நான்காம் திருமொழி நம்மாழ்வார் பாடல்கள்
நான்காம் திருமொழி
நம்மாழ்வார்
ஆழ்வார்களில் தலைமை சான்றவர். இவரை உடலாகவும் ஏனையோரை உறுப்புகளாகவும் வைணவர்கள் கருதுகின்றனர். பாண்டி நாட்டில் ஆழ்வார் திருநகரி வேளாண் மரபில் காரியார்க்கும் உடைய நங்கைக்கும் பிரமாதி வருடம் வைகாசித் திங்கள் பௌர்ணமி திதியில் இறைவனின் அம்சமாகப் பிறந்தவர். சடகோபர், மாறன், பராங்குசர் ஆகியவை இவருக்கு வழங்கும் வேறுபெயர்கள். சைவத்திற்கு மாணிக்கவாசகர் எப்படியோ, அப்படியே வைணவத்திற்கு நம்மாழ்வார். காலம் கி.பி.9ஆம் நூற்றாண்டின் தொடக்கப்பகுதியாகும்.
இயற்றிய நூல்கள்:
நம்மாழ்வார் நான்கு நூல்களை இயற்றியுள்ளார். அவை திருவாசிரியம், திருவாய்மொழி, திருவிருத்தம், பெரிய திருவந்தாதி. இந்நான்கையும் வைணவர் தம் சமயத்திற்குரிய சதுர்மறைகளாகக் கூறுவர். நம்மாழ்வார் பாடல்கள் திருவாய்மொழி எனப்படும். ஏனையோர் பாடியன திருமொழி என்று அழைக்கப்படும். திருவாய்மொழி திராவிட வேதம் எனச் சிறப்பிக்கப்படுகிறது. நம்மாழ்வாரின் சீடரான மதுரகவியாழ்வார் இறைவனைப் பாடாமல் நம்மாழ்வாரையே இறைவனாகக் கருதி பாடல்களை எழுதியுள்ளார்.
1. அஞ்சிறைய மடநாராய், அளியத்தாய் நீயும்நின்
அஞ்சிறைய சேவலுமாய் ஆவாவென் றெனக்கருளி
வெஞ்சிறைப்புள் ளுயர்த்தாற்கென் விடுதூதாய்ச் சென்றக்கால்
வன்சிறையில் அவன்வைக்கில் வைப்புண்டா லென்செய்யுமோ?
2. என்செய்ய தாமரைக்கண் பெருமானார்க் கென்தூதாய்
என்செய்யும் உரைத்தக்கால் இனக்குயில்காள். நீரலிரே?
முன்செய்த முழுவினையால் திருவடிக்கீழ்க் குற்றேவல்
முன்செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே?
3. விதியினால் பெடைமணக்கும் மென்னடைய அன்னங்காள்
மதியினால் குறள்மாணாய் உலகிரந்த கள்வற்கு
மதியிலேன் வல்வி னையே மாளாதோ வென்று, ஒருத்தி
மதியெல்லாம் முள்கலங்கி மயங்குமால் என்னீரே
4. என்நீர்மை கண்டிரங்கி யிதுதகா தென்னாத
என்நீல முகில்வண்ணற் கென்சொலியான் சொல்லுகேனோ
நன்னீர்மை யினியவர் கண் தங்காதென் றொருவாய்ச்சொல்
நன்னீல மகன்றில்காள். நல்குதிரோ நல்கீரோ?
5. நல்கித்தான் காத்தளிக்கும் பொழிலேழும் வினையேற்கே
நல்கத்தா னாகாதோ? நாரணனைக் கண்டக்கால்
மல்குநீர்ப் புனற்படப்பை இரைதேர்வண் சிறுகுருகே.
மல்குநீர்க் கண்ணேற்கோர் வாசகங்கொண் டருளாயே.
1. அழகிய சிறகுகளைக் கொண்டிருக்கின்ற மடப்பம் மிக்க நாராய்! நீ கருணை உள்ளம் அதிகமாகவே கொண்டிருக்கின்றாய்! நீயும் உன்னுடைய, அழகிய சிறகுகளை உடைய உன் சேவலுடன், “ஆ! ஆ! !” என்று அடியேனின் உள்ளம் உவக்குமாறு இரக்கம் கொண்டு எனக்கருள்புரிகின்றாய்! கருடாழ்வானைத் தன் கொடியாகக் கொண்டிருக்கின்ற எம்பெருமான் ஸ்ரீமத்நாராயணனிடத்தே என் பொருட்டுத் தூது செல்வாயாக! அவ்வாறு தூது சென்றிருக்கின்ற போது அந்த எம்பெருமான் உங்கள் முகத்தைக் கவனித்துப் பார்க்காமல் உங்களைச் சிறையில் அடைத்துவிட்டால் அடியேனுக்காகச் சிறைப்பட்டிருப்பதற்குச் சரி என்று சம்மதிப்பீர்களா! நீங்கள் அவ்வாறு சம்மதிப்பீர்களாயின் அஃது ஒரு குற்றமும் ஆகாது. நன்மையே பயக்கும்.
