைத் தேவர் 2.கருவூர்த்தேவர் 3.சேந்தனார் 4.பூந்துருத்தி காடவ நம்பி 5.கண்டராதித்தன் 6.வேணாட்டடிகள் 7. திருவாலி அமுதனார் 8. புருஷோத்தம நம்பி 9. சேதிராயர்.
  திருவிசைப்பா, திருப்பல்லாண்டு ஆகிய இரண்டு நூல்களும் இத்திருமுறையில் இடம்பெற்றுள்ளன.
  இதில் சேந்தனார் மட்டும் பாடியது திருப்பல்லாண்டு.
10ஆம் திருமுறை
  10ஆம் திருமுறையைப் பாடியவர் திருமூலர்.
  இவர் பாடிய நூல் திருமந்திரம்.
  திருமூலர் ஒரு சித்தர். பசுவின் துயர் தீர்க்க சித்தர் மூலனின் உடலுக்குள் கூடுவிட்டு கூடு பாய்ந்தார்.
  திருமூலர் 3000 ஆண்டுகள் வாழ்ந்து ஆண்டுக்கு ஒரு பாடலாக மூவாயிரம் பாடல்கள் பாடினார் என்பர்.
  திருமூலர் திருமந்திரத்திற்கு இட்டபெயர் திருமந்திரமாலை.
  திருமந்திரத்திற்கு ‘தமிழ் மூவாயிரம்’ என்ற பெயரும் உண்டு.
  திருமந்திரம் 9 தந்திரங்களையும் 232 அதிகாரங்களையும் 3071 பாடல்களையும் கொண்டுள்ளது.
  முதல் சித்தநூல் திருமந்திரம்.
  யோக நெறியைக்கூறும் ஒரே நூல் திருமந்திரம்.
11ஆம் திருமுறை
  11ஆம் திருமுறையைப் பாடியவர்கள் 12 பேர்.
  இதில் மொத்தம் 40 நூல்கள் இடம்பெற்றுள்ளன.
  1.திருஆலவாய் உடையார் 2.காரைக்காலம்மையார் 3.கல்லாடர் 4. நக்கீரர் 5.கபிலர் 6.பரணர் 7.அதிரா அடிகள் 8.இளம்பெருமானடிகள் 9.ஐயடிகள் காடவர்கோன் 10.சேரமான் பெருமான் நாயனார் 11.பட்டினத்தார் 12. நம்பியாண்டார் நம்பி.
  11ஆம் திருமுறையைப் பிரபந்தமாலை என்று அழைப்பர்.
12ஆம் திருமுறை
  12ஆம் திருமுறையைப் பாடியவர் சேக்கிழார்.
  சேக்கிழார் பாடிய நூல் பெரிய புராணம்.
  சேக்கிழார் வேளாளர் மரபில் குன்றத்தூரில் பிறந்தவர்.
  இவருடைய இயற்பெயர் அருண்மொழித் தேவர்.
  குலோத்துங்க சோழனிடம் அமைச்சராகப் பணிபுரிந்தவர். அமைச்சராக இருந்தபொழுது இவருக்கு ‘உத்தம சோழ பல்லவன்’ என்ற பட்டம் உண்டு.
  சிவத்தொண்டர்களின் சிறப்பினைத் தம்நூலின் மூலம் பரப்பியதால் ‘தொண்டர்சீர் பரவுவார்’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு.
  பெரிய புராணத்திற்கு சேக்கிழார் ‘திருத்தொண்டர் புராணம்’ என்று பெயரிட்டார்.
  பெரிய புராணம் 2 காண்டம் 13 சருக்கங்களை உடையது.
  63 நாயன்மார்களையும் 9 தொகையடியார்களையும் கூறும் நூல் பெரிய புராணம்.
  ‘பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ’ என்று மீனாட்சி சுந்தரம் பிள்ளை இவரைப் பாராட்டுகிறார்.
