தமிழ் நிகண்டு வரலாற்றில் சேந்தன் திவாகரம்
எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்ற ஐந்திலக்கண மரபில் ஆறாம் இலக்கணமாக நிகண்டுகளைச் சுட்டுவர். 19ஆம் நூற்றாண்டில் வண்ணசரபம் தண்டபாணி சுவாமிகள் இயற்றிய அறுவகை இலக்கணத்தில் புலமை இலக்கணமாக ஆறாவது இலக்கணமாகச் சுட்டப்படுவதற்கு முன்பு வரை நிகண்டுகளே அவ்விடத்தைப் பிடித்திருந்தன. தமிழ் மொழியின் வளத்தையும் சொற்களின் செறிவையும் பொருள் கொள்ளும் நுட்பத்தையும் நிகண்டு நூல்கள் காலந்தோறும் வெளிப்படுத்திய வண்ணம் உள்ளன.
நிகண்டு என்னும் சொல்லுக்குத் தொகுதி அல்லது கூட்டம் என்று பொருள். திணை வகைமையில் அமைந்த பெயர்களையும் வினை பற்றிய பெயர்களையும் பாகுபாடு செய்து தொகுத்துக் கூறுவதோடு அச்சொற்கள் குறிக்கின்ற பொருள்களையும் நிகண்டுகள் வரையறுத்துக் கூறுகின்றன. நிகண்டு என்னும் பெயர் வழக்கு முதன்முதலில் நிகண்டு வடமொழியில் வேதத்திற்கு அங்கமாய், வைதீகச் சொற்களின் பொருட்களை உணர்த்தும் கருவி நூலுக்கு மட்டுமே சிறப்பாகச் சுட்டப்பட்டது. தமிழில் நிகண்டு நூலை உரிச்சொல் உரிச்சொல்பனுவல் என்றெல்லாம் குறிப்பிடுவர்.
காங்கேயர் எழுதிய நிகண்டு நூலினை உரிச்சொல் நிகண்டு என்று குறிப்பிட்டுள்ளார். உரிச்சொல், நிகண்டு இரண்டையும் ஒருங்கே வைத்துச் சுட்டியுள்ளது இத்தொடர்பில் இணைத்தெண்ணத்தக்கது.
உரிச்சொல்லை வேர்ச்சொல், பகுதி, குறைச்சொல், அடை என்று பலவிதமாக உரையாசிரியர்களும் ஆய்வாளர்களும் குறிப்பிட்டுள்ள நிலையிலிருந்து வேறுபட்டு அவற்றைப் பொருளுக்குரிய சொற்களாக தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், செ.வை.சண்முகம் ஆகியோர் குறிப்பிட்டிருந்தாலும் அவர்கள் உரிச்சொற்களை அகராதிச் சொற்களாக முழுமையாக ஏற்கவில்லை.
இந்தக் குறைச்சொற்களாகிய உரிச்சொற்களில் பொருள்வேற்றுமை செய்யும் உரிச்சொற்களும் உள்ளன. தனிச்சொல்லாக வந்து தமக்கேற்ற பயனிலை கொள்ளும் உரிச்சொற்களும் குரு விளங்கிற்று என்பது போல உள்ளன. மூன்றாவதாக வேறு சில உரிச்சொற்கள் சில போது அடைகொளியாகவும், சில போது அடையாகவும் செங்கேழ், கேழ்கிளர் அகலம் என்பன போல வருவனவும் உள்ளன. (உரிச்சொல், இலக்கண ஆய்வுக் கட்டுரைகள் – 1, மொழியியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர், பக்.131,132)
என்பதன் மூலம் புலனாகிறது. நிகண்டு என்னும் சொல் முதன்முதலில் இறையனார் அகப்பொருள் உரையில் இடம்பெற்றுள்ளதாக வ.ஜெயதேவன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். (வ.ஜெயதேவன், தமிழ் அகராதியியல் வளர்ச்சி வரலாறு, ப.79) மேலும் அவர், அகராதி என்ற சொல் முதன்முதலில் திருமந்திரத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் சுட்டுகிறார். (மேலது, ப.80)
தொல்காப்பியம்
தொல்காப்பியச் சொல்லதிகார இடையியல், உரியியல் பகுதிகளில் சொற்பொருள் உணர்த்தும் தன்மை விளக்கப்படுகிறது. மேலும் பொருளதிகாரத்தின் மரபியலில் இம்மரபு இடம்பெறுவதையும் காணலாம். தொல்காப்பியம் நிகண்டுகளின் அமைப்பிற்கும் தோற்றத்திற்கும் முன்னோடியாய் திகழ்கின்றது.