2. ஒன்று சேர்ந்து இணைந்து வாழ்கின்ற குயில்களே!அடியேனுக்காக எம்பெருமான் செந்தாமரைக் கண்ணனிடம் தூது செல்வீர்களா! அடியேனின் சொற்களை எம்பெருமான் ஸ்ரீமத் நாராயணனிடத்தே நீங்கள் சென்று எடுத்துரைப்பதனால் எவ்வகையிலும் குற்றமுண்டாகாது. அந்த எம்பெருமானின் திருவடிகளினிடத்து அடியேன் இருந்து கொண்டு குற்றேவல்களைச் செய்வதற்கு இயலாதவாறு அடியேன் முன்பு செய்துள்ள தீவினைகளெல்லாம் தடுத்து விடுகின்றன. அடியேன் அந்த எம்பெருமானுக்கு உதவி செய்வதற்கு ஏற்கனவே முயலாமலிருந்துவிட்டேன். அத்தகைய அடியேன் இதற்கு மேலும் அகன்று போகலாகுமோ! அவ்வாறு செய்வது முறையாகுமோ! ஆகாது.
3. நல்வினை காரணமாகப் பெண் அன்னத்துடன் கலந்து மகிழ்ச்சியுடன் இருக்கின்ற அழகிய நடையையுடைய அன்னங்களே! “வாமனன்” என்னும் திருஅவதாரமான “குள்ள வடிவு” மேற்கொண்டு பிரம்மரியனாகிச் சென்று “மகாபலிச்சக்கரவர்த்தி” என்னும் மன்னனிடத்தே தன் அறிவின் மேன்மை காரணமாக இந்த உலகத்தை யாசித்துப் பெற்ற, கள்ள வாமனானப் பெருமானிடம் ஒரு பெண், தன்னுடைய வலிமை மிக்க வினைகளெல்லாம் அழிந்து போகாதோ! என்று எண்ணித் தன் உள்ளம் கலங்கி மயங்கிக் கிடக்கின்றாள்” என்று எடுத்துரைப்பீர்களாக!
4. நல்ல நீல நிறத்தினைக் கொண்டுள்ள “மகன்றில்” என்னும் பறவைகளே! என்னுடைய இத்தகைய இரங்கத்தக்க நிலைமையிலுள்ள என் நிலைமையைப் பற்றி நன்கு அறிந்து வைத்திருந்தும், இவ்வாறு பிரிந்திருத்தல் என்பது தக்கதன்று என்று அந்த எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணன் சிறிதளவும் எண்ணிப் பார்க்க வில்லையே! நீ மேகவண்ணனாகிய என் நாயகனிடத்தே சொல்வாயாக! என்று எதைச் சொல்லப் போகிறேன்! அந்த எம்பெருமான் உடனே வரவில்லை என்றால், என்னுடைய நல்ல உயிரானது இனியும் அத்தகைய தலைவரின் பொருட்டு, அவளிடத்திலே தங்கியிருக்காது என்னும் இத்தகவலை அவரிடத்தே சென்று ஒரு வார்த்தையை எடுத்துரைப்பதையேனும் செய்வீர்களா! செய்யாமல்விட்டு விடுவீர்களா!
5. நீர் நிறைந்திருக்கின்ற வளம்மிக்க தோட்டங்களில் உள்ள மீன்களை உண்டு வாழ்கின்ற சிறியதான “குருகு” என்னும் பறவையே! அழகுமிக்க ஏழு உலகங்களையும் காப்பாற்றுகின்ற எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணனை நீங்கள் காண்பீர்களேயானால், வினைகள் மிகுந்திருக்கின்ற அடியேனுக்கு “அருள்புரிதல்” என்னும் நல்ல செயலைச் செய்தலாகாதோ!” என்று நீங்கள் கேளுங்கள்! அதற்கு அவர் கூறும் ஏதேனும் ஒரு வார்த்தையைக் கேட்டு வந்து நீர் ததும்பிக் கொண்டிருக்கின்ற கண்களை உடைய அடியேனுக்கு எடுத்துரைப்பீர்களாக!
Comments
Post a Comment