  பெரிய புராணம் தேசியக் காப்பியம் என்று பாராட்டப்படுகிறது.
  சேக்கிழாருக்கு மீனாட்சி சுந்தரம் பிள்ளை பிள்ளைத் தமிழும் உமாபதி சிவாச்சாரியார் புராணமும் பாடியுள்ளனர்
முடிவுரை
சிதம்பரத்தில் கோயிலில் இருந்த ஓலைச் சுவடிகளை எடுத்து, ஆராய்ந்து பன்னிரு திருமுறைகளாகத் தொகுத்த நம்பியாண்டார் நம்பின் பணி மகத்தானது. சிவபெருமானின் பெருமைகளைப் பேசும் இத்திருமுறைகளை வாழ்நாளில் ஒருமுறையாவது முழுமையாகப் படிக்க வேண்டும்.

பன்னிரு ஆழ்வார்கள்
முன்னுரை
திருமால் வழிபாடென்பது தொல்காப்பியம், கலித்தொகை, பரிபாடல் போன்ற சங்க நூல்களிலேயே இருப்பதை அறியலாம். கி.பி.7ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வைணவம் புத்துயிர் பெறத்தொடங்கியது. பன்னிரு திருமுறைகளைப் பாடிய சைவ அடியார்கள்போல திருமாலின் குணத்திலும் அழகிலும் மயங்கிய ஆழ்வார்கள் பன்னிருவர் பாடிய பாடல்களை நாலாயிர திவ்ய பிரபந்தம் என்று அழைக்கிறோம். இவ்வாழ்வார்கள் 108 திவ்ய திருத்தலங்களைப் பாடியுள்ளனர்.
பன்னிரு ஆழ்வார்கள் பாடிய அருட்பாக்களை நாலாயிர திவ்ய பிரபந்தமாகத் தொகுத்தவர் நாதமுனிகள். பிற்காலத்தில் சிற்றிலக்கியங்கள் வளர்வதற்கு இத்தொகுப்பு நூலின் பங்களிப்பு முக்கியமானது.
பொய்கையாழ்வார்
  இவர் பிறந்த ஊர் & காஞ்சிபுரம்
  பொய்கை ஒன்றில் தாமரை மலரில் இவர் தோன்றியதால் பொய்கையாழ்வார் என்று அழைக்கப்பட்டார்.
  இவர் பாடிய பிரபந்தத்தின் பெயர் & முதல் திருவந்தாதி
  இவர் 7 திருத்தலங்களைப் பாடியிருக்கிறார்.
  திருமாலின் பாஞ்சஜன்யம் எனப்படும் சங்கின் அம்சமாக இவர் கருதப்படுகிறார்.
பூதத்தாழ்வார்
  இவர் பிறந்த ஊர் & மாமல்லபுரம்.
  ‘பூதம்’ என்ற சொல் வருமாறு இவர் பாடியதால் இவருக்கு இப்பெயர் வந்ததென்பர்.
  இவர் பாடிய பிரபந்தத்தின் பெயர் & இரண்டாம் திருவந்தாதி.
  இவர் 13 திருத்தலங்களைப் பாடியிருக்கிறார்.
  இவர் கௌமோதகி எனப்படும் கதாயுதத்தின் அம்சமாகக் கருதப்படுகிறார்.
பேயாழ்வார்
  இவர் பிறந்த ஊர் & மயிலாப்பூர்.
  பக்திப் பரவசத்தால் அழுது, சிரித்து, ஆடிப்பாடி பேய் பிடித்தாற்போல் இறைவனைத் தொழுது மகிழ்ந்ததால் இவர் இப்பெயர் பெற்றார்.
  இவர் பாடிய பிரபந்தத்தின் பெயர் & மூன்றாம் திருவந்தாதி.
  இவர் 15 திருத்தலங்களைப் பாடியிருக்கிறார்.
  திருமாலின் நந்தகம் எனப்படும் வாளின் அம்சமாக அவதரித்தவர்.
