மாணிக்கவாசகர் திருப்பள்ளியெழுச்சி

 திருப்பள்ளியெழுச்சி

முன்னுரை

பள்ளியெழுச்சி என்பது மகளிர் விடியற்காலையில் எழுந்து நீராடி இறைவனை வழிபடும் நிகழ்வாகும். சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகரால் இயற்றப்பட்ட திருவாசகத்தில் இப்பகுதி இடம்பெற்றுள்ளது. 

ஆசிரியர் குறிப்பு

திருவாதவூரார் என்று அழைக்கப்படும் மாணிக்கவாசகர் பாண்டிய நாட்டில் சம்புபாத சரிதருக்கும் சிவஞானவதிக்கும் மகனாகப் பிறந்தார். அரிமர்த்தன பாண்டியனிடம் அமைச்சராகப் பணிபுரிந்தார். ஞான நெறியைப் பின்பற்றிய இவர் 32 ஆண்டுகள் வாழ்ந்து ஆனி மகத்தில் சிதம்பரத்தில் சிவனடி சேர்ந்தார்.

பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறையில் இவருடைய பாடல்கள் இடம்பெற்றுள்ளன. திருவாசகம், திருக்கோவையார் இவர் பாடியவை. 

‘திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்’ என்று இவர் இயற்றிய திருவாசகத்தை அறிஞர் உலகம் போற்றுகிறது. திருவெம்பாவை பாடல்கள் 20, திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் 10 சேர்த்து மொத்தம் 30 பாடல்கள் மார்கழி 30 நாட்கள் இறைவழிபாட்டின் போது பாடப்படுகின்றன.

திருப்பள்ளியெழுச்சி

திருப்பள்ளியெழுச்சி தமிழின் தொண்ணூற்றாறு பிரபந்தங்களின் வகைகளுள் ஒன்று. உயிரினங்களைப் போன்று இறைவனும் இரவில் உறங்கிக் கொண்டிருப்பதாகக் கருதி துயில் எழுப்புவதாக இப்பாடல்கள் அமையப் பெற்றுள்ளன. இப்பாடல்களில் அதிகாலைப் பொழுதில் சுற்றுப்புறத்தில் நிகழும் நிகழ்ச்சிகள் இடம் பெற்றுள்ளன.


பதிகம் எழுந்த வரலாறு

மாணிக்கவாசகர் திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருந்தபோது, விடியற்காலையில் இறைவனைத் துயில் எழுப்புவதாகத் திருப்பள்ளியெழுச்சி என்னும் இதனை அளிருச்செய்தார். மாணிக்கவாசகர் தாம் பெற்ற இறை அனுபவத்தைத்தான் திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களில் கூறியுள்ளார். இதற்குப் புறச் சான்றாக இருக்கும் கோயில்தான் திருப்பெருந்துறை. இப்போது இது ஆவுடையார் கோயில் என்ற பெயரில் வழங்கப்படுகிறது.

திருப்பள்ளியெழுச்சி என்பது சுப்ரபாதம் என வடமொழியில் வழங்கும். வைகறையில் – அதிகாலைப் பொழுதில் இருள்நீங்க ஒளி எழுவதுபோல, ஆன்மாக்களுடைய ஞானவொளி வெளிப்படுகின்ற முறைமையை இப்பாடல்கள் குறிக்கின்றன. மேலும், இது நம்முள் உறங்கும் இறைவனைத் துயில் எழுப்புவதுமாம். இவ்வகை இலக்கியம் தமிழில் உருவாகக் காரணமாக இருந்தவர் மாணிக்கவாசகர்.

