கிறித்துவர்களின் தமிழ்த்தொண்டு
முன்னுரை
ஐரோப்பியர் வருகையால் தமிழகத்தில் கிறித்தவ சமயம் பரவியதோடு தமிழும் புதிய திசையில் பயணம் செய்ய தொடங்கியது. கிறித்தவர்கள் தமிழுக்குச் செய்த தொண்டு இலக்கிய வரலாற்றில் நீங்கா இடம்பெறுவதாகும். தமிழகத்தில் அச்சு இயந்திரம் அறிமுகமானது. செய்யுளின் கடினம் குறைந்து எளிய உரைடை வளர்ந்தது. புத்திலக்கியங்களான சிறுகதை, புதினம், நாடகம் முதலான உரைநடை நூல்கள் தோன்றி தமிழ் மறுமலர்ச்சி அடைந்தது. எழுத்து சீர்த்திருத்தம் ஏற்பட்டது. இத்தகைய பெரும் மாற்றங்கள் தமிழ் இலக்கியத்தில் ஏற்பட காரணமானவர்கள் கிறித்தவர்கள்.
இத்தகைய மாற்றங்களை உருவாக்கிய கிறித்தவர்களின் தமிழ்ப் பணியை, அயல்நாட்டு கிறித்தவர்பணி, தமிழ்நாட்டுக் கிறித்தவர்பணி என இரண்டாகப் பிரிக்கலாம்.
அயல்நாட்டு கிறித்தவர்களின் தமிழ்த்தொண்டு
வீரமாமுனிவர் (1680-1746)
இவர் இத்தாலி நாட்டுக் கத்தோலிக்க மதகுரு ஆவார். இவரது இயற்பெயர் கான்ஸ்டான்டின் ஜோசப் பெஸ்கி. இவர் தமது 30வது வயதில் சமயத் திருப்பணியாற்றத் தமிழகம் வந்தார். சுப்ரதீபக் கவிராயரிடம் 20 ஆண்டுகள் தமிழ் பயின்றார். தமிழோடு தெலுங்கு, வடமொழி ஆகியனவும் கற்றார். தமிழில் சதுரகராதி, தொன்னூல் விளக்கம் என்னும் இலக்கண நூல் ஆகியவற்றோடு கலம்பகம், அம்மானை போன்ற சிற்றிலக்கியங்கள், பரமார்த்த குருகதை என்னும் உரைநடைக் கதைநூல், தேம்பாவணிப் பெருங்காப்பியம் ஆகியன படைத்தும் எழுத்துச் சீர்த்திருத்தம் கண்டும் பெருமைகள் சேர்த்தார்.
டாக்டர் ஜி.யு.போப் (1820-1907)
இவர் இங்கிலாந்து நாட்டவர். தமது 19வது வயதில் தமிழகம் வந்தார். மகாவித்துவான் இராமனுஜ கவிராயரிடம் தமிழை முறையாகப் பயின்றார். முதலில் திருநெல்வேலி சாயர்புரத்திலும், அடுத்துத் தஞ்சையிலும், பின்னர் நீலகிரியிலும் சமயப் பணிபுரிந்தார். திருக்குறள், நாலடியார் போன்றவற்றில் தோய்ந்து மகிழ்ந்து அவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். புறநானூறு, புறப்பொருள் வெண்பாமாலை ஆகியவற்றுள் சில செய்யுள்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். 1880இல் இங்கிலாந்து சென்று, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தமிழும் தெலுங்கும் போதிக்கும் ஆசிரியராகப் பணிசெய்தார். திருவாசகத்தில் மனம் தோய்ந்து அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். இவரால் தமிழ், உலகறியும் பெருமை பெற்றது.
டாக்டர் கால்டுவெல்
இவர் அயர்லாந்தில் பிறந்து, ஸ்காட்லாந்தில் கல்வி பயின்று, ஆங்கிலக் கிறித்துவ சங்கத்தின் துணையோடு தமது 23வது வயதில் சமயம் பரப்புவதற்காகத் தமிழகம் வந்தார். திருநெல்வேலி மாவட்டம் இடையன்குடியை இருப்பிடமாகக் கொண்டு ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களைக் கிறித்தவராக மாற்றினார்.