இலக்கிய, இலக்கணப் பயிற்சிக்கு நிகண்டு நூல்களே கருவி நூல்களாகத் திகழ்கின்றன. நிகண்டு நூல்களில் இடம்பெற்றுள்ள சொற்களின் தொகுதியால் அக்காலத்தில் புழக்கத்தில் இருந்த பல்வேறு பழக்க வழக்கங்களும் பண்பாட்டுக் கூறுகளையும் அறிந்து கொள்ள முடிகிறது. இப்பின்னணியில் திவாகர நிகண்டில் பண்பாட்டுத் தொடர்பாக ஆய்வு செய்வதற்கான களங்கள் உள்ளதாக அதன் பதிப்பாசிரியர் நூலின் முன்னுரையில் சுட்டிச்செல்கிறார்.
திவாகரப் பொருட்பாகுபாட்டுக்குத் தொல்காப்பியம் அடிப்படையாகவும் பிற நிகண்டுகளின் பொருட்பாகுபாட்டுக்குத் திவாகரம் அடிப்படையாகவும் விளங்குகிறது. நிகண்டுகளின் பொருட்புலப்பாகுபாடு பீட்டர் மார்க் ரோஜெட்டின் சொற்கருவூலப் (Thesaurus) பாகுபாட்டை ஒத்துள்ளதாக வ.ஜெயதேவன் குறிப்பிட்டுள்ளார். (வ.ஜெயதேவன், தமிழ் அகராதியியல் வளர்ச்சி வரலாறு, ப.116) மேலும் அவர், நிகண்டுகளிலேயே அகர நிரல், குறிப்பு நோக்கீட்டு முயற்சிகள் தோன்றத் தொடங்கிவிட்டதாகவும் குறிப்பிடுகிறார். (மேலது, ப.117)
நிகண்டு அமைப்பு
நிகண்டுகளின் அமைப்பினை இலக்கண நூல்களில் கண்ணுற முடிகிறது. யாப்பருங்கல விருத்தியுரையில் இடம்பெற்றுள்ள சில நூற்பாக்கள் நிகண்டுகளைப் போலத் தொகுத்துரைக்கும் நிலையில் அமைந்துள்ளன. சான்றாக, யாப்பருங்கல விருத்தியுரைக்காரர் திரிசொற்களுக்கு எடுத்துக்காட்டுகள் தரும் இடத்தில்,
பைஞ்ஞீலம் பைதிரம் விரற்றலை யோர்பித்தை
பூழிவம் பீளை துருவையனல் தொடுப்பகை பிறடி
கருவுள நவிரல் வசிதலையல் நிவப்பு
செப்பிய பிறவுந் திரிசொல் லாகும்.
எனவும் விலங்குகளின் ஆண், பெண் இளமைப் பெயர்களைக் கூறுமிடத்து,
பெயரிவை மும்மையும் பிறவுமிப் பொருட்கண்
இயைபெதி ரியலு மென்றுணர்ந் தியையக்
குறியொடு காரணங் கொளவகுத் தொழிந்தது
அறிய உரைப்போன் ஆசிரி யன்னே
எனவும் கலிப்பா என்பதன் பொருளைக் கூறுமிடத்து,
கலித்தல் கன்றல் கஞறல் பம்மல்
எழுச்சியும் பொலிவும் எய்தும் பெயரே
கம்பலை சும்மை யழுங்கல் கலிமுழக்
கென்றிவை யெல்லாம் அரவப் பெயரே
எனவும் இடம்பெற்றுள்ள இடங்கள் இத்தொடர்பில் இணைத்தெண்ணத்தக்கது. நிகண்டுகளின் உருவாக்கத்திற்கு இதுபோன்ற இலக்கண உரைகளில் இடம்பெற்றுள்ள இடங்களையும் ஒப்பிட்டு நோக்குகையில் நிகண்டுகளின் தோற்றத்திற்கு இவை அடித்தளமாக அமைந்துள்ள நிலையினை அறியமுடிகிறது.