திருப்பள்ளியெழுச்சி

1. போற்றியென் வாழ்முத லாகிய பொருளே

புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண்

ஏற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும்

எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்

சேற்றிதழ்க் கமலங்கள் மலரும்தண் வயல்சூழ்

திருப்பெருந் துறைஉறை சிவபெருமானே

ஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய்

எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே


2. அருணன் இந்திரன் திசைஅணுகினன் இருள்போய்

அகன்றது உதயம்நின் மலர்த்திரு முகத்தின்

கருணையின் சூரியன் எழவெழ நயனக்

கடிமலர் மலரமற்று அண்ணலங் கண்ணாம்

திரள்நிரை அறுபதம் முரல்வன இவையோர்

திருப்பெருந் துறையுறை சிவபெருமானே

அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே

அலைகடலே பள்ளியெழுந் தருளாயே


3. கூவின பூங்குயில் கூவின கோழி

குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்

ஓவின தாரகை ஒளியொளி உதயத்து

ஒருப்படு கின்றது விருப்பொடு நமக்குத்

தேவநற்  செறிகழல் தாளிணை காட்டாய்

திருப்பெருந் துறையுறை சிவபெருமானே

யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய்

எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே

4. இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்

இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்

துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்

தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்

சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்

திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே

என்னையும் ஆண்டுகொண்டின்னருள் புரியும்

எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே


5. பூதங்கள் தோறும்நின் றாய்எனின் அல்லால்

போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்

கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்

கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச்

சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா

சிந்தனைக் கும்அரியாய் எங்கள் முன்வந்து

ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்

எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே


6. பப்பற வீட்டிருந்து உணரும்நின் அடியார்

பந்தனை வந்தறுத் தார் அவர்பலரும்

மைப்புறு கண்ணியர் மானுடத் தியல்பின்

வணங்குகின்றார் அணங் கின்மண வாளா

செப்புறு கமலங்கண் மலரும்தண் வயல்சூழ்

திருப்பெருந் துறையுறை சிவபெருமானே

இப்பிறப்பு அறுத்துஎமை ஆண்டருள் புரியும்

எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே


7. அதுபழச் சுவையென அமுதென அறிதற்கு

அரிதென எளிதென அமரரும் அறியார்

இதுஅவன் திருவுரு இவன்அவன் எனவே

எங்களை ஆண்டுகொண்டு இங்கெழுந் தருளும்

மதுவளர் பொழில்திரு உத்திர கோச

மங்கையுள்ளாய்திருப் பெருந்துறை மன்னா

எதுஎமைப் பணிகொளு மாறது கேட்போம்

எம்பெருமான் பள்ளி யெழுந்தருளாயே


8. முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய்

மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார்

பந்தணை விரலியும் நீயும்நின்னடியார்

பழங்குடில் தொறும்எழுந் தருளிய பரனே

செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித்

திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி

அந்தணன் ஆவதும் காட்டிவந் தாண்டாய்

ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே


9. விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா

விழுப்பொரு ளேயுன தொழுப்படி யோங்கள்

மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே

வண்திருப் பெருந்துறை யாய்வழி யடியோம்

கண்ணகத் தேநின்று களிதரு தேனே

கடலமு தேகரும் பேவிரும் படியார்

எண்ணகத் தாய்உல குக்குயி ரானாய்

எம்பெருமான்பள்ளி எழுந்தருளாயே


10. புவனியில் போய்ப்பிற வாமையில் நாள்நாம்

போக்குகின் றோம்அவ மேஇந்தப்பூமி

சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்

திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம்

அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்

படவும்நின் அலர்ந்த மெய்க்கருணையும் நீயும்

அவனியில் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்

ஆரமு தேபள்ளி யெழுந்தருளாயே!




பொருள்

1

உயிர்களுக்கு முதல்வன் நீ, எங்கள் வாழ்வுக்கும் முதல்வன் நீ. உன்னை மலர்களால் அர்ச்சித்து, உன் திருமுகத்தில் காண்கின்ற அந்த அழகிய புன் முறுவலைப் பார்த்து மகிழ்ந்து வணங்குகிறோம். சேற்றில் பூத்த செந்தாமரை மலர்களைக் கொண்ட குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் உறையும் சிவபெருமானே! நந்திக்கொடியை உடையவனே! என்னையும் ஆட் கொண்டவனே! என் வாழ்வின் முதல் பொருளே! பொழுது புலர்ந்து விட்டது. உனது பூப்போன்ற திருவடிகளில் அவற்றுக்கு பொருத்தமான மலர்களைத் தூவி வழிபடும்போது, உன்னுடைய திருமுகத்தில் எமக்கு அருள் புரிய வேண்டுமென்று மலர்கின்ற அழகிய புன்முறுவலைக் கண்டு மகிழ்ந்து, உன்னடிகளைத் தொழுகின்றோம். எம்பெருமானே! பள்ளி எழுந்தருள்வாயே!

