இஸ்லாமிய இலக்கிய வரலாறு
இஸ்லாமியர்களின் தமிழ்த்தொண்டு
முன்னுரை
இஸ்லாமிய நாடுகளோடு தமிழகத்திற்கு இரண்டாயிரம் வருட வணிகத்தொடர்பு உண்டெனினும், மாலிக்காபூரின் படையெடுப்பிற்குப் பிறகுதான் தமிழகத்தில் இஸ்லாமியம் பரவத் தொடங்கியது. பலர் இஸ்லாமிய மதத்திற்கு மாறத் தொடங்கினர். அவர்கள் மதக் கருத்துகளையும் மதம் தொடர்பான செய்திகளையும் தமிழில் கூற முனைந்தனர். இதற்கு தமிழ் இலக்கியத்தைப் பயன்படுத்திக் கொண்டனர்.
இஸ்லாமியர் வருகையால் தமிழுக்குச் சில புதிய இலக்கிய வரவுகள் கிடைத்தன. அவற்றுள் குறிப்பிட்டுச் சொல்லத் தக்கவை நொண்டி நாடகம், படைப்போர், முனஜாத்து, கிஸ்ஸா, மசலா, நாமா முதலியனவாகும். நொண்டி நாடகத்துள், திருக்கச்சூர் நொண்டி நாடகம் குறிப்பிடத்தக்கது. கதைத் தலைவன் திருட்டு, காமம் முதலிய கெட்ட வழிகளில் சென்று அதற்குத் தண்டனையாகத் தன் கால்களை இழந்து நொண்டியான பிறகு, தான் செய்த தவறுகளுக்கு வருந்தி மேல்நிலை அடைவதாகக் காட்டுவதே நொண்டி நாடகம் என்பதன் பொது அமைப்பாகும். இஸ்லாமியப் புலவர்கள் தமிழிற்குச் செய்த தொண்டு பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
உமறுப்புலவர் (கி.பி.1642 - 1703)
உமறுப்புலவர் தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரத்தைச் சேர்ந்தவர். இயற்பெயர் உமறு கத்தாப். உமறுப் புலவரின் ஆசான் கடிகை முத்துப் புலவர் ஆவார். வடநாட்டுப் புலவர் வாலை வாருதியை எட்டையபுரம் அவைக்களத்தில் தன் புலமையால் வென்றார்.
வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளின்படி சீறாப்புராணத்தைப் பாடினார். நூல் முற்றிலும் நிறைவடையும் முன்னரே சீதக்காதி இறந்துவிட்டார். பின் அபும்காசிம் என்ற வள்ளலின் உதவியால் சீறாப்புராணம் நிறைவு பெற்றது. உமறுப்புலவர் அபுல்காசீம் அவர்களை நூலின் பல இடங்களில் நினைவு கூர்ந்துப் போற்றுகிறார்.
இவரை ஆதரித்த மற்றொருவர் அபுல்காசிம் மரைக்காயர். இவர், முதுமொழி மாலை, சீதக்காதி திருமண வாழ்த்து ஆகிய நூல்களையும் இயற்றியுள்ளார்.
காசிம்புலவர்
இவர் காயல்பட்டினம் என்ற ஊரைச் சார்ந்தவர்இவர் காயல்பட்டினம் என்ற ஊரைச் சார்ந்தவர்; திருவடிக் கவிராயரிடம் தமிழ் கற்றவர். அருணகிரிநாதரின் திருப்புகழில் மிகவும் ஈடுபட்டவர். நபிகள் நாயகம் ‘பரும்’ என அடியெடுத்துக் கொடுக்க அவர் மீது திருப்புகழ் பாடியுள்ளார். அருணகிரிநாதர் பாடியனவோ என ஐயுறும்படி காசிம் புலவரின் திருப்புகழ் அமைந்துள்ளது. சவ்வாதுப் புலவர் இவரை மதுரகவி என்று பாராட்டியுள்ளார். காலம் கி.பி.17ஆம் நூற்றாண்டு.
சவ்வாதுப் புலவர்
இவர் இளையான்குடி பகுதியைச் சார்ந்தவர். இரகுநாத சேதுபதியின் அவைக்களப் புலவராக இருந்தவர். வசைபாடுவதில் காளமேகப் புலவரைப் போன்று இவர் சொல்லால் சபித்துவிடும் ஆற்றல் கொண்டவர் என்பர். நாகைக் கலம்பகம், மதீனத்தந்தாதி, முகைதீன் ஆண்டவர் பிள்ளைத்தமிழ் ஆகியன இவர் பாடிய நூல்கள் ஆகும். காலம் கி.பி.17ஆம் நூற்றாண்டு.
வண்ணக்களஞ்சியப் புலவர்
நாகூர் பகுதியைச் சார்ந்தவர். இயற்பெயர் அமீது இப்ராஹீம். வண்ணப்பாக்களைப் பாடியதால் வண்ணக் களஞ்சியப் புலவர் என அழைத்து மகிழ்ந்தனர். இவர் இராமநாதபுர மாவட்டம் மீசல் என்ற ஊரில் குடியமர்ந்து வாழ்ந்தார் என்பர். இவர் கலைமான் நபியின் கதையைக் கூறும் இசை நாயகம் என்ற காப்பியத்தை 2,240 பாக்களால் இயற்றியுள்ளார். தீன் விளக்கம் என்ற புராணமும் இவர் இயற்றியதே.
குணங்குடி மஸ்தான் சாகிபு (1788-1885)
குணங்குடியைச் சார்ந்தவர். சுல்தான் அப்துல் காதிரு என்ற இயற்பெயருடையவர். இளமை முதல் துறவு பூண்டு வாழ்ந்தவர். மதுரை, காரைக்கால், சென்னை முதலிய ஊர்களில் ஞானம்பெற்று வாழ்ந்தவர். தாயுமானவர் பாடல்களில் பெரிதும் ஈடுபட்டு அவரது பராபரக்கண்ணிப் பாடல்களைப் போலவே, இஸ்லாமியப் பாடல்கள் புனைந்துள்ளார். இவரது பாடல்களைப் பண்டாரங்கள் நாடெங்கும் பாடித் திரிந்தது உண்டு. திருத்தணிகை சரவணப் பெருமாளையர் இவர் மீது நான்மணிமாலை பாடியுள்ளது இவரது பெருமையை உணர்த்தும். ஐயாசாமி முதலியார் குணங்குடியார் பதிற்றுப்பத்தந்தாதி பாடியிருப்பதும் இவரது பெருமைக்குச் சான்று தரும்.
இவர் தாயுமானவர் பாடல்களில் பெரிதும் ஈடுபட்டு அப்பாடல்களைப் போலவே தம் பாடல்களைப் பாடினார். குருநிலை, தவநிலை, துறவுநிலை, நியமநிலை, காட்சிநிலை, தியனநிலை, சமாதிநிலை முதலியன இவர் பாடியன. பராபரக்கண்ணி, எக்காலக்கண்ணி, மனோன்மணிக்கண்ணி, நந்தீஸ்வரக்கண்ணி முதலிய இவருடைய பாடல்களாகும்.
செய்குத் தம்பி பாவலர்
நாகர்கோவிலை அடுத்த இலங்கடை பகுதியைச் சார்ந்தவர். இவர் ஒரு சதாவதானி; ஒரே சமயத்தில் நூறு செய்திகளை உள்வாங்கி விடையளிக்கவல்ல நினைவாற்றலுடையவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த இணையற்ற தமிழ்ப்புலவர்.
யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலரும் கதிரை வேற்பிள்ளையும், வடலூர் வள்ளலாரின் திருவருட்பாவை மருட்பா எனக் கூறிப் போராடிய காலத்தில், அஃது அருட்பாவே என வாதிட்டு வள்ளலாரின் பெருமையை நிலைநாட்டியவர். திருநாகூர்த் திரிபந்தாதி, திருகோட்டாற்றுப் பதிற்றுப்பத்து, நாயகமான்மிய மஞ்சரி, நீதிவெண்பா, அழகப்பக் கோவை, ஷம்சுத்தாடீசம் கோவை என்பன இவர் இயற்றியன.
சையது முகையதீன் கவிராயர்
கோட்டாறு இவருடைய சொந்த ஊர். இவரும் திருப்புகழ் சந்தத்தில் பாடல்கள் புனைவதில் வல்லவர். முகைதீன் பிள்ளைத்தமிழ், மாணிக்கமாலை முதலியன இவர் இயற்றியுள்ள நூல்களாகும்.
முடிவுரை
இவர்களைத் தவிர பிச்சை இப்ராஹிம் புலிவரின் திருமதீனத்தந்தாதியும் தக்கலை பீர் முகம்மது சாகிபின் ஞானமணிமாலை, ஞானப் புகழ்ச்சி, ஞானக்குறம், ஞானரத்தினக் குறவஞ்சி, ஞானப்பாட்டு ஆகிய நூல்களும் குலாம் காதிறு நாவலரின் நாகூர்க்கலம்பகம், நாகூர்ப் புராணமும் குறிப்பிடத்தக்கன.
Comments
Post a Comment