திவாகரம்
தமிழ்மொழியில் இதுவரை கிடைத்திருக்கும் நிகண்டு நூல்களுள் திவாகரத்தை முதலாவதாகக் குறிப்பிடலாம். இதனை இயற்றிய ஆசிரியர் திவாகரர். இவரை ஆதரித்து இந்நூலை இயற்றச் செய்தவர் சேந்தன் என்பவர். அவர் பெயராலேயே சேந்தன் திவாகரம் என்று இந்நூல் அழைக்கப்படுகிறது. திவாகரர் சமண சமயத்தைச் சார்ந்தவர். காலம் கி.பி.8ஆம் நூற்றாண்டாகும். இந்நிகண்டு பன்னிரண்டு தொகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. முதல் பத்துத்தொகுதிகளில் ஒருபொருள் குறித்த பலபெயர்ச் சொற்கள் இடம்பெற்றுள்ளன. பதினோராவது தொகுதி பல்பொருள் குறித்த ஒரு பெயர்ச் சொற்களுக்குரியதாக அமைகிறது. இறுதி தொகுதி தொகைப் பெயர்கள் குறித்ததாக அமைந்துள்ளது.
தெய்வப்பெயர்த் தொகுதி முதல் பல்பொருள் கூட்டத்து ஒரு பெயர் தொகுதி வரையில் 12 தொகுதிகள் கொண்டது. ஒவ்வொரு தொகுதியும் ஆசிரியர் வரலாறும் நூல் வரலாறும் சுட்டும் நூற்பாவோடு முடிவுடைகிறது.
கி.பி.17ஆம் நூற்றாண்டில் ஆசிரிய நிகண்டு எழுதிய ஆண்டிப் புலவர் தமது முன்னுரையில்,
முந்துள திவாகரம் பிங்கல நிகண்டுசீர்
முந்து காங்கயன் உரிச்சொல்
முறைபெய காயகரம் பகரும் அகராதியிவை
முற்றும் ஒன்றாய்த் திரட்டி...
என்று சுட்டியுள்ளார். பிங்கல நிகண்டைக் காட்டிலும் திவாகரத்திற்கு முதன்மை தரப்பட்டுள்ளதன் மூலம் பிங்கலத்தைக் காட்டிலும் திவாகரமே முந்தியது எனக் கருத இடம்தருகிறது.
தெரிதரு பிங்கலம் திவாகரம் முதலாம்
பரவிய நிகண்டு பலஎடுத் தாராய்ந்து
எனச் சிதம்பர ரேவண சித்தர் உரிச்சொல் நிகண்டின் பாயிரப் பகுதியில் சுட்டியுள்ளார். திவாகர நிகண்டின் பாகுபாட்டினை அடியொற்றியே பிங்கலம், சூடாமணி நிகண்டு, உரிச்சொல், கயாதரம் முதலிய நிகண்டுகளும் அமைந்தன.
திவாகர நிகண்டின் முதல் நூற்பா,
அங்கதம் தோளணி அரவு மாகும்
இறுதி நூற்பா,
வேளாண்மை உபகாரம் ஈகையும் விளம்பும்
என்பதாகும்.
திவாகரம் – நூற்பா யாப்பு
நிகண்டு எழுதுவதற்கு ஆசிரியம், வெண்பா, கலித்துறை, விருத்தம் ஆகிய யாப்புகள் முறையே கையாளப்பட்டுள்ளது. தொல்காப்பியத்தைப் பின்பற்றி திவாகர நிகண்டு நூற்பா யாப்பில் எழுதப்பட்ட நிலையில், பின்வந்த நிகண்டுகள் அவற்றிலிருந்து மாறுபட்டன. வெண்பா மனனம் செய்ய எளிமையானது. இதன் எதுகை, மோனை தளை முதலியவை பாவின் வடிவத்தை மிகவும் எளிதாக நெஞ்சில் நிறுத்த வல்லன. கலித்துறை, விருத்தம் போன்ற வடிவங்களும் நிகண்டுகளில் மிகுதியாக இடம்பெற்று சிறப்பாகப் பயன்படுத்தப்படுகின்றன. காலத்திற்கு ஏற்ப அதன் தேவையைக் கருத்தில் கொண்டு அதனை நிறைவு செய்யும் நோக்கத்தோடு நிகண்டுகளின் யாப்பமைப்பு உருவாக்கப்பட்டுள்ளன.
திவாகரத்தைப் போல் பின்தோன்றிய நிகண்டுகள் பல நூற்பா யாப்பினால் இயற்றப் பெற்றுள்ளன. அகராதி நிகண்டு, பல்பொருள் சூடாமணியின் இரண்டாம் காண்டம், கயிலாச நிகண்டு சூடாமணி, பொதிகை நிகண்டின் இரண்டாம் பகுதி, பொருட்டொகை நிகண்டு, ஆகியன நூற்பா யாப்பில் தோன்றிய நிகண்டுகளாகும்.