2

திருப்பெருந்துறையில் உறைந்துள்ள சிவபெருமானே, சூரியனின் தேரோட்டியான அருணன் இந்திர தேவனின் திசையாகிய கிழக்குப் பகுதிக்குச் சென்று விட்டான். ஆதவன் உதயமானதால் புற உலகில் உள்ள இருளானது மெல்ல மெல்ல நீங்கி ஒளி வெள்ளம் எங்கும் பரவுகிறது. அதுபோல இறைவனே, உயிர்களின் அறியாமை என்னும் அக இருளைப் போக்குவதற்காக ஞான ஒளியை வழங்கும் வண்ணம் உன்னுடைய மலர் போன்ற முகத்தில் உள்ள கருணைக் கண்கள் மெல்ல மெல்ல திறக்கின்றன.

சூரியன் உதிக்கும்போது மலரும் தாமரை மலர்களில் உள்ள தேனை உண்டு ரீங்காரம் செய்யும் வண்டுகளைப் போல, உன்னுடைய கண்களிலிருந்து வழியும் கருணைத் தேனை உண்டு அடியவர்கள், உன்னுடைய புகழை இன்பத்தோடு பாடி ரீங்காரம் செய்கின்றனர். ஆனந்தமாகிய அருட்செல்வத்தை வாரி வழங்கும் மலையே, கடல் போன்ற நிலைத்த இன்பமாகிய வீடுபேற்றினை உடையவனே பள்ளியில் இருந்து எழுந்தருள்வாயாக.


3

திருப்பெருந்துறையில் உறைந்துள்ள சிவபெருமானே! காட்டில் வாழும் குயிலும், வீட்டில் வளரும் சேவலும் மற்றும் மற்ற சிறுபறவைகளும் சூரியனின் விடியலைத் தங்களின் குரலால் உணர்த்துகின்றன. கோவில்களில் சங்க நாதம் கேட்கிறது.

விடியற்பொழுதில் சூரிய ஒளியானது அதிகாலையில் உள்ள நட்சத்திரங்களின் ஒளியை தன்னுள் இணைத்துக் கொள்கிறது. அதுபோலத் தேவர்களுக்கு எல்லாம் தேவனாகிய மகாதேவனே, உன்னுடன் அடியவர்களாகிய எங்களை உன்னுடன் இணைத்துக் கொள்ளவதற்கு ஏதுவாக உன்னுடைய கழல்கள் அணிந்த திருவடிகளை எங்களுக்கு அருள்வாயாக.

தேவர்கள் உள்ளிட்ட மற்றவர்களால் எளிதில் காணப்பதற்கு அரியவனே, உன்னுடைய அடியவர்களின் மீது கருணை கொண்டு எளிமையாகக் காட்சி அளிப்பவனே பள்ளியில் இருந்து எழுந்தருள்வாயாக. 

4

திருப்பெருந்துறையில் நிறைந்துள்ள சிவபெருமானே, உன் அருளினை வேண்டி அடியவர்களில் சிலர் இனிமையான இசையினைத் தரும் வீணையை மீட்டியும், யாழினை இசைத்துக் கொண்டிருக்கின்றனர். மற்றும் சிலரோ ரிக் முதலிய வேதங்களைப் பாடியும், தோத்திரம் எனப்படும் தமிழ்ப்பாக்களைப் பாடியும் கொண்டிருக்கின்றனர். வேறு சிலர் மலர்களால் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ள மாலைகளை கைகளில் கொண்டும் உள்ளனர்.