இவர் இலத்தீன், ஹிப்ரூ, ஜெர்மன், பிரெஞ்சு போன்ற மேலை மொழிகளிலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், துளு போன்ற திராவிட மொழிகளிலும் வடமொழியிலும் அறிவும் புலமையும் பெற்றிருந்தார். இதனால், திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (A Comparative Grammar of the Dravidian Languages) என்ற ஒப்பற்ற ஆராய்ச்சி நூலை எழுதி வெளியிட்டார்.
சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் இராயல் ஆசியக் கழகம் (Royal Asiatic Society) இரண்டும் இவருக்கு இலக்கிய வேந்தர், வேத விற்பன்னர் என்ற பட்டங்களை வழங்கிச் சிறப்பித்தன. இவர் எழுதிய திருநெல்வேலி மாவட்ட வரலாறு என்ற நூல் ஓர் அரிய வரலாற்றுக் கருவூலமாகும். இந்தியாவில் 53 ஆண்டுகள் வாழ்ந்த இவர் தமது 77ஆம் வயதில் கொடைக்கானலில் உயிர்துறந்தார். இவரது சமாதி இடையன்குடியில் இவர் எழுப்பிய தேவாலயத்தில் இருக்கிறது.
தத்துவ போதகர் (1577-1656)
இத்தாலி நாட்டுக்காரரான இவரது இயற்பெயர், இராபர்ட் டி நொபிலி (Robert De Nobili) வடமொழியும், தென்மொழிகளும் கற்றவர். சென்னை, மதுரை, திருச்சிராப்பள்ளி முதலிய நகரங்களில் அவ்வப்போது தங்கி உயர் சாதியினரைக் கிறித்தவர்களாக மதம் மாற்றினார். வீரமாமுனிவருக்கு நூறு ஆண்டுகுள் முன்னர் வாழ்ந்தவர். தமிழில் முதல் உரைநடை நூலை எழுதிய பெருமை இவரையே சாரும். தமிழ் – போர்ச்சுகீசிய அகராதியை உருவாக்கினார். தரங்கம்பாடியில் இவர் பெயரில் ஓர் அச்சகம் இன்றும் உள்ளது.
சீகன்பால்கு ஐயர் (1683 - 1719)
இவர் ஜெர்மனி நாட்டவர். 1705இல் தமிழகம் வந்தார். தஞ்சாவூருக்கு அடுத்த தரங்கம்பாடியில் எல்லப்பா என்பவரிடம் தமிழ் கற்றார். அங்கேயே சமயப் பணியும் புரிந்தார். தரங்கம்பாடியில் ஓர் அச்சுக் கூடத்தையும், அதற்கு உதவியாகக் காகிதத் தொழிற்சாலை ஒன்றையும் நிறுவினார். முதன் முதலில் தமிழ் நூல்களை அச்சிட்ட பெருமை இவரையே சாரும்.
எல்லீஸ் (1777 - 1819)
இவர் 1810ஆம் ஆண்டு முதல் 1819ஆம் ஆண்டு வரை சென்னை மாகாணத்தில் பிரித்தானிய அரசின் கீழ் பணியாற்றிய அதிகாரி. 1816ஆம் ஆண்டிலேயே தென்னிந்திய மொழிகள் பிற இந்திய மொழிகளிலிருந்து வேறுபட்டிருப்பதை உணர்ந்து தென்னிந்திய மொழிக் குடும்பம் என்னும் கருத்தாக்கத்தை முதன்முதலில் வெளிப்படுத்தியவர். திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். மேலும் திருக்குறளுக்கு விளக்கவுரையும் எழுதியுள்ளார். 19ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட தமிழ் மறுமலர்ச்சியின் ஊற்றுக்கண்ணாக எல்லீசு இருந்தார் என்று அயோத்திதாசப் பண்டிதர் குறிப்பிட்டுள்ளார்.
கமில் சுவலபில், ஆன்டிரநோவ், ரூதின் செம்பியன், டாக்டர் ஆஷர் போன்ற இக்காலத்து வெளிநாட்டுக் கிறித்துவர்களும் தமிழுக்கு அரிய தொண்டினை ஆற்றியுள்ளனர்.
