திருக்குறள் காலமறிதல்,சுற்றந்தழால்
மனிதன் பேண வேண்டிய ஆளுமைப் பண்புகளுள் முதன்மையானது காலமறிதல் ஆகும். செயலுக்கு முன் காலத்தை அறிந்து கொள்ளுதல் எவ்வளவு வலிமை, ஆற்றல், திறம் படைத்தவரானாலும் காலமறிந்து ஒரு காரியம் செய்யாவிட்டால் பயன்படாது. இது போர்த்தொழிலுக்கு மட்டுமன்றிப் பொதுவான வாழ்வுக்கும் கருதப்பட வேண்டியதாகும்.
ஆடிப்பட்டம் தேடிவிதை,
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்' என்பன காலமறிதல் குறித்த பொன்மொழிகள். காலம் கருதாமல் மேற்கொள்ளப்படும் எந்த முயற்சிக்கும் வெற்றி வாய்ப்பு மிகக் குறைவு. காலம் அறிதல் என்பது செயலுக்கேற்ற காலத்தை உணர்தலைக் குறிப்பது. மாறிக்கொண்டேவரும் காலச் சூழ்நிலைகளுக்கேற்ப செயல் மேற்கொள்ள வேண்டும் என்பதைச் சொல்லும் அதிகாரம்.
செய்வதற்குரிய காலம் அறிந்து செய்து முடித்தற்கான கருவிகளுடன் செய்பவர்க்கு செய்தற்கரிய செயல்களில்லை என இவ்வதிகாரம் கூறுகிறது.
காலப்பொழுதினால் பெறும் வெற்றி,காலமறிதலால் வரும் பயன், காலம் வாய்க்காவிட்டால் பொறுத்திருத்தல், பொறுத்திருப்பதால் வரும் சிறப்பு, பொறுத்திருக்கும் பருவத்தில் தன் நோக்கம், உணர்ச்சிகள் ஆகியவற்றை வெளிக்காட்டாமை, காலம் கூடியபொழுது வினரந்து செயல்படுதல், அச்செயல்முறை விளக்கம் இவற்றைக் காலமறிதல் அதிகாரம் விளக்குகிறது.
காலமறிதல் - குறள் கூறும் கருத்துகள்:
1. வலிய ஆந்தையைக் காகம் பகலில் வெல்லமுடியும்; ஆட்சியாளர்க்கு மாறுபாடு கொண்டோரை வெல்வதற்கான காலம் உணர்தல் இன்றியமையாதது எனச் சொல்கிறது.
2. பருவத்தோடு இயைந்து இருந்தால் மேற்கொண்ட முயற்சி தொடர் வெற்றி கண்டு செல்வம் நீங்காமல் தங்கும் என்கிறது.
3. தகுந்த உத்தியுடன் பொருந்திய காலத்தில் செய்தால் முடியாத செயல் என்று ஒன்றும் இல்லை எனச் சொல்வது.
4. எக்காலத்தில் எவ்விடத்தில் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு ஒரு குறிக்கோளைத் தொடங்கினால் அது எதுவானாலும் தவறாமல் நிறைவேறும் எனக் கூறுகிறது.
5. காலம் வரும்வரை காத்திருந்து பதற்றமின்றி தெளிந்த மனத்துடன் செயல்பட்டால் உலகை வெல்லலாம் எனச் சொல்கிறது.
6. பதுங்கி இருப்பது பருவம் பார்த்துப் பாய்வதற்காகவே என்கிறது.
7. சீண்டிப் பார்ப்போர் மீது அங்கேயே சினம் கொள்ளமால் அவர்களை வெல்லும் காலம் கருதிக் காத்திருப்பர் கூர்த்த அறிவுத்திறன் கொண்டவர் என்கிறது.
8. இன்று பணியச் செய்து நிமிர்ந்து செல்லும் பகைவன் காலம் மாறும்போது தலை குப்புறக் கவிழ்வான் என்பதைச் சொல்வது.
9. கிடைக்காத காலம் வாய்த்தபொழுது செய்யவேண்டிய அரிய செயல்களைச் செய்து முடித்துக் கொள்ள அறிவுறுத்துவது.
10. காலம் கூடியபொழுது எப்படி விரைந்து தவறில்லாமல் செயலாற்ற வேண்டும் எனச் சொல்வது.
சுற்றம் என்பது சூழ்ந்திருத்தல் ஆகும். சுற்றந்தழாலாவது ஒருவர் தன் சுற்றத்தாரைப் பேணிக் கொண்டு தன்னிடத்திலிருந்து நீங்காமல் இருக்கச் செய்தலைச் சொல்வது. பிறப்பு(உறவு)ச்சுற்றம், இனச்சுற்றம், நட்புச் சுற்றம், தொழில்முறை(வினை)ச் சுற்றம் எனப் பல சுற்றங்கள் உண்டு. இவற்றோடு, பொதுவாழ்வில் தலைவன் பழகுகின்ற அரசியல் சுற்றம் பற்றிக் கூறுதல். இவ் அதிகாரக் கருத்துக்கள் அரசனுக்கு மட்டுமன்றி ஏனையோருக்கும் பொருந்தும்.