நிகண்டு இயற்றுதற்கு நூற்பா, வெண்பா, கட்டளைக் கலித்துறை, விருத்தம் ஆகிய பாவடிவங்கள் முறையே பயன்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் மனப்பாடம் செய்வதற்கு ஆசிரியம் அவ்வளவு ஏற்றதல்ல என்ற காரணத்தால் நூற்பா யாப்பில் அமைந்த திவாகரம், பிங்கலத்தை ஆகியவற்றின் பாவடிவ முறையிலிருந்து பின்வந்த நிகண்டுகள் வேறுபட்ட பாவடிவங்களைக் கொண்டு இயற்றப்பட்டுள்ளன. தொல்காப்பியம் முதலான பண்டைய நூல்களில் அமைந்திருந்த எதுகை நயமிக்கச் சொல்லாட்சி முறைகள் நன்கு வளர்ச்சி பெற்று நிகண்டுகளில் அமைந்துள்ளன.
திவாகரத்தின் பதினோராம் தொகுதியில் உள்ள நூற்பாக்களை எதுகை முறையில்தான் ஆசிரியர் இயற்றியிருக்கிறார்.
ஊறே யிடையூறு முற்றறி புலனும் (280)
நூறே பொடியு நூறு மாகும் (281)
ஏணி யுலகு மெல்லையு மாகும் (282)
சேணே வுயர்வு நீளமு மாகும்(283)
பதினோராம் தொகுதியில் உள்ள நூற்பாக்கள் பெரும்பாலும் இவ்வாறே அமைக்கப் பெற்றுள்ளன.
திவாகரம் - பதிப்பு
நூல்களுக்கு எல்லாம் முதலாவதாகவும் வழிகாட்டியாகவும் விளங்குவது திவாகரர் செய்த திவாகரம் என்னும் நிகண்டு. தொல்காப்பியர் தம் நூலில் சுட்டிய சொற்பொருள் முறைகளை அடியொற்றி அதுபோலவே நூற்பாவால் இந்நிகண்டு அமைக்கப்பட்டுள்ளது. கி.பி.9ஆம் நூற்றாண்டு அளவில் இந்நிகண்டு தோன்றியது, இது தமிழில் முதலில் தோன்றிய நிகண்டு ஆதலால் இதனை ஆதி திவாகரம் என்றும் வழங்குவர். இதுவே பிங்கலம், உரிச்சொல் நிகண்டு, கயாதர நிகண்டு, சூடாமணி நிகண்டு முதலாகக் காலந்தோறும் நிகண்டுகள் வளர்ந்துவருவதற்கு வழிகாட்டியுள்ளது. திவாகரமும் சூடாமணி நிகண்டும் அதிகமாகப் பயிலப்பட்டுவந்துள்ளதாக மு.சண்முகப்பிள்ளை குறிப்பிடுகிறார்.
திவாகரமும் சூடாமணியும் மிகுதியாகப் பலரும் போற்றிக் கற்றமையால் இந்நிகண்டுகளுக்கான ஏட்டுச் சுவடிகளும் பலவாகப் பல பகுதிகளிலும் உள்ளன. எனினும் திவாகரச் சுவடிகள் முழுமையும் முறையாகப் பரிசோதிக்கப் பெற்றுச் செவ்விய முறையிலான ஒரு பதிப்பு இன்னும் வெளிவரவில்லை. (மு.சண்முகப் பிள்ளை, திவாகரப் பதிப்பு வரலாறு, பத்தாவது கருத்தரங்கு கோவை, ப.221)
1839ஆம் ஆண்டு திவாகரத்தின் முதற்பதிப்பானது சென்னைக் கல்விச் சங்கத்துப் புலவர் தாண்டவராய முதலியார் அவர்களால் பதிப்பிக்கப்பட்டுள்ளது. இவருடைய இப்பதிப்புப் பணியைக் குறித்து ஆராய்ந்த மு.சண்முகப் பிள்ளை சில கருத்துகளை முன்வைத்துள்ளார். அப்பகுதி வருமாறு:
திவாகர நிகண்டை முதன்முதலில் பதிப்பித்து வெளியிட்டவர் தாண்டவராய முதலியார். இவர் சென்ற நூற்றாண்டில் சென்னைக் கல்விச் சங்கத்தில் தமிழ்த் தலைமைப் புலவராய் விளங்கியவர். அட்டாவதானம் வீராசாமி செட்டியார், திருவேங்கடசால முதலியார், விசாகப் பெருமாளையர், கோமளபுரம் இராசகோபாலப் பிள்ளை, நயனப்ப முதலியார் முதலியோர்களும் தாண்டவ ராய முதலியரோடு இச்சங்கத்தில் தமிழ்ப் புலவராய்ச் சிறந்து விளங்கியவர்கள் ஆவர். கல்வித்துறைக்குப் பயன்படத்தக்கப் பல நூல்களையும் இச்சங்கத்தின் வாயிலாக இவர்கள் வெளியிட்டு வந்துள்ளார்கள். இந்த வகையில் அகராதிகளுக்கெல்லாம் மூலமாய் விளங்கியதும் சொற்பொருள் விளக்கநூலாய் அமைந்ததுமான திவாகரத்தைத் தலைமைப் புலவர் தாண்டவராய முதலியார் பதிப்பிக்க எடுத்துக் கொண்டார் என்று தோன்றுகிறது...