  மேற்கண்ட மூவரும் ‘முதலாழ்வார்கள்’ என்று அழைக்கப்படுகின்றனர்.
  முதலாழ்வார்கள் மூவரும் சந்தித்துக்கொண்ட இடம் திருக்கோவிலூர்.
திருமழிசையாழ்வார்
  பிறந்த ஊர் & திருமழிசை.
  திருமழிசையில் பிறந்த காரணத்தால் இவர் இவ்வாறு அழைக்கப்படுகிறார்.
  இவர் பாடிய பிரபந்தங்கள் 1. நான்முகன் திருவந்தாதி 2. திருச்சந்த விருத்தம்.
  இவர் 16 திருத்தலங்களைப் பாடியிருக்கிறார்.
  பக்திசாரர், சக்கரத்தாழ்வார் என்ற பெயர்களும் இவருக்குண்டு.
  திருமாலின் சக்கரத்தின் அம்சமாக இவர் கருதப்படுகிறார்.
நம்மாழ்வார்
  இவர் ஆழ்வார் திருநகரி எனப்படும் திருக்குருகூரில் பிறந்தவர்.
  இவருக்கு சடகோபன், மாறன், பராங்குசர் என்ற பெயர்களும் உண்டு.
  இவர் பாடிய பிரபந்தங்கள் 1.திருவிருத்தம் 2.திருவாசிரியம் 3. பெரிய திருவந்தாதி 4. திருவாய்மொழி.
  இவர் பாடிய நான்கு நூல்களும் நான்கு வேதங்களாகும்.
  இவர் 16 வயதுவரை ஊமையாக இருந்தவர்.
  சைவத்திற்கு மாணிக்கவாசகர் போன்று வைணவத்திற்கு நம்மாழ்வார் என்று போற்றப்படுகிறார்.
  இவரைக் குருவாக ஏற்றுக்கொண்டவர் மதுரகவியாழ்வார்.
  இவர் 39 திருத்தலங்களைப் பாடியிருக்கிறார்.
  இவர் இறைவன் அம்சமாக அவதரித்தவர்.
மதுரகவியாழ்வார்
  இவர் பிறந்த ஊர் & திருக்கோளூர்.
  இவர் திருமாலைப் பாடாமல் தன் குருவாகிய நம்மாழ்வாரைப் பாடியவர்.
  இவர் பாடிய பதிகம்: ‘கண்ணிநுண் சிறுதாம்பு’ எனத் தொடங்கும் 11 பாடல்கள்
  கருடாழ்வார் அம்சமாக அவதரித்தவர்.
குலசேகராழ்வார்
  இவர் பிறந்த ஊர் & திருவஞ்சிக்களம்.
  சேரநாட்டு மன்னர் மரபில் பிறந்து வைணவ அடியரானவர்.
  கொல்லிக்காவலன், கூடல்நாயகன் என்ற பெயர்களைக் கொண்டவர்.
  இவர் பாடிய பிரபந்தம் & பெருமாள் திருமொழி.
  இராமனுக்குத் தாலாட்டுப் பாடியவர்.
  இவர் 7 திருத்தலங்களைப் பற்றி பாடியிருக்கிறார்.
  திருமாலின் கௌத்துவ மணியின் அம்சமாகப் பிறந்தவர்.
பெரியாழ்வார்
  இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்தவர்.
  இயற்பெயர் விஷ்ணுசித்தன்.
  பட்டர்பிரான் என்ற வேறுபெயரும் இவருக்குண்டு.
  இவர் பாடிய பிரபந்தங்கள்: 1. திருப்பல்லாண்டு 2.பெரியாழ்வார் திருமொழி.
  ஆண்டாளின் வளர்ப்புத்தந்தை; ஆண்டாளுக்கு கோதை என்று பெயரிட்டவர்.
  ஆண்டாள் சூடிக்கொடுத்ததையே இவர் திருமாலுக்குச் சூட்டினார்.