சில அடியவர்கள் தலைவணங்கி தொழும், பலர் அன்பு மேலீட்டால் அழுதும், மெய்மறந்து துவண்டும் காணப்படுகின்றனர். வேறும் சிலர் தலையின் மீது கைகளைக் கூப்பி அஞ்சலி செய்கின்றனர். இவ்வாறு உன் அடியவர்கள் பலரும் பல்வேறு நிலைகளில் காணப்படுகின்றனர். பல்வேறு நிலைகளில் இருக்கும் அடியர்களுக்கும், சிறியேனாகிய எனக்கும் உன் அருளை வழங்குவதற்காக பள்ளியில் இருந்து எழுந்தருள வேண்டும்.

5

குளிர்ச்சியான வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் அரசனே, நீ நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் உள்ளிட்ட பஞ்சபூதங்களிலும் நிலைத்திருப்பதாக ஞானியர்கள் கூறுகின்றனர். நீ பிறப்பு, இறப்புக்களைக் கடந்து நிலையாவன் என்று இசைப்பாடல்களால் பாடுகின்றனர், ஆடகின்றனர். ஆனால் உன்னை நேரே கண்டு அறிந்தவர்களை நாங்கள் காதால் கேட்டு அறிந்திலோம்.

நீ உன்னுடைய அடியர்களுக்கு எளியவனாகவும், ஏனையோருக்கு அரியவனாகவும் நிற்கின்றாய். எங்கள் குற்றங்களை எல்லாம் நீக்க எங்கள் முன்னே வந்து திருக்காட்சி தந்து அருள்கின்ற எம்பெருமானே, பள்ளியிலிருந்து எழுந்தருள்வாயாக.

6

பிறவி வேரை அறுத்து புவியில் மீண்டும் பிறவாமல் காத்தருள வேண்டுவதாக இப்பாடல் கூறுகிறது. உமையம்மையின் மணவாளனே, சிவந்த தாமரை மலர்கள் சூழ குளிர்ச்சியான வயல்கள் நிறைந்த திருப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ள சிவபெருமானே!

பரபரப்பை அறவே விட்டு மனதின் உட்காட்சியில் உன்னை கண்டு உணரும் மெய்ஞானியர் பலரும், இந்த மண்ணுலகிற்கு வந்து பாசக்கட்டுகளை அறுத்தவர் பலரும், கண்களில் மையைப் பூசிய பெண்களும் உன்னைத் தலைவனாகக் கொண்டு வணங்குகின்றனர்.

எங்களுடைய இந்தப் பிறவியின் வேரை அறுத்து, மீண்டும் பிறவாமை நிலையை அருளுபவனே! பள்ளியிலிருந்து எழுந்தருள்வாயாக.

7

தேன் சிந்தும் மலர்களை உடைய சோலைகள் சூழ்ந்த, திருஉத்திர கோச மங்கை என்னும் தலத்தில் எழுந்திருக்கும் இறைவனே, திருப்பெருந்துறையின் அரசனே!

சிவானந்த அனுபவம் பழத்தினைப் போன்று இனிப்பாகவும், அமுதம் போன்று தெவிட்டாததாகவும், அடியவர்களுக்கு எளிதாகவும், ஏனையோருக்கு அரிதாகவும் இருப்பதை, அறிவில் சிறந்த தேவர்களாலும் வரையறுத்து கூற இயலவில்லை.

இவ்வுலகத்தில் இப்பிறப்பிலே வந்து அமைந்ததாகிய உடலாகிய இது சிவபெருமானது திருமேனியாகத் திகழுமாறும், இவ்வுடம்பில் விளங்கும் உயிராகிய இவன் அவனாகிய சிவமாக விளங்குமாறும் அருளி நின்று எங்களை ஆட்கொண்டருள்வாயாக.

இறைவா, நீ எங்களை ஏவல் கொள்ளும் முறைமை எது? அந்த முறைமையைக் கேட்டு அவ்வாறே ஒழுகுவோம். எம் பெருமானே, பள்ளியிலிருந்து எழுந்து அருள்வாயாக.

அடியவர்கள் தம்தம் உடலினை, இறைவன் கோயில் கொண்டு உறையும் ஆலயமாக அமைத்துக் கொண்டால், இறைவன் திண்ணமாக அவ்வுடலில் எழுந்தருளுவான் என்பதை இப்பாடல் உணர்த்துகிறது.

8

உலகில் உள்ள எல்லாவற்றிற்கும் முற்பட்டவனே, முதலும், நடுவும், முடிவும் ஆனவனே, படைப்பின் கடவுள் பிரம்மன், காத்தல் கடவுள் திருமால், அழித்தல் கடவுள் உருத்திரன் ஆகிய மூவரும் உன்னை அறிய முடிந்தவர் அல்லர். வேறு யார் அறிவர்?

இத்தகைய தன்மையை உடைய நீ, உன்னுடைய அடியவர்கள் எளியவர்களாயினும், அவர்களின் இல்லங்களாகிய உள்ளங்களில் வந்து, அணைகின்ற விரல்களை உடைய உமையம்மையோடு எழுந்தருளுகின்றாய்.

பரம்பொருளே, சிவந்த தழல் போன்ற உன் திருமேனிக் காட்சி தந்து, திருப்பெருந்துறையில் நீ அமர்ந்த திருக்கோயிலையும் காட்டி, என்னுடைய குருமூர்த்தியாக அந்தண வேடத்தையும் காட்டி, வலிய வந்து என்னை அடியவனாக ஏற்றுக் கொண்டாய். திகட்டாத முக்தி இன்பத்தின் வடிவினனே, பள்ளி எழுந்தருள்வாயாக.

9

வானுலகில் உள்ள தேவர்களாலும் நெருங்க முடியாத மேலான மெய்ப்பொருளே! உன்னுடைய அடியவர்கள் எளியவர்களாயினும் அவர்களுக்காக இந்த மண்ணுலகுக்கு வந்து வாழச் செய்தவனே!

வளம் நிறைந்த திருப்பெருந்துறையில் அமர்ந்தவனே. பரம்பரையாக உனக்கு தொண்டு செய்யும் அடியவர்களாகிய எங்களின் கண்களுக்கு, காணும் பொருளில் எல்லாம் நின் வடிவம் காட்டிக் களிப்பைத் தருகின்ற தித்திக்கின்ற தேனே!

பாற்கடலில் தோன்றிய அமுதமே! நெஞ்சில் இனிக்கும் கரும்பே! அன்பு செய்யும் தொண்டர்களின் எண்ணத்துள் நிறைந்தவனே! உலகம் அனைத்துக்கும் உயிரானவனே! எம்பெருமானே, பள்ளியிலிருந்து எழுந்து அருள்வாயாக!

10

இந்த மண்ணுலகம் சிவபெருமான் வழியாக வீடுபேறு கொள்கின்றது. அப்படிப்பட்ட இப்பூவுலகில் பிறவாமல் நாம் நாட்களை வீணாகக் கழித்துக்கொண்டிருக்கிறோம் என்று திருமால் விருப்பப்பட்டுப் பிறக்குமாறும், பிரம்மன் ஆசைப்படுமாறும், திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் பெருமானே! உம்முடைய மிக மலர்ந்த மெய்க் கருணையுடன் நீங்கள், இவ்வுலகில் வந்து எம்மை ஆட்கொள்ள வல்லவர்! அத்தகைய விருப்பம் தரும் அமுதமே ! பள்ளி எழுந்தருள்க! என்று பாடுகிறார் மாணிக்க வாசகர்.






Comments

Popular posts from this blog

UGC NET TAMIL - TNPSC தமிழ் இலக்கிய வரலாறு தொடர்பான விரிவான வினாக்கள்

பல்லவர் கால இலக்கியங்கள் - பக்தி இலக்கியக் குறிப்புகள்

UGC Tamil TNPSC Tamil - பக்தி இலக்கிய வினாக்கள்