இவர் திவாகர ஏட்டுச் சுவடிகளை ஒத்துப்பார்த்துப் பிழைகளைக் களைந்து செம்மைப்படுத்திப் பதிப்பிக்க முற்பட்டார். திவாகரப் பகுதிகளில் சில இடங்களில் புதுச் சூத்திரங்களையும் இவர் செய்து சேர்த்துள்ளார். தாம் சேர்த்த புதுச் சூத்திரங்களுக்கு உடுக்குறியிட்டுக் காட்டியுள்ளார். (மு.சண்முகப் பிள்ளை, திவாகரப் பதிப்பு வரலாறு, பத்தாவது கருத்தரங்கு கோவை, பக்.221-222)
திவாகரத்திற்குக் கிரவுன் வடிவில் அமைந்த பதிப்பு வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் முதல் பக்கம் இல்லாமையால் வெளியான ஆண்டு முதலிய விவரம் தெரிய இயலவில்லை. இந்தப் பதிப்பில் எ,ஒ எழுத்துக்கள் புள்ளியிட்டுப் பதிப்பிக்கப்பட்டிருப்பதால் பெரும்பாலும் 1850க்கு முற்பட்ட பதிப்பாக இது இருத்தல் கூடும் என மு.சண்முகப்பிள்ளைக் குறிப்பிட்டுள்ளார் (மேலது,ப.222).
மேலும் திவாகரத்திற்கு எழுந்த சில பதிப்புகளைப் பற்றி மு.சண்முகப்பிள்ளை எடுத்துரைத்துள்ளார்.
அப்பகுதி வருமாறு:
பிரிட்டிஷ் மீயூசியம் கேட்லாக்கிலிருந்து திவாகரரின் திவாகரம் T.குப்பன் அய்யங்கார் என்பவரால் சென்னையிலிருந்து 1859ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட விவரம் தெரியவருகிறது. 1886ஆம் ஆண்டு தஞ்சாவூர் சின்னகன்னைய செட்டியார் என்பவரால் சென்னையில் வெளியிடப்பட்ட பதிப்பு ஒன்றுள்ளது...
இதற்குப் பின் வந்த பதிப்புகளின் முதற்பக்கத்திலும் பதிப்பாசிரியர் அச்சுக்கூடப் பெயர்கள் வேறுபட்ட போதிலும் பெரும்பகுதி அப்படியே காணப்படுகிறது. ஆதலால், பின்வந்த பதிப்பாசிரியர் எல்லோருமே முந்திய பதிப்பை அப்படியே பின்பற்றி வந்திருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது. எனினும் முற்பதிப்பில் புதுச்சூத்திரங்களுக்குக் காட்டப்பட்ட உடுக்குறியைக் கைவிட்டு விட்டனர். இதனால் எவை எவை திவாகரரின் சூத்திரம் எவை எவை தாண்டவராய முதலியார் உள்ளிட்ட கல்விச் சங்கத்து வித்துவான்கள் சேர்த்த சூத்திரம் என்பது தெரியமல் ஆகிவிட்டது....
1886க்குப் பின்னும், 1897இல் சென்னை குருநாத சுவாமிகளின் பதிப்பு வந்துள்ளது. இந்த நூற்றாண்டில் கோ.லோகநாத முதலியார் 1904இல் தமது மனோன்மணி விலாச அச்சுக் கூடத்தில் ஒரு பதிப்பு வெளியிட்டுள்ளார். பின்னரும் 1917,1924 முதலிய ஆண்டுகளிலும் இவ்வச்சுக் கூடப் பதிப்பு தொடர்ந்து வந்துள்ளது.
திருப்போரூர் டி.கோபாலநாயகர் அவர்களின் சென்னை கோல்டன் எலெக்டிரிக் பிரஸ்ஸில் 1923இல் ஒரு பதிப்பு வெளிவந்துள்ளது. 1958இல் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் பதிப்பு வெளியானது. இதுவே இப்போது கிடைக்கும் அச்சுப் பதிப்பாகும். (மேலது,பக்.224-225)
இவ்வாறு திவாகர நிகண்டு அதிகப் பதிப்புகளைப் பெற்றமைந்துள்ளதன் மூலம் அதன் பயில்நிலையை அறிந்துகொள்ள முடிகிறது.
உள்ளடக்கம்
இன்றுள்ள நிகண்டு நூல்களுள் திவாகரமே பழையானது. இந்த நிகண்டின் அமைப்பு முறையே பிற்கால நிகண்டுகளுக்கு எல்லாம் மூல வடிவமாக அமைந்து நிற்கிறது. இந்நிகண்டு பின்வரும் பன்னிரு தொகுதிகளைக் கொண்டது. தெய்வபெயர், மக்கட்பெயர், விலங்கின்பெயர், மரப்பெயர், இடப்பெயர், பல்பொருட்பெயர், செயற்கை வடிவப்பயர், பண்புப்பெயர், செயல்பற்றிய பெயர், ஒலி பற்றிய பெயர், ஒருசொல் பல்பொருட்பெயர், பல்பொருட் கூட்டத்து ஒரு பெயர் என்ற முறைமையில் அமைந்துள்ளது.
ஒருசொல் பல்பொருள் பெயர்த்தொகுதி
திவாகர நிகண்டில் இடம்பெற்றுள்ள முதல் பத்துத் தொகுதிகளும் ஒரு பொருள் பல்பெயர்த் தொகுதிகளாகும். இத்தொகுதியில் 377 சொற்களுக்குப் பொருள் தரப்பட்டுள்ளது. இவற்றுள் ஒரே பொருளுடைய சொல் எதுவும் இல்லை. குறைந்தது இரண்டு பொருள்கள் உடைய சொற்களும் பெரும்பான்மை 23 பொருள்கள் உடைய சொல்லும் இடம்பெற்றுள்ளன. பண்டைக் காலத்தில் தமிழகத்தில் கணிதம் எவ்வளவு வளர்ச்சி பெற்று விளங்கியது என்பதை,
நூலே, எண்ணும் பனுவலும் ஆகும்
என்னும் நூற்பாவால் அறியலாம். ஆரியர் என்றால் இன்றைய வழக்கில் உயர்ந்தவர் – மேலானவர் என்று மதிப்பாகச் சுட்டப்பட்டதாகக் கருதுகின்ற நிலையில், தாழ்ந்தவர் – மிலேச்சர் என்னும் பொருள் தருகிற நூற்பா திவாகரத்தில் இடம்பெற்றுள்ளது.
இடப்பெயர்த்தொகுதி
மக்கள் வாழுகின்ற இடங்கள் மட்டுமின்றி ஏழேழு உலகங்கள் தொடர்பான செய்திகளும் இந்த இடப்பெயர்த்தொகுதியில் இடம்பெற்றுள்ளது. நீரும் வயலும் சூழ்ந்த ஊரினைத் தான் கிராமம் என்ற சொல் குறிப்பிடுகிறது.
சுரந்த நீரும் வயலும் சூழ்ந்தஊர்
கிராம மாகக் கிளக்கப் படுமே
ஐந்நூறு குடும்பங்கள் ஒரு ஊரில் வாழ்ந்தால் அக்கிராமத்தைப் பெருங்கிராமம் என்று குறிப்பிடலாம்.
குடி ஐந்நூறுக்குக் குறைவற நிறைந்தது
பெருங்கிராமம் எனப் பேசப் படுமே
கடுமையான வழியைப் பற்றிக் குறிக்க அத்தம், கடம், கடறு, தூம்பு, சுரம், அருநெறி முதலிய சொற்களைச் சுட்டுகின்றனர். பல வழிகள் பிரிந்து செல்லும் இடத்திற்குக் கவலை, கவர்நெறி என்று பெயர்களைச் சுட்டுகின்றனர்.
கல்லூரிக்கும் அடுத்ததாகப் பெரிய கல்வி நிலையத்தைப் பல்கலைக்கழகம் என இன்று கூறுகிறோம். கழகம் என்பது சூது ஆடும்இடம் என்னும் பொருளில் திருக்குறளில் சூது என்னும் தலைப்பில் இடம்பெற்றுள்ளது. கால மாற்றத்தின் விளைவால்,
கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார் (குறள்.)
பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின் (குறள்.)
என்ற இரண்டு குறட்பாக்கள் கழகம் என்ற சொல்லைச் சூதாடுகளமாக வள்ளுவர் சுட்டியுள்ளார். இவ்வாறு அந்தக் காலத்தில் சொற்களின் பொருண்மையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை அறியமுடிகிறது.
செயற்கை வடிவப் பெயர்த்தொகுதி
பலவகையான வாத்தியங்கள் இசைக்கருவிகளின் பெயர்கள் சுட்டப்பட்டுள்ளன. வீடுகளில் பயன்படுத்தப்படும் பலவகையான பொருள்கள் பலவகை உலோகங்கள், மரங்கள், தோல், மண் முதலியவற்றால் செய்யப்பட்ட செயற்கை பொருள்களின் பெயர்கள் விவரிக்கப்பட்டுள்ளன.
பண்பு பற்றிய பெயர்த்தொகுதி
வடிவம், அளவு, நிறம் முதலிய காட்சிப் பொருள் சார்ந்த பண்புபெயர்களும், சுவை, குணம், உணர்வு முதலிய கருத்துப் பொருள் சார்ந்த பண்பு பெயர்களும் இத்தொகுதியில் கூறப்பட்டுள்ளன. சான்றாக,
உழுவல் எழுமையும் தொடர்ந்த அன்பு உரைக்கும்.
இறுமாப்பு ஏக்கழுத்தம்
செம்மாப்பு அகமலர்ச்சி
நாட்டியம் குறிப்பே
என்று சிலவற்றைச் சுட்டலாம்.
செயல் பற்றிய பெயர்த்தொகுதி
செயல் என்றால் வினையைக் குறிக்கும். ஏறத்தாழ 250 வினைகள் இத்தொகுதியில் பேசப்பட்டுள்ளன.
செய்தல் என்னும் வினைக்கு,
அயர்தல், குயிற்றல், ஆற்றல், இழைத்தல்
வனைதல், செய்தல் மாற்ற மாகும்.
என்ற நூற்பாவில் திவாகரம் விளக்கம் தந்துள்ளது. சில இடங்களின் சொற்களின் பொருள் விளக்கத்திற்கு வேறு நிகண்டுகளில் இடம்பெற்றுள்ள விளக்கத்தோடு ஒப்பிட வேண்டிய தேவை ஏற்படுகிறது. சான்றாக, ஒல்லும் சிரலும் முடிவின் உரைக்கும் என்னும் திவாகர நூற்பாவுக்கு, மண்டல புருடர் இயற்றிய சூடாமணி நிகண்டில் உரிய விளக்கம் தரப்பட்டுள்ளது.
கூடியும் கூட்ட மின்மை
குலவிய புலவி யென்ப
ஊடலே நணுகா ராகி
உரைமறுத் திருத்த லாகும்
ஆடவர் நீங்க உள்ளே
அடைத்துறல் துனியே என்பர்.
ஊடலைத் தீர்த்தலின் பேர்
உணர்த்தலே ஒல்லல் ஆகும்.
இவ்வாறு நிகண்டுகளை ஒப்பிட்டு ஆராய்ந்து பொருள் கொள்ளும் நிலையில் மேலான விளக்கத்தைப் பெறமுடிகிறது. இங்கு ஒல் என்னும் சொல்லுக்கு உடன்படுதல் என்னும் பொருள் உண்டு என்பதை அறியமுடிகிறது.
சேந்தன் திவாகரத்தில் 9500 சொற்கள் இடம்பெற்றுள்ளன. பிங்கலத்தில் 14700 சொற்கள் கூறப்பட்டுள்ளன. நிகண்டுகளில் பொதுவாகப் பெயர்ச்சொற்கள் மிகுதியாக இடம்பெற்றுள்ளன. ஒரு பொருள் குறித்த பல்பெயர்த்தொகுதிகளையுடைய நிகண்டுகளில், வினைச்சொற்கள் தனி ஒரு தொகுதியில் கூறப்பட்டுள்ளன. ஒரு சொல் பல்பொருள் தொகுதிக்கெனத் தோன்றிய நிகண்டுகளில் பெயர்ச்சொற்களுக்கிடையே வினைச்சொற்களும் சேர்த்துக் கூறப்பட்டுள்ளன.