சுற்றந்தழால் என்பதற்குச் சுற்றம் தழுவுதல் அல்லது ஆதரித்தல் என்பது பொருள். சுற்றத்தார் இயல்பு, அவரைப் பேணும் விதம், பேணுவதன் பயன், பிரிந்த சுற்றத்தை ஏற்றுக் கொள்ளுகிற முறைமை போன்றவற்றை இவ்வதிகாரம் விளக்குகிறது.
சுற்றம் ஆக்கம் தரும். பக்கபலமாக இருக்கும். ஒருவரது வாழ்வின் உள்வட்டத்தில் இருந்துகொண்டு அவரது செயல்பாட்டில் பங்கு கொள்வோர் அனைவரும் சுற்றமே. தமக்குள் கொள்ளல் கொடுத்தல் உறவு இல்லாமலிருந்தும், இவர்கள் தலைவனுக்கு உண்மையாகவும் பாதுகாவலாகவும் விளங்குவர். இவர்கள் தலைவனது செல்வம், செல்வாக்கு நீங்கிய காலத்திலும் அவனிடம் பழைமை பாராட்டுபவர்கள்.
சுற்றந்தழால் என்பது ஒருவர் சுற்றத்தாரை அணைத்துச் செல்வதும், சுற்றம் தன்னைத் தழுவ ஒருவர் நடந்து கொள்வதும் ஆகும். உள்வட்டத்திலிருந்து சுற்றம் வெளியேறாமல் தடுப்பதற்கான ஒரு அரசியல் தந்திரமாகவும் சுற்றம்தழுவுதல் அதாவது சுற்றம்தாங்குதல் கையாளப்பெறும்.
'சுற்றம் சூழ வாழ்தல் ஒருகலை. சுற்றம் பேணி வாழ்தலுக்கு இடையறாத அன்பு, நினைவில் வைத்துப் பாராட்டுதல், அன்பு காட்டுதல், ஒத்துப் போதல், குற்றம் பாராட்டாது இருத்தல் ஆகியன தேவையானது. நாடாள்வோருக்கும் சரி, தனி ஒருவராய் வெற்றி பொருந்திய வாழ்க்கை நடத்த விரும்புவோருக்கும்சரி சுற்றம் தேவை' என்று குன்றக்குடி அடிகளார் கூறுகிறார்
ஒருவர் நிறையச் சுற்றம் சூழ இருந்து வாழ்வதை வாழ்வு என்கிறார் வள்ளுவர் இக்கருத்துக்கள் நிறைந்ததாக இவ்வதிகாரம் அமைந்துள்ளது.
சுற்றந்தழால் குறள் விளக்கம்:
1. செல்வம், செல்வாக்கு இழந்த நிலையிலும் முன்புபோலவே அன்புள்ளம் கொண்டு பழகுதல் சுற்றத்தாரிடம் மட்டுமே உண்டு என்கிறது.
2. அன்பு குறையாத சுற்றம் கிடைக்குமானால், ஒழியாது மேன்மேலும் வளரும் செல்வங்கள் பலவற்றையும் அது கொடுக்கும் எனச் சொல்கிறது.
3. சுற்றத்தோடு மனம் கலந்து உறவாடாதவன் வாழ்க்கை கரையில்லாத குளத்தில் நீர் 'நிறைந்தால்' போல் எப்பொழுதும் வெறுமையாகவே இருக்கும் எனச் சொல்வது.
4. செல்வம் பெற்றதனால் ஒருவன் பெறும் பயனாவது, சுற்றத்தாரால் தான் சூழப்படும்படி அவர்களைத் தழுவி நடந்து கொள்ளுதல் என்கிறது.
5. கொடுத்துதவும் தன்மை கொண்டவனாயும் இனியசொல் பேசுபவனாகவும் ஒருவன் வாழ்ந்தால், ஒன்றோடு ஒன்று தொடர்ந்து வருகிற சுற்றக் கிளைகளால் அவன் சூழ்ந்து கொள்ளப்படுவான் என்பதைக் கூறுவது.
6. அள்ளி வழங்குவான் சிறுதும் சினம் கொள்ளான் என்றால் அவனைவிட சுற்றத்தினரை உடையார் உலகத்தில் வேறு யாருமில்லை என்கிறது.
7. காக்கை தன் சுற்றத்தை அழைத்து உண்ணும்; அத்தன்மை கொண்டவர்க்கே சுற்றப் பெருக்கம் உண்டாகும் என்கிறது.
8. தகுதிபார்த்துச் சிறப்பு செய்பவனை அச்சிறப்பு பெறுவதற்காக பல சுற்றத்தார் அவனை விடாது அவனுடன் தங்கி இருப்பர் என்பதைச் சொல்வது.
9. தம்மவராக இருந்து தம்மை நீங்கிச் சென்ற சுற்றத்தார், காரணம் இல்லாமலே மீளவும் வரும்போது அவர்மீது விரும்பாமை உண்டாகும் எனக் கூறுவது.
10. இடம்பெயர்ந்து தன்னைவிட்டுச் சென்றவன் மீண்டும் ஒரு நோக்கம் கருதி வந்தால் தலைவன் அவன் தன்மையைப் பலபடியும் ஆராய்ந்து ஏற்றுக் கொள்வதா வேண்டாமா என்று முடிவெடுப்பான் என்கிறது திருக்குறள்.
கண்ணோட்டம்
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம். இரக்கப்படுதலும் தண்டிக்கவேண்டிய சமயங்களில் சிறிது கருணை காட்டுதலும் இரக்கவுணர்வும் தயவு செய்தலும் கண்ணோட்டம் ஆகும்.
கண்ணோட்டம் என்பது பிறரது துயரம்கண்டு இரங்கும் பண்பையும் பிறர் குற்றத்தை மன்னிக்கும் பெருந்தன்மையையும் குறிப்பதாகும். காணப்பட்டார் மேல் கண் ஓடியவிடத்து இவை உண்டாவதால் கண்ணோட்டம் எனப் பெயர் ஆயிற்று. மனித நேயத்தோடும் நாடு ஆளப்படவேண்டும் என்பதை விளக்குகிறது. இவ்வதிகாரம் நாடாள்வோர்க்கு மட்டுமன்றி அனைத்து மக்களுக்கும் பொருந்துவதாகும்.
கண்ணோட்டம் - மையக்கரு:
கண்ணோட்டம் என்பது அன்பும், இரக்கமும் கொண்ட கண்ணின், உயிரோடு பிணைந்த, பண்பைக் குறிக்கும். துன்புற்ற ஒருவரைக் காணும்போது மனம் இளகி அவர்கள் துன்பத்தைக் களைதலையும் குற்றஞ் செய்த ஒருவர்பால் இயல்பாக இரங்கிக் குற்றத்தைப் பொறுத்தலையும், கண்ணோட்டம் எனக் கொள்வர். இப் பண்பு தனி மனிதருக்கு இன்றியமையாதது. சமுதாய அளவிலும் தேவையான ஒன்றாகும். சமுதாய வாழ்வில் நாடாள்வோன் முதல் அனைவரும் கண்ணின் வழியாக அன்பைச் செலுத்தி வாழவேண்டும். மக்கள் குற்றத்தின் நீங்கியும் குற்றத்தை நீக்கியும் வாழவேண்டும் என்னும் முயற்சியுடையோராகவே இருப்பர். முயற்சி எவ்வளவினதாயினும் குற்றம்நிகழ்தல் கூடும். அவ்வாறு நேர்ந்துவிட்டால் மன்னிக்கத்தக்கவற்றை மன்னிக்க வேண்டும் பண்பு அனைவர்க்கும் வேண்டும் என்பதை வற்புறுத்துவதே கண்ணோட்டமாகும்.
கண்ணோட்டம் - குறள் கூறும் கருத்துகள்:
1. இரக்கம் என்று சொல்லப்படுகின்ற பேரழகு இருப்பதனால் இவ்வுலகம் இருக்கின்றது என்கிறது.
2. உலக இயக்கம் கண்ணோட்டத்தில் நிகழ்கிறது; அப்பண்பு இல்லாதார் உள்ளமை நிலத்திற்குச் சுமையாகும் எனக் கூறுவது.
3. பாட்டுக்குப் பொருந்தாவிடில் இசை என்று சொல்லோம்; இரக்கமில்லாத இடத்து கண் என்னத்துக்கு? எனக் கேட்கிறது குறள்.
4. இரக்கத்தின் அளவறிந்து ஓடாத கண்கள் முகத்தில் உள்ளனபோன்று இருப்பதன்றி வேறென்ன பயனைச் செய்யும்? என வினவுகிறது.
5. கண்ணிற்கு அணியாய் உள்ளது கண்ணோட்டம்; அது இல்லையானால் கண் புண்ணென்று கொள்ளப்படும் எனக் கூறுகிறது.
6. கண்ணிருந்தும் இரக்கம் காட்டாதவர் மண்ணோடு பொருந்திய மரத்தினை ஒப்பர் என்கிறது.
7. இரக்க உணர்வு இல்லாதவர் கண் இல்லாதவர்; கண்ணைப் பெற்றிருப்பவர் கண்ணோட்டம் இல்லாமலும் இருக்கமாட்டார்கள் என்பதைச் சொல்கிறது.
8. செயற்பாடு கெடாமல் இரக்கம் காட்ட வல்லவர்களுக்கு உரியது இவ்வுலகம் என்கிறது.
9. தண்டிக்கும் வலிமை உடையவர்க்கும், இரக்கம் காட்டிப் பொறுத்து நல்வழிப்படுத்தும் குணமே தலையாயது எனக் கூறுகிறது.
10. யாவரும் விரும்பக்கூடிய நாகரிகத்தை வேண்டுபவர் நஞ்சு ஊற்றிக் கொடுத்தலை நேரில் கண்டும் அதை உண்டு அமைதியுறுவர் என்கிறது.
Comments
Post a Comment