தமிழகக் கிறித்துவர்களின் தமிழ்த்தொண்டு
மேலைநாட்டுக் கிறித்தவர்கள் மட்டுமின்றித் தமிழகத்தில் வாழ்ந்த கிறித்தவர்களும் தமிழ் இலக்கிய வரலாற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்றியுள்ளனர். அவர்களைக் குறித்து இப்பகுதியில் காணலாம்.
வேதநாயகம் பிள்ளை (1826 - 1889)
தமிழகக் கிறித்தவத் தொண்டர்களில் தலையாயவர் இவர். திருச்சிராப்பள்ளி குளத்தூரில் பிறந்தவர். மாயவரத்தில் உரிமையியல் நீதிபதி பதவி வகித்தவர். தமிழில் முதல் புதினமான பிரதாப முதலியார் சரித்திரம் என்பதை எழுதித் தமிழுக்குப் பெருமை சேர்த்தார். இவர் கிறித்தவரேயாயினும் சமரச சன்மார்க்க அன்பர் ஆவார். இவர் எழுதிய சர்வசமய சமரச கீர்த்தனை இதற்குச் சான்று. இவரது நீதிநூல் எளிமையான, இக்கால அறநூலாகும். பெண்ணின் பெருமைகளைக் கூறும் பெண்மதி மாலை எழுதினார். இவர் எழுதிய மற்றொரு புதினம் சுகுண சுந்தரி சரித்திரம் என்பதாகும்.
எச்.ஏ.கிருட்டிணப் பிள்ளை (1827-1900)
திருநெல்வேலி ரெட்டியார்பட்டியில் வைணவ வேளாளர் மரபில் தோன்றி, கிறித்தவராக மாறியவர். இவரைக் கிறித்தவக் கம்பன் என்று அழைப்பார்கள். ஜான்பன்யன் என்பவர் எழுதிய பில்கிரிம்ஸ் பிராக்ரஸ் (Pilgrim’s Progress) என்ற நூலைத் தமிழில் இரட்சண்ய யாத்ரிகம் என்ற காவியமாக எழுதினார். இது 4000 விருத்தப்பாக்களைக் கொண்ட பெருங்காப்பியம் ஆகும்.
இவரது இன்னொரு நூல் கிறித்தவர்களின் தேவாரம் என்று போற்றப்படும் இரட்சண்ய மனோகரம் என்பதாகும்.
வேதநாயக சாஸ்திரியார் (1774 - 1864)
திருநெல்வேலியில் பிறந்து தஞ்சையில் பணிபுரிந்தவர். இவர் இயற்றிய பெத்லகேம் குறவஞ்சி இயேசு நாதரைக் கதைத் தலைவராகக் கொண்ட நாடகம் ஆகும். இவர் இயற்றிய மற்றொரு நாடகம் சென்னைப் பட்டணப் பிரவேசம் என்பது. கர்த்தர் உலகைப் படைத்த திறம் வியந்து ஞானத்தச்சன் நாடகம் ஒன்றை இயற்றினார். மாலை, உலா, கும்மி முதலிய சிற்றிலக்கிய வகையிலும் இவர் நூல்கள் பல எழுதியுள்ளார்.
தஞ்சை ஆப்ரகாம் பண்டிதர்
திருநெல்வேலி சாம்பூர் வடகரை இவரது சொந்த ஊர். தமிழிசைக்கு இவர், ஆற்றிய தொண்டு பெரிது. மேலைநாட்டு இசைக்கும், தமிழிசைக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமை, வடநாட்டு இசைக்கும், தென்னாட்டு இசைக்கும் உள்ள வேறுபாடு முதலியவற்றைக் கூறியுள்ளார். கருணாமிர்தசாகரம் என்ற பெயரில் இசைப் பேரிலக்கியம் படைத்துள்ளார். எந்த நாட்டவரிடமும் இல்லாத சிறப்பாக 2000 ஆண்டுகட்கு முந்தியது தமிழிசை என்ற உண்மையினை ஆதாரங்களுடன் நிறுவியுள்ளார்.
முடிவுரை
கிறித்துவம் தந்த தமிழ் – இயல், இசை, நாடகம், மொழி, ஒப்பாய்வு, உரைநடை, சிறுகதை, புதினம் எனப் பன்முகங்களை உடையதாகும். இவர்களின் பங்களிப்பைத் தவிரித்துவிட்டு தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதிய முடியாது.
Comments
Post a Comment