தொல்காப்பியமும் திவாகரமும்
தமிழ் இலக்கண மரபில் பழமையான இலக்கணப் பனுவலாகக் கருதப்படுகின்ற தொல்காப்பியத்தின் இடையியல், உரியியல், மரபியல் பகுதிகள் நிகண்டுகளின் தோற்றத்திற்கும் வடிவ அமைப்பிற்கும் அடிப்படையாக அமைந்துள்ள நிலையில் திவாகரத்தில் சில நூற்பாக்கள் தொல்காப்பியத்தை அடியொற்றி, அப்படியே பின்பற்றி எழுந்த நிலையில் சில இடங்களைக் கண்ணுற முடிகிறது. சான்றாக,
தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்.உரி.803)
கயவே பெருமையு மேன்மையும் காட்டும் (திவா.249)
நளியென் கிளவி செறிவும் ஆகும் (தொல்.உரி.806)
நளியே பெருமையும் சீதமும் செறிவும் (திவா.255)
தாவே வலியும் வருத்தமும் ஆகும் (தொல்.உரி.827)
தாவே வலியும் வருத்தமும் ஆகும் (திவா.254)
தெவுக் கொளற் பொருட்டே (தொல்.உரி.828)
தெவு கொளற் பொருட்டே (திவா.204)
பாட்டி என்பது பன்றியும் நாயும் (தொல்.மரபு.1565)
பாட்டி யென்ப பன்றியும் நாயும் (திவா.60)
மாதர் காதல் (தொல்.உரி.811)
மாதர் காதலும் மகளிரும் ஆகும் (திவா.260)
புலம்பே தனிமை (தொல்.உரி.814)
புலம்பே தனிமையும் நடுக்கமும் புலம்பலும் (திவா.258)
எருமையும் மரையும் பெற்றமும் நாகே (தொல்.மரபு.1562)
மரையும் பெற்றமும் எருமையும் நாகே (திவா.60)
ஆகிய இடங்களை காணும்நிலையில் தொல்காப்பியத்தின் தாக்கம் திவாகரத்தில் முற்றுமுழுதாக அமைந்திருப்பதை அவதானிக்கமுடிகிறது.
மேலும் திருக்குறளில் இடம்பெற்றுள்ள சில குறட்பாக்களின் தாக்கத்தைத் திவாகர நிகண்டில் கண்ணுற முடிகிறது. சான்றாக,
உடைகுடி கூழ்அமைச்சு நட்பு அரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு (திருக்குறள்)
என்ற குறட்பாவின் உள்ளடக்கத்தைத் தழுவிப் பின்வரும் திவாகர நூற்பா இடம்பெற்றுள்ளதாக எண்ணத் தோன்றுகிறது.
படையும் குடியும் கூழும் அமைச்சும்
அரணும் நட்பும் அரசியல் ஆறே (திவாகரம்)
இவ்வாறு தமிழ் நிகண்டு மரபில் திவாகரத்தின் வகிபாகம் என்பது பல்வேறு கூறுகளை உள்ளடக்கிய நிலையில் காணப்படுகிறது. தொல்காப்பியத்தைப் பின்பற்றி எழுந்ததாகவும் பின்வந்த நிகண்டு நூல்களுக்கு வழிகாட்டியாகவும் அமைந்திருந்த நிலையைக் காணமுடிகிறது. அதிகமான பதிப்புகளைப் பெற்ற நிகண்டு நூலாகத் திவாகரம் திகழ்கிறது. தொல்காப்பியத்தைப் பின்பற்றி நூற்பா யாப்பில் அமைந்துள்ளது. தமிழ் நிகண்டு வரலாற்றில் திவாகர நிகண்டு தனக்கான தனித்த இடத்தினைப் பெற்றுத் திகழ்கிறது.
துணைநூற்பட்டியல்
1. திவாகரம் – முதல்தொகுதி, மு.சண்முகம்பிள்ளை, இ.சுந்தரமூர்த்தி ப.ஆர். சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை, 1990.
2. சற்குணம், மா., தமிழ் நிகண்டுகள் ஆய்வு, இளவழகன் பதிப்பகம், சென்னை, 2003.
3. சுந்தர சண்முகனார், தமிழ் அகராதிக்கலை, கழகவெளியீடு, 1971.
4. மாதையன், பெ., சொல்லேர் உழவன், அகராதியியல் கட்டுரைகள், அடையாளம் பதிப்பகம், சென்னை, முதற்பதிப்பு, 2015.
5. ஜெயதேவன், வ., தமிழ் அகராதியியல் வளர்ச்சி வரலாறு, ஐந்திணைப் பதிப்பகம், சென்னை, முதற்பதிப்பு, 1985
Comments
Post a Comment