பக்தி இலக்கியம் வைணவம்
ஆழ்வார்கள் திருமாலை முழுமுதல் கடவுளாகக் கொண்டது வைணவ சமயம். திருமாலின் அடியார்களை ஆழ்வார்கள் என்று வழங்குவர். சைவ சமயத் தொண்டர்களை நாயன்மார்கள் என்று வழங்குவதற்கு இணையானது இவ்வழக்கம். ஆழ்தலாவது மூழ்குதல். உலக இன்பங்களில் ஈடுபாடு கொள்ளாது, எந்நேரமும் திருமால் பற்றிய சிந்தனையிலேயே ஆழ்ந்து கிடப்போர் என்று ஆழ்வார் என்ற சொல்லுக்குப் பொருள் கொள்வர். உண்ணும் சோறும், பருகும் நீரும், தின்னும் வெற்றிலையும் அவர்களுக்குத் திருமாலே என்பர். சைவ அடியார்கள் அறுபத்து மூவர் என்பதுபோல், வைணவச் சமய அடியார் பன்னிருவர் என்று வழங்குவர். அவர்களின் திருப்பெயர்கள் வருமாறு: 1. பொய்கையாழ்வார் 2. பூதத்தாழ்வார் 3. பேயாழ்வார் 4. திருமழிசை ஆழ்வார் 5. பெரியாழ்வார் 6. ஆண்டாள் 7. தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் 8. திருப்பாணாழ்வார் 9. நம்மாழ்வார் 10. மதுரகவி ஆழ்வார் 11. திருமங்கை ஆழ்வார் 12. குலசேகர ஆழ்வார். இவர்கள் இயற்றியருளிய பாடல்களின் தொகுப்புக்கு நாலாயிரத்திவ்வியப் பிரபந்தம் என்று பெயர். முதல் ஆழ்வார்கள் பொய்கையாழ்வார் பூதத்தாழ்வார் பேயாழ்வார் இப் பன்னிருவருள்ளும் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயா...