இணையத்தில் தமிழ் - வலைப்பூ

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற நிலையில் இருபதாம் நூற்றாண்டில் தமிழ் மொழி இணையத்திலும் தனது ஆட்சியைச் செலுத்தி வருகிறது. கணினியில் பயன்படும் மொழிகளில் ஆங்கிலத்திற்கு அடுத்ததாக இரண்டாம் நிலையில் உள்ளது. கணினியில் இணையம் என்ற அமைப்பு உலகத்தைக் கைக்குள் கொண்டு வரும் மாயவித்தையைச் செய்து வருகிறது. இன்று இணையம் இல்லாத இடமே இல்லை என்ற அளவிற்கு இணையத்தின் பயன்பாடு மக்களிடையே கணக்கிட முடியாத நிலையில் காணப்படுகிறது. கணினியின் வரமாக இணையம் திகழ்கிறது. இணையத்தின் மூலமாகப் பல நன்மைகள் ஏற்படுகின்றன. அனைத்து விதமான தகவல்களையும் தரவுகளையும் ஒரு நொடிக்குள் நம் கைக்குள் கொண்டு வந்து சேர்ப்பதில் இணையம் பெரும்பங்கு ஆற்றிவருகிறது. இன்று நிறுவனங்கள் இணையத்தினை 2G, 3G, 4G என்ற தலைமுறைகளைப் பயன்படுத்தி அதிவேகமான இணையப் பயன்பாட்டினை மக்களுக்கு வழங்குவதில் முனைப்புடன் செயல்படுகிறது. கணினித் தமிழ் வளர்ச்சி பெற்ற இன்றைய காலகட்டங்களில் அதில் குறிப்பாக இணையத்தில் தமிழ் தட்டச்சு உருவாக்கப்பட்டதன் பயனாக இணையத்தில் தமிழ் எங்கும் உலவி வரக் காண்கிறோம். கணினித் தமிழ் தமிழ் மொழியைக் கணினியில் செயல்படுத்திக் காட்டிட பல்வேறு மென்பொருட்கள் இன்று உருவாக்கப்பட்டுள்ளன. அதன்பயனாக ஆங்கில விசைப்பலகையைக் கொண்டு தமிழ் தட்டச்சு செய்யவும் அல்லது கூகுள் விசைப்பலகை மூலம் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து அதனைத் தமிழில் எழுத்துப் பெயர்ப்பு செய்வதும் எனப் பல்வேறு முறைகள் பின்பற்றுவதன் வாயிலாகத் தமிழ் எழுத்துருக்கள் கணினி பயன்பாட்டில் எளிதாக இடம்பெற்றுள்ளன. வலைப்பூ web blog என்பதன் சுருக்கமே Blog ஆகும். தமிழில் வலைப்பூ, வலைப்பதிவு என்று அழைக்கப்படும். ப்ளாக் என்பது ஒருவகையான இணையத்தளம் அல்லது இணையத்தளத்தில் ஒரு பகுதியாகும். செய்திகளைப் பகிரும் முறையில் இவை இரண்டும் வேறுபடுகின்றன. இணையத்தளங்களில் செய்திகள் எப்பொழுதாவது தான் புதுப்பிக்கப்படும். ஆனால் வலைப்பூவில் (blog) செய்திகள் அடிக்கடி புதுப்பிக்கப்படும். வலைப்பூவின் சிறப்பம்சங்களில் ஒன்று வாசகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிடும் வசதி உள்ளது. இணையத்தளங்களில் அந்த வசதி இல்லை. நம் கருத்துக்களைச் சொல்ல வேண்டுமானால் மின்னஞ்சல், தொலைபேசி ஆகியவற்றைத் தான் பயன்படுத்த வேண்டும். இணையத்தளம் தொடங்குவதற்கு PHP, MYSQL, Python போன்ற கணினி மொழிகள் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் வலைப்பூ தொடங்குவதற்குக் கணினி அடிப்படைகள் தெரிந்திருந்தாலே போதுமானது. வலைப்பூக்கள் ஏன் தொடங்க வேண்டும் என்ற கேள்விக்கு நம்மிடம் விடையில்லை. எதற்காக வேண்டுமானாலும் வலைப்பூவைத் தொடங்கலாம். உங்கள் கருத்துக்களையோ, அனுபவங்களையோ, உங்களுக்கு தெரிந்த ஒன்றைப் பற்றியோ, நீங்கள் ரசித்தவைகளைப் பற்றியோ மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதாக வலைப்பூவைத் தொடங்கலாம். இணையத்தின் மூலம் பணம் சம்பாதிக்கவும் சிலர் வலைப்பூவைத் தொடங்குவர். இலவசமாக வலைப்பூவைத் தொடங்குவதற்குப் பல இணையத்தளங்கள் உள்ளன. ப்ளாக்கர் மற்றும் வேர்ட்பிரஸ் ஆகிய இரண்டும் அவற்றில் முக்கியமாக விளங்குகின்றன. ப்ளாக்கர் (Blogger) தளம் கூகிள் நிறுவனத்தின் தளமாகும். உங்களுக்கு ஜிமெயில், யூட்யூப் போன்ற கூகிள் கணக்கு இருந்தால் அதன் மூலம் ப்ளாக்கர் தளத்தை உருவாக்கிப் பயன்படுத்த முடியும். அல்லது புதிதாக கூகிள் கணக்கைத் தொடங்கியும் பயன்படுத்தலாம். நீங்கள் தொடங்கும் வலைப்பூ முகவரியில் நீங்கள் கொடுத்த பெயருடன் .blogspot என்று சேர்ந்து வரும். இதற்கு Subdomain என்று பெயர். உதாரணத்திற்கு நீங்கள் உங்கள் பெயரைக் கொடுத்திருந்தால் உங்கள் முகவரி பெயரோடு blogspot.com என்று வரும். என்னுடைய வலைப்பூவின் பெயர் ilanangaiwritings.blogspot.com இந்த வலைப்பூவினைத் தொடங்கிய பிறகு என்னுடைய கட்டுரைகளை இதில் தொடர்ந்து எழுதி வருகிறேன். கட்டுரைகள் நூலாக்கம் பெறுவது மட்டுமின்றி இதுபோன்ற கணினியில் உள்ளீடு செய்வதன் மூலம் நம்முடைய படைப்புகள் தொடர்ந்து வெளிவருகிறது. இன்றைய காலக்கட்டத்தில் இதுபோன்ற ஊடகங்களில் எழுதி வருவதில் ஆய்வாளர்கள் முனைப்புக் காட்ட வேண்டும். ஒரு வலைப்பூ தளத்தை உருவாக்கிக் கொண்டதன் பயனாக அந்தத் தளத்திலிருந்தே பல வலைப்பூ கணக்குகளை உருவாக்கிக் கொள்ள முடியும். இன்று என்னுடைய வலைப்பூ தளத்தைப் பயன்படுத்தி ஒன்றுக்கு மேற்பட்ட வலைப்பூக்களை இயக்கி வருகிறேன். வலைப்பூ தொடங்க எந்தப் பணமும் செலுத்த வேண்டியதில்லை. இணையத்தளம் போன்று இயங்கக் கூடியது. ஆனால் எந்த விதமான கட்டணமும் இதற்கு தேவையில்லை. வலைப்பூ தொடங்குவதன் மூலம் படைப்பாளர்கள், ஆய்வாளர்கள் பலர் நன்மையை அடைய வாய்ப்புண்டு. அதில் நாம் எழுதுவது, உள்ளீடு செய்வது என்று அனைத்தும் மிகச் சுலபமாக அமைந்துள்ளது. வலைப்பூவினை இயக்குவது அதிலுள்ள அமைப்புகளை மாற்றி அழகான பின்னணியில் நமது வலைப்பூ தளத்தினை உருவாக்கிக் கொள்வது என அனைத்தையும் எளிதில் அறிந்துகொண்டு செயல்படுத்த முடியும். இவ்வாறு வலைப்பூ என்ற அமைப்பின் மூலம் தமிழ் மொழியின் சிறப்புகளை உலகிற்கு எடுத்துக்காட்ட பலர் இன்று இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். வலைப்பூ என்பது இணையத்தில் நமக்கான இடம் என்று அனைவரும் அதில் தொடர்ந்து தங்களுடைய ஆய்வுகளை, படைப்புகளை எழுதி வரவேண்டும். வருங்காலச் சமூகம் கணினி மையமாகக்கப்பட்டது. அதற்கான தேடுதல் என்பது இணையத்தளத்திலே அமைந்துள்ளது. எனவே தமிழ் மொழியில் உள்ள செய்திகளை இணையத்தில் ஏற்றுவது என்பது நம் அனைவரின் கடமை எனக் கருத வேண்டும். கணினித் தமிழ் உருப்பெற அதுவே வழிவகையாகும்.

Comments

Popular posts from this blog

UGC NET TAMIL - TNPSC தமிழ் இலக்கிய வரலாறு தொடர்பான விரிவான வினாக்கள்

பல்லவர் கால இலக்கியங்கள் - பக்தி இலக்கியக் குறிப்புகள்

UGC Tamil TNPSC Tamil - பக்தி இலக்கிய வினாக்கள்