  கண்ணனைக் குழந்தையாகக் கருதி தாலாட்டுப் பாடியவர்.
  கருடாழ்வார் அம்சமாக அவதரித்தவர்.
  இவர் 20 திருத்தலங்களைப் பற்றி பாடியிருக்கிறார்.
ஆண்டாள்
  ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்தவர்.
  பெரியாழ்வாரால் துளசிச் செடியின் கீழே கண்டெடுக்கப்பட்டவர்.
  திருமாலுக்கு மாலையைச் சூடிக்கொடுத்ததால் ‘சூடிக்கொடுத்த சுடர்கொடி’ என்று அழைக்கப்படுகிறார்.
  கோதை, நாச்சியார் என்ற வேறு பெயர்களும் இவருக்குண்டு.
  இவர் பாடிய பிரபந்தங்கள்: 1.திருப்பாவை 2.நாச்சியார் திருமொழி.
  பூமகள் அம்சமாக அவதரித்தவர்.
  இவர் 10 திருத்தலங்கள் குறித்து பாடியிருக்கிறார்.
தொண்டரடிப் பொடியாழ்வார்
  இவர் பிறந்த ஊர் & திருமண்டங்குடி.
  இயற்பெயர் & விப்ர நாராயணன்.
  திருமாலுக்கு திருப்பள்ளியெழுச்சி பாடியவர்.
  இவர் பாடிய பிரபந்தங்கள்: 1.திருப்பள்ளியெழுச்சி 2.திருமாலை.
  வனமாலை அம்சமாகக் கருதப்படுபவர்.
  இவர் 3 திருத்தலங்கள் குறித்து பாடியிருக்கிறார்.
திருப்பாணாழ்வார்
  இவர் பிறந்த ஊர் & உறையூர்.
  பாணர் குடியில் பிறந்து, வைணவ அடியரானவர்.
  திருவரங்கக் கோயிலுக்குள் செல்லாது காவிரிக்கரையில் இருந்து பாடியவர்.
  உலோக சாரங்கள் என்ற அந்தணர் இவரைத் தோளில் தூக்கிக்கொண்டு திருவரங்கக் கோயிலுக்குள் சென்றார்.
  ‘அமலனாதி பிரான்’ எனத்தொடங்கும் 10 பாடல்கள் கொண்ட பதிகம் இவர் பாடியது.
  இவர் ஸ்ரீவத்ஸம் எனப்படும் மரு அம்சமாக அவதரித்தவர்.
  இவர் 3 திருத்தலங்கள் குறித்து பாடியுள்ளார்.
திருமங்கையாழ்வார்
  இவர் பிறந்த ஊர் & திருக்குறையலூர்.
  இயற்பெயர் கலியன்.
  கலிநாடன், மங்கையர்கோன் என்ற வேறு பெயர்களும் இவருக்குண்டு.
  திருவாலி நாட்டை ஆண்டவர்.
  வழிப்பறி செய்து இறைதொண்டு செய்தவர்.
  இவர் பாடிய பிரபந்தங்கள்: 1. பெரிய திருமொழி 2. திருநெடுந்தாண்டகம்
3. திருக்குறுந்தாண்டகம் 4. சிறிய திருமடல் 5. பெரிய திருமடல் 6. திருவெழு கூற்றிருக்கை.
  மடல் என்ற சிற்றிலக்கிய வகையை அறிமுகப்படுத்தியவர்.
  திருமாலின் வாளின் அம்சமாக அவதரித்தவர்.
  40 திருத்தலங்கள் குறித்து இவர் பாடியிருக்கிறார்.

No comments:

Post a Comment

UGC NET Tamil TNPSC Tamil

அணியிலக்கணத்தில் யாப்பிலக்கணத்தின் செல்வாக்கு

தமிழ் இலக்கண மரபானது எழுத்து, சொல், பொருள் என்ற மூன்றிலக்கண மரபிலிருந்த எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்ற ஐந்திலக்கண மரபாக வளர்